ilakkiyainfo

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள்!! சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-8)

வாசகர்களே!

இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது சாதாரண சூழ்நிலையில் ஏற்படவில்லை. தேசிய இனப் பிரச்சனையில் மூன்றாவது நாட்டின் நேரடித் தலையீடு முதன் முதலாக ஏற்பட்டிருந்தது.

தமிழ் மக்களை இன ரீதியாக பலவீனப்படுத்துவதன் மூலம் தேசிய இனப் பிரச்சனையை ஒழித்துவிடலாம் என நம்பிய இனவாத அரசியல் இறுதியில் பல்வேறு நாடுகளின் போட்டிக் களமாக மாற்றப்பட்டுள்ளதை நாம் இன்று காண்கிறோம்.

இப் பின்னணிகளை நாம் புரிந்து கொள்வதன் மூலமே தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை நோக்கிச் செல்ல முடியும். சிலர் அரசுடன் பேசிப் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என நம்புகின்றனர்.

அதாவது பாராளுமன்ற எண்ணிக்கைப் பலத்தினைக் கருத்தில் கொண்டே இவ் விவாதம் நகர்த்தப்படுகிறது.

ஆனால் சிங்கள மக்களில் பெரும்பாலோர் இதற்கான ஆதரவை மனப் பூர்வமாக வழங்கத் தவறுவார்களேயாயின் அத் தீர்வுகள் நிரந்தரமாக அமையமாட்டா.

லெப்டினென்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ

கடந்த கால அரசுகளின் தவறான அணுகுமுறைகள் காரணமாகவே ராணுவம் அதிக விலை கொடுக்க நேர்ந்தது எனக் கருதும் ராணுவத்தினர் எவ்வாறான தீர்வுகளை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்? என நாம் கேட்க வேண்டியுள்ளது.

எனவே தேசிய இனப் பிரச்சனை குறித்து ராணுவம் எவ்வாறான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தது? என்பதை இந்த ராணுவ அதிகாரியின் வாக்குமூலம் புலப்படுத்தமா? என்பதைத் தொடர்ந்து நோக்கலாம்.

மத்தியில் அவை உணவா? அல்லது வேறு ஏதாவதா? என்ற சந்தேகங்களை எழுப்பியது.

இவை குறித்து ராணுவ அதிகாரி பிரிகேடியர் கொப்பேகடுவ கோபத்துடனும், அமைதியிழந்தும் காணப்பட்டார்.

இந்தியர்கள் எமது வான எல்லையை மீறுகிறார்கள்.

இப்போ என்ன செய்வது? என ஒரு அதிகாரி கூற இன்னொரு அதிகாரி ‘ சார், இப்போ எம்மால் எதனைச் செய்ய முடியும்? குறைந்த பட்சம் நாம் உடுத்தியுள்ள சாரங்களை உயர்த்தி அம்மணமாகக் காட்ட முடியும்.’ என்றார்.

இந்தியத் தலையீடு குறித்து ராணுவம் மட்டுமல்லாது இலங்கை அரசம் செய்வதறியாது திகைத்து நின்றது.

இப் பிரச்சனையைச் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் எடுத்துச் சென்ற போதும் அவை குறித்து எந்த நாடும் பொருட்படுத்தவில்லை.

சில நாடுகள் இந்தியாவிற்கு எதிராக குரல் எழுப்பிய போதிலும் இந்தியா அதனை அசட்டை செய்தது.

‘இந்தியா என்பது பிராந்திய அதிகாரத்தில் முக்கிய இடத்தில் உள்ளது. அப் பிராந்தியத்தில் இடம்பெறும் சம்பவங்கள் இந்திய நலன்களைப் பாதிக்கும்.

எனவே இந்தியாவுடன் ஒத்துழைப்பது அவசியம்.’ என முக்கிய நாடுகள் இலங்கைக்கு அறிவுறுத்தின. இதன் காரணமாகவே வடமராட்சித் தாக்குதலின் இரண்டாவது கட்டத்தை இலங்கை கைவிட்டது.

இத் தாக்குதல்கள் கைவிடப்பட்ட போதிலும் சிங்கள எல்லைக் கிராமங்களைத் தாக்குவதை புலிகள் நிறுத்தவில்லை.

1987ம் ஆண்டு யூன் 2ம் திகதி இளம் பௌத்த பிக்குகள் 31 பேர் கண்டி – அம்பாறை வீதி வழியாக பஸ் வண்டியில் பயணித்த போது தாக்கப்பட்டு அத்தனை பேரும் மரணமாகினர்.

வடமராட்சித் தாக்குதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட பகுதிகளைப் பாதுகாப்பது அவசியம் என்பதால் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் பிரதான முகாம் அமைக்கப்பட்டது.

அங்குள்ள பொது மக்களுடன் ராணுவ உளவுப் பிரிவு உறவுகளைப் பேணியது. அதன் காரணமாக மீண்டும் ஊடுருவுபவர்களைச் சுற்றிவழைத்துத் தேடுவது வழக்கமாக இருந்தது.

‘கப்டன் மில்லர்’

முதலாவது தற்கொலைத் தாக்குதல்

1987ம் ஆண்டு யூலை 5ம் திகதி புலிகளின் முக்கிய உறுப்பினரான ‘கப்டன் மில்லர்’ என்பவரின் தலைமையில் வாகனம் ஒன்றில் வெடி குண்டுகளுடன் நெல்லியடி முகாமிற்குள் வெடித்ததில் பல ராணுவத்தினரும், மில்லரும் இறந்தனர்.

இதுவே புலிகள் பயன்படுத்திய முதலாவது தற்கொலைத் தாக்குதலாகும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தமும் அதன் விளைவுகளும்

வடமராட்சித் தாக்குதல்கள் இடை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை, இந்தியா ஆகியன பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன.

பிரபாகரன் இந்திய அரசின் அழுத்தங்கள் காரணமாக ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானத்தில் ஈடுபடுத்தும் பொருட்டு இந்தியாவிற்கு விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டார். ஜனாதிபதி ஜெயவர்த்தனவும் இந்திய அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

அப்போதைய இலங்கைக்கான இந்தியத் தூதுவராக ஜே. என். தீக்சித் தனது ‘Assignment Colombo’ என்ற நூலில் பல விபரங்களைத் தந்துள்ளார்.

அதில் அவர் இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகள் நியாயமானது என்கிறார். அதே போன்ற எண்ணத்தையே பிரதமர் இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி என்போரும் கொண்டிருந்தார்கள்.

எனவே இதே கோட்டில்தான் இலங்கையும் பயணிக்க வேண்டும் என்கிறார். எனவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் இந்திய நலன்களையே பிரதிபலித்தது.

இந்திய முயற்சிகளை இலங்கை இரண்டு அம்சங்களில் அங்கீகரித்தது.

அதில் முதலாவது பயங்கரவாதத்தை எதிர்ப்பது, அடுத்தது இச் சமாதான முயற்சிகளுக்கு இலங்கை சம்மதிக்காவிடில் உறவுகள் பாதிக்கப்படலாம் என்பதாகும்.

தீக்சித் அவர்களின் கருத்துப்படி வடமராட்சித் தாக்குதல்கள் என்பது இலங்கைத் தமிழர் தொடர்பாக இலங்கை அரசு கொண்டுள்ள விரோதப் போக்கை உணர்த்திய காரணத்தினால்தான் இலங்கை உள் விவகாரத்தில் இந்தியா தலையிட நேர்ந்ததாக குறிப்பிடுகிறார்.

இந்திய அரசு வழங்கிய ஆலோசனைகளை இலங்கை கவனத்தில் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே நிவாரண மற்றும் மனித நேய உதவிகளை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

இலங்கை அரசின் மேல் பிரயோகித்த அழுத்தங்களைப் போலவே ஆயுதங்களைக் கைவிட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட பிரமாணங்களை ஏற்று அதன்படி செயற்படுமாறு பிரபாகரனை வற்புறுத்தியதாகவும் ஆனால் அதன் விளைவு எதிர்மறையாக மாறியதாக குறிப்பிடுகிறார்.

1987ம் ஆண்டு யூலை 24 ம் திகதி பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் என்போருடன் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும் யாழ்ப்பாணம் சுதுமலை கோவில் மைதானத்திலிருந்து தமிழ்நாடு எடுத்துச் செல்லப்பட்டார்கள்.

அங்கு முதலமைச்சர் எம் ஜி ஆர் அவர்களைச் சந்தித்த பின்னர் புதுடில்லி சென்றனர்.

அங்கு பாலசிங்கத்துடன் இணைந்து கொண்டனர். ஓப்பந்தத்தின் நகல் பிரபாகரனிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை முற்றாக நிராகரித்தார்.

தொடர்ந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதால் ஈற்றில் வேறு வழியில்லாமல் வழிவிட நேர்ந்தது.

அந் நூலில் தெரிவிக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் பார்க்கையில் அந்த ஒப்பந்தத்தினை விடுதலைப் புலிகளோ அல்லது இலங்கை அரசோ ஏற்கவில்லை என்பது தெளிவாகிறