Notice: Function add_theme_support( 'html5' ) was called incorrectly. You need to pass an array of types. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 3.6.1.) in /home7/ilakkiyainfo/public_html/wp-includes/functions.php on line 6078
பொன் ஏட்டில் புகழ் பெற்ற புங்குடுதீவு! | ilakkiyainfo
ilakkiyainfo

பொன் ஏட்டில் புகழ் பெற்ற புங்குடுதீவு!

புகழ் மலர்ந்த நாடு புங்குடுதீவு. இதன் புகழ் இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளின் முன் பொன் ஏட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் புதை பொருளாராய்ச்சியாளர் யாழ்ப்பாண நகரின் வடகிழக்கேயுள்ள வல்லிபுரக் கோவிற் பகுதியை ஆராய்ச்சி செய்வித்தார்கள். பல புதையல்களுடன் ஓர் ஏடும் அகப்பட்டது. அது பொன் ஏடு. அதிற் பொறிக்கப்பட்ட உரையின் சாரத்தைப் பாருங்கள்.

“புங்குடுதீவில் ஒரு புத்த விகாரை இருக்கின்றது. அங்கே வாழும் மக்கள் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவர்கள். நாகரிகமும் வீரமும் ஒற்றுமையும் உடையவர்கள்.” என்பது.


இப்பொன் ஏடு இப்பொழுது கொழும்பு மாநகரிலுள்ள நூதன காட்சிச் சாலையில் இருக்கின்றது. இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளின் முன் பண்பட்ட மக்கள் புங்குடுதீவில் வாழ்ந்தனர் என்ற உண்மையை பொன் ஏட்டின் மூலம் அறிகின்றோம்.

ஆனால் இற்றைக்கு இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளின் முன்னர் தென்னிலங்கை அடர்ந்த வனமாக இருந்தது. கொடிய விலங்குகளும் இயக்கரும் அங்கே வாழ்ந்திருக்க வேண்டும்.

அப்பொழுதும் அதற்கு அப்பாலும் நாகரிகம் முதிர்ந்த தமிழ் மக்கள் வட இலங்கையில் – நமது தீவகப் பகுதியில் வாழ்ந்தார்கள். ஏன்! இலெமூரியாக் கண்டம் கடல் வாய்ப்படுமுன் நமது அருமையான சிறு தீவகம் அதன் பகுதியாய ஒரு பெருந் தமிழகமாய்க் கூட இருந்திருக்கலாம்.

அதற்குரிய சான்றுகளைத் தொடர்பான சரித்திர வாயிலாக இன்னும் மக்கள் அறியவில்லை. இங்குள்ள நில அமைப்பும் மக்களின் கலாச்சாரப் பண்பாடுகளும் தென் இந்தியாவுடன் ஒத்தனவாகவே இருக்கின்றன.

காப்பியன் வகுத்த தமிழை நமது தமிழகம் மறந்ததாயினும் இப்பொன் தமிழ்த்தீவகம் மறக்கவில்லை. ஏனைய பல நாடுகளில் வாழும் தமிழ் நண்பர்கள், ‘சிரட்டையை’ சிறட்டை என்றும் ‘முகிழைப்’ பணுவில் என்றும் ‘புகையிலையைப்’ பொயிலை என்றும் மழலை பயிலுகின்றார்கள். புங்குடுதீவு மக்கள் பண்பட்ட பழந்தமிழ்ச் சொற்களையே வழங்கி வருகின்றார்கள்.

பண்டைக்காலந் தொட்டே  வட இலங்கைத் தீவகங்கள்  மாதோட்டத்துடன் தொடர்புள்ளனவாய் இருந்தன. தமிழ் மக்களும் தமிழரசரும் இப்பகுதிகளில் நிலைபெற்றிருந்தார்கள்.

திருக்கேதீஸ்வரத்தில் வைத்தே சிங்கள வமிசத்து முதல் அரசன் விசயனுக்கும் பாண்டிய இராசகுமாரிக்கும் மணம் நடந்ததென யாழ்ப்பாண சரித்திர ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். இத்தொடர்புகள் யாவற்றையும் ஆராயுமிடத்து நமது தாயகமாகிய தீவகத்தில் மக்கள் ஆதிதொட்டு வாழ்ந்து வருதல் புலப்படுகின்றது.

சோழ சேர பாண்டிய சாம்ராச்சியங்கள் வன்மை பெற்று மரக்கலமோட்டி மாகடல் கடந்து வாணிபஞ் செய்த அந்த நாளிலும் இத்தீவக மக்கள் அவர்களுக்கு உறுதுணை புரிந்து சோறு கொடுத்து உதவினதன்றியும் அறத்தையும் தமிழையும் வளர்த்தும் வந்தனர்.

சீத்தலைச் சாத்தனார் கூறும் மணிமேகலையில் பேசப்படும் மணிபல்லவம் நயினாதீவைக் குறிக்குமென ஆராச்சியாளர் கூறுகின்றனர். அதற்கு அருகேயுள்ள ‘இரத்தினத்தீவம்’ எனப்பேசப்படும் இடம் புங்குடுதீவுதான் என்பது சிங்கள சரித்திரமூலம் உண்மையென வலுப்பெறுகின்றது.

அதாவது புத்தபகவானின் உபதேசங்களைப் பயின்று கொண்டு தொள்ளாயிரம் புத்த குருமார் புங்குடுதீவில் வாழ்ந்தார்கள். அதனால் “போதத்தீவென’ இத்தீவகம் அழைக்கப்பட்டது.

இந்தியர் இங்கே இறங்கி மாதோட்டத்திற்குத் தரைமார்க்கமாகச் செல்லும் வழக்கம் இருந்தது என்றும் சிங்கள சரித்திரம் கூறுகின்றது. இதுவரை கூறிய விஷயங்கள் யாவும் இத்தீவுடன் பண்டைய வெளிநாட்டு மக்கள் கொண்டுள்ள தொடர்பைக் காட்டுகின்றன.

இவ்வூரின் பழங்குடி தமிழ்மக்கள் தங்களுக்கு வேண்டிய உணவு, உடை ஆகியவற்றைத் தாங்களே ஆக்கினர். பிறருக்குங் கொடுத்துத் தாமும் உண்டு, உடுத்து வாழ்ந்தனர்.

ஒரு நாட்டின் உயர்ந்த நாகரிகம் அந்நாட்டில் வாழும் மக்களின் தொழில், கலை, பண்பாடு, இயற்கைவளம் ஆகியவற்றிலேயே தங்கியிருக்கின்றது. இற்றைகுப் பல நூற்றாண்டுகளுக்கு முன் மேலைத் தேசத்தினர் பருத்தியாடை அணியாது வாழ்ந்தார்கள்.

அந்நாளில் இந்நாட்டு மக்கள் பருத்தியை உண்டாக்கினார்கள். பஞ்சை எடுத்தார்கள். அதிலிருந்து நூல் உண்டாக்கி நுண்ணிய ஆடைகள் செய்து உடுத்து மகிழ்ந்து வாழ்ந்தார்கள்.

நிலத்துக்கு உரமிட்டு வளம்படுத்தி நெல்விதைத்தார்கள். குளம் தோண்டி நீர்தேக்கிவைத்து நெல் விதைத்தனர். அன்றியுஞ் சிறு தானியங்கள் செய்தனர். வைத்தியம், சோதிடம், சித்தாந்த தத்துவம் ஆகிய துறைகளில் கைதேர்ந்த பரம்பரையான எத்தனையோ குடும்பப் பெரியோர்கள் இன்றும் தமது கலைச் செல்வங்களை நாட்டுமக்கள் அநுபவிக்க வாழ்கின்றார்கள்.

ஊணழகும் உடையழகும் கொண்டு உடலழகு பார்க்காமல் உயிரழகு கொள்ள வழிகண்டிருந்தார்கள். எங்குமாகிய இறைவனை திருக்கோயில்களில் நியமித்துப் பூசித்தனர்.

இன்றும் பழந்தமிழ்க் கோயில்கள் பலவுள. கோயிலால் பேர்பெற்ற கிராமங்களூம் உள. அவற்றிலொன்று “கோயிற்காடு”. அக்கிராமம் தற்பொழுது ‘வீராமலை’ என வழங்கப்படுகின்றது. ‘வீராமலை’ என்பது வீர + அமலை – (கற்பு) வீரம் பொருந்திய அம்பாள் – கண்ணகி வந்து சேர்ந்த இடம். வீரபத்தினியின் சிலைவந்து அடைந்த பின்பு வீராமலை என வழங்கப்படுகின்றது. ‘வீராமலை’யுடன் கர்ணபரம்பரையாக ஒரு கதையும் வழங்கி வருகின்றது பாருங்கள்.

இன்றைக்கு அறுநூறு வருடங்களுக்கு முன்பு இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு பெருவேளாளனுடைய எருமை மாடுகள் வழக்காமாகாக் கிடக்கும் குளத்தில் ஒருநாள் காணப்படவில்லை.

அவற்றை ஊருக்குள் பல இடங்களிலும் தேடினார். காணப்படவில்லை. அவர் தென்கரை ஓரமாகப் பார்த்துக்கொண்டு போனார். கடலில் ஒரு கூப்பிடு தூரத்தில் எருமைகள் கிடந்தன. சந்தோஷத்துடன் ஓடிப்போனார். கரைப்பக்கமாக அவற்றைக் கொண்டு வரும் பொருட்டு அடித்து நடத்தினார். தாம் கிடந்த இடத்தையே அவை சுற்றிச் சுற்றி ஓடின.

இப்படி அவற்றைக் கரையேற்றக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவைகளின் நடுவில் ஒரு பெட்டி கிடப்பதைக் கண்டார். உடனே அதனைத் தூக்கிக் கொண்டு கரைக்குப் போனார்.

அந்த அந்தறிவுப் பிராணிகள் எல்லாம் கதறிக் கொண்டு அவர்பின்பு சென்றன. அவர் கரையில் இரண்டு கயிற்றடி தூரம்* [176 அடி] போனதும் பெட்டியை வைத்துவிட்டுத் தனது உடையை இறுக்கிக் கட்டிக் கொண்டு பின்னரும் அதனைத் தூக்கினார்.

ஆனால் அவரால் பெட்டியை அசைக்க முடியவில்லை. இந்தச் செய்தி வாய்த்தந்தி மூலம் ஒரு கணப்பொழுதில் ஊரெங்கும் பரவியது. ஊரார் பலரும் வந்து பெட்டியைத் திறந்து பார்த்தார்கள்.

அதனுள் அவர்கள் கண்டதென்ன! வீராமலை!! வீரபத்தினித் தெய்வம். ஆம்! கண்ணகியம்பாள் உருவம் இருக்கக் கண்டார்கள். அந்த அம்பாளுக்கு கோவில்கட்டிப் பூசித்தார்கள்.

ஆம்! அந்த அம்பாள் கோவிலுக்குப் போனால் உண்மையில் திருச்செந்தூரில் நிற்கின்றோம் என்ற நினைவே தோன்றும். பரந்த நீலக்கடலலை ‘வா! வா! ஏன் வந்தாய்?’ எனப்புரண்டு மோதிக் கொண்டிருக்கும். ‘வெண்மணற்கரை, இப்படிக் கொஞ்சம் இருங்கள், ஏன் கால்வலிக்க நிற்கவேண்டும்?’ என்னும், குளிர்ந்த பிராணவாயு மெத்தனத் தவழ்ந்து வந்து, நம்மை அன்புடன் அழைத்துக்கொண்டு போகும்.

தெய்வசக்தியும் இயற்கை அன்னையின் அழகும் ஒருங்கமைந்து அந்தக் கண்ணகையம்பாள் கோவில் பூலோக சுவர்க்கமென எவரையும் ஆனந்தமடையச் செய்யும். வரகவி முத்துக்குமாரப் புலவரால் (ஊரதீவு) இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளின் முன் பத்தும் பதிகமும் பாடிப் போற்றப்பட்ட தலமது.

“மணிமந்திரரூபிநீ” என்று தொடங்கும் புலவரது செய்யுள் ‘“கன்னலொடு செந்நெல் விளை புங்கைநகர் தன்னிலுறை கண்ணகைப் பெண்ணரசியே” என முடிகின்றது. இவையாவும் நம் தமிழ் மக்கள் பண்பாட்டைக் காட்டுகின்றன.

இனி, மேலை நாட்டினருள் ஒல்லாந்தரும் முதலில் நமது நாட்டில் வந்து தங்கள் மிருகபலத்தினால் இங்குள்ள மக்களையும் அடக்கி கோட்டை கட்டி வாழ்ந்தனர். இந்தத் தீவகமும் அவர்கள் சுயதேசத்தைப் போலக் கடல்வளமுடைமையினால் போக்கு வரவுக்கு வசதியாய் இருந்தது.

அவர்களின் கோட்டைகள் இருந்த இடம் *’கோட்டைக்காடென’ இன்றும் பெயர் வழங்கிக் கொண்டிருக்கின்றது. அவர்களின் கோட்டைகள் அழிந்து சிதைந்து இப்பொழுதும் இப்பொழுதும் காணப்படுகின்றன.

தற்பொழுது கோட்டைக் காட்டில் ‘மன்னியாகுளம்’ என்று சொல்லப்படும் ஓர் இடம் உண்டு. போர்த்துக்கீச ஒல்லாந்த தளபதிகள் பல இடங்களில் இருந்து வந்து மந்திராலோசனை செய்த இடமென்பர். (கோட்டைக்காடிலுள்ள சிதைந்த கோட்டையின் சுவடுகள் மேலை நாட்டினர் கட்டியதல்ல என்பதை இக்கட்டுரை எழுதிய பின், வீரமாதேவியின் ஏடுகள் மூலம் அறிந்து கொண்டார்). ‘மன்னியாகுளம்’ – ‘மன்னர்குழாம்’ என அந்த நாளில் வழங்கியதென்று முதியோர் சொல்கின்றார்கள். அவர்கள் அரசு புரிந்த காலத்தில் ஒரு நன்மையும் செய்து சென்றுள்ளார்கள். அதுதான் அவர்கள் கிறிஸ்தவ மதத்தை விட்டுச் சென்றதாகும்.

இவற்றைக் கூறுமுன்பு இநாட்டில் அன்று தொட்டு இன்றுவரையும் சைவசமயமே தழைத்தோங்கி வருகின்றது. புத்த மதத்தினர் இடையில் வந்து போனார்களே யொழிய இந்நாட்டு மக்கள் அம்மதத்தை அனுட்டிக்கவில்லை.

அதன்பின் வந்த ஆங்கிலராட்சியில் இந்நாடும் மற்றைய நாடுகளுடன் அடிமைப்பட்டிருந்தாலும் ஓரளவு நன்மையும் அடைந்திருக்கின்றது. கல்வி, சமயம், போக்குவரத்துச் சீர்திருத்தம், நீதி என்பவற்றில் ஈழத்து ஏனைய நாடுகளுடன் போட்டி போடக்கூடியதாக இருத்தலே அது.

யான் இங்கே இத்தீவகத்தின் பழம் பெருமைகளை எடுத்துக் கூற வல்லேனல்லேன். இதைச் சரித்திரப் பேராசிரியர் திரு வையாபுரிப்பிள்ளை, தமிழாராச்சித் தலைவர் சுவாமி தனிநாயக அடிகள் போன்ற பெரியார்களுக்கு விட்டுவிடுவோம். அவர்களால்தான் இந்நாட்டின் பண்பு நலனையும் மக்களின் பொற்றமிழ் நலனையும் சரித்திர நில அமைவுகளையும் நன்றாக நுணுகி ஆராய்ந்து கூறமுடியும்.

இவ்வளவு நேரமும் நம்முடன் ஈடுபட்டுக்கொண்டிருந்த எங்கள் தந்தையார் நாட்டின் நீளம் ஆறுமைல், அகலம் நான்கு மைல், கோடைத் தென்றலும் மாரி வாடையும் பெறும் நாடு.

தென்றல் தவழும் தென் சமுத்திரக்கரை ஓரத்திலே மாலை நேரத்திலே தண்டு கொண்டு தோணி தள்ளுதலே பேரின்பம். கீழைக் கடல் மதியும் மேலைக்கடல் ரவியும் நீலக் கடலலையில் உயர்வதும் தாழ்வதும் பூரணத் தினத்தில் பார்க்கும் அதிஷ்டர்களை இயற்கை என்னும் இறைவன் தனதிரு கண்களினால் அன்புடன் பார்ப்பதை ஒக்கும்.

குறிகட்டுவான்

 

மேற்குக் கடலின் ஓரத்தில் குறிகாட்டுவான் இருக்கின்றது. அதில் நின்று சப்ததீவுகளையும் பார்க்கும் பொழுது பாற்கடலில் மரகதப்பேழைகள் மிதந்து கொண்டு நம்மை நாடி வருவன போலத் தோன்றும்.

பண்டைக்கால சேர சோழ பாண்டிய வாணிபம் இன்றும் நடைபெறுகின்றதோ எனச்சிந்தனை பண்ணும் படி மகாபெரிய உருக்களும் படகுகளும் பண்டங்களை ஏற்றிப் பாயிழுத்து ஓடிவந்து மணிபல்லவத்தீவுக்கும் எங்கள் இரத்தினத்தீவுக்கும் இடையே பாயிறக்கி நிறுத்தி அவற்றிளுள்ள மரக்கலமோட்டிகள் கரையிரங்கி நல்ல நீர் மொள்ள விரைந்து செல்வர்.

அவர்களுடன் உரையாடினால் பண்டைய மன்னர் வாணிபமல்ல என்பதும், இன்றைய மக்களின் வாணிப மரக்கலங்களே என்பதும் நினைவுக்கு வரும். ஆனால் இந்தமேற்குக் கடற்பாதையின் கதை பெரிய பாரதக்கதை போன்றது.

திசையறி கருவி முதலிய நவீனசாதனங்கள் இல்லாத பண்டைக்காலத்தே இயற்கையோடு இசைந்து மரக்கலமோட்டிய பண்டையோர் தென் இந்தியக்கரை மறைய, வட இலங்கைத் தீவகங்களை தமது வெறுங்கண்ணாற் காணக்கூடியதாக இருந்தது.

அதனால் அவர்கள் பண்டை தொட்டு இன்றும் இப்பழம் பெருங் கடற்பாதையையே உபயோகித்து வருகின்றனர். வீடும் தலைவாசலும் போலப் புங்குடுதீவும் நயினைமணித்தீவும் இருப்ப அவற்றின் இடையேயுள்ள நீலமணி முற்றம் போல எங்கள் மேலைக்கடல் காட்சியளிக்கும்.

கீழைக்கடல் ஆழமான வாய்க்கால் போன்றது. யாழ்ப்பாண நகரம் போகும் இந்திய மரக்கலங்கள் எங்கள் தீவகத்தில் மேற்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மூன்று புறக்கடலிலும் ஓடியே போகவேண்டும்.

சுருங்கச் சொன்னால் எங்கள் தீவகத்தை வியாபார மரக்கலங்கள் வலம் வந்து கொண்டே எப்பொழுதும் இருக்கவேண்டும் என்பதுதான். ஈற்றில் வடகடற் புறத்தே போவோமேயானால் பச்சைப்பசேலென்ற மாணிக்கத் தீவுகளையும் மரகதத்தீவுகளையும் அவற்றினிடையே அழகான கடல் நீரோடைகளையும் காண்போம். சின்னஞ்சிறிய அந்தத் தீவுகளில் மாரிகாலம் நீர் நிறைந்திருக்கும். அதனாலேதான் அதனை மேடுறுத்தி வீதிசமைத்து வெளிநாட்டினருடன் தொடர்பு கொண்டுள்ளோம்.

எங்கள் நாட்டில் இன்று பதினையாயிரம் மக்கள் வரையில் வாழ்வு நடாத்துகின்றார்கள். தமிழ்ப்பாடசாலைகள் பதிநான்கும் ஓர் ஆங்கிலப் பாடசாலையும் உட்பட பதினைந்து பாடசாலைகள் உள்ளன.

நாட்டு மக்கள் கமத்தொழில், வாணிபத்தொழில் என்பவற்றில் ஈடுபட்டுள்ளனர். வாணிபத் தொழிலில் இவர்கள் பழம் பெருமை படைத்தவர்கள். இன்று நேற்று வாணிபத்துறையில் இறங்கவில்லை. பண்டுதொட்டே பல தேசங்களிலும் சென்று வாணிபம் நடாத்தி வருகின்றார்கள். இலங்கையில் சிறந்த நகரங்கள் எல்லாவற்றிலும் இத்தீவக மக்களின் வியாபாரத் தலங்கள் பிரபலமாக விளங்குகின்றன.

மேல் நாட்டினர் இலங்கைப்பக்கம் வருமுன்னரே அதாவது அஞ்ஞூறு ஆண்டுகட்கு முன் தென்னிலங்கையில் உள்ள நகரங்களில் இவர்கள் சென்று அந்நாட்டு மக்களுடன் அன்புபெறப் பழகி “தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்” “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும்நன்றும் பிறர்தர வாரா” என்னும் புனித மொழிக்கு உவமைபெற வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்கள் சுறுசுறுப்பும் சுயமுயற்சியும் உடையவர்கள். எவரையும் எதிர் பார்ப்பவர்கள் அல்லர். திடகாத்திரமான உடலும் அதிவிவேகமும் உடையவர்கள். அறிஞர் பெரியோர் ஆதியோரை அன்புபெற வரவேற்று வணங்குவார்கள்.

தாம் எவ்வளவு பெருமை உடையவராய் இருந்தாலும் தம்மிடம் வரும் வயது முதிர்ந்தோர்க்கு என்றும் தளர்ந்து படியும் வழக்கமுடையர். ஒற்றுமையும் நன்றி மறவாத குணமும் உடையவர்கள்.

எப்பொழுதும் தாய்நாட்டின் நலனுக்காக கல்வியையும் செல்வத்தையும் முன்னரிலும் பார்க்க முனைந்து வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் கல்விபயின்ற மக்கள் இலங்கை அரசாங்கத்தின் பல பகுதிகளிலும் இருந்து தொண்டாற்றி வருகின்றார்கள்.

இந்திய இலங்கைச் சுதந்திரப் போரிலும் இவர்கள் பங்குபற்றி உள்ளார்கள். மகாத்மா காந்தியின் ஒரு சீடராக, தம் நாட்டையும் ஆடம்பர வாழ்வையும் விடுத்து மனையுடன் சென்று காந்தீய சேவா கிராமத்தில் நாலுமுழத் துண்டுடுத்து வாழும் தேசத் தொண்டர்களும் இங்கே பிறந்து போயிருக்கிரார்கள்.

கலையே பெரிது, கடமையே பெரிது, அறிவே பெரிது, ஒழுக்கமே பெரிது என்று போதிக்கும் ஆழ்ந்த அநுபவம் உள்ள ஆசிரியர்களும் பலர் இங்கே இருக்கின்றார்கள். விருப்பு வெறுப்பற்ற தேவபூசை செய்யும் ஞானிகளும் உளர். தம்நாட்டிற்காகப் பெருங்கடல் கடந்து மலாய்நாடு சென்று பொருளும் புகழும் வளர்க்கும் வீரப்பெருமக்களும் உளர்.

ஈழநாட்டின் பல பாகங்களிலும் சென்று காடுதிருத்திச் செந்நெற் கழனிகளாக்கி வீடுங்கட்டிக் குடியேறி வாழும் வீராதிவீரர்கள் எங்கள் நாட்டினரிற் பலர் இருக்கின்றார்கள். இவர்கள் தங்கள் வருங்கால சமுதாய உயர்ச்சிக்குரிய கோட்டையை அமைக்கும் தீவிர சிற்பிகள் போன்று திகழ்கின்றனர். இவர்களின் எதிர்கால இலட்சியம் ஈடேறுவதாக.

குறிப்பு:
*இரண்டு கயிற்றடி தூரம் [தமிழர் நீட்டலளவை]
2 கோல் = 1 பெருங்கோல் = 11 அடி
8 பெருங்கோல் = 1 கயிறு
2 கயிறு = 176 அடி

இக்கட்டுரையில் என் தந்தை புங்குடுதீவை ‘நாடு’ என்றே குறிப்பிடுக்கிறார். குறையாத விளைச்சலும் கற்ற அறிஞரும் நிறைந்த செல்வரும் உடையதே நாடு என்பது திருவள்ளுவர் முடிவு (குறள்: 731). ஊர்கள் பல சேர்ந்திருப்பது நாடாகும். இவை புங்குடுதீவுக்குப் பொருந்துவதால் உயர்வு நவிச்சி அணிக்கமைய – தந்தையார் நாடு எனத் தான் பிறந்த புங்குடுதீவை புகழ்ந்து கூறியுள்ளார்.
இனிதே,
தமிழரசி.

எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன்
புங்குடுதீவு ஶ்ரீகணேச வித்தியாசாலை பழையமாணவர் சங்க வெள்ளிவிழா மலர் (1951)

புங்குடுதீவு பெயர் குறிக்கப்பட்ட வல்லிபுரம் பொன் ஏடு – கி பி 2ம் நூற்றாண்டு

 

Exit mobile version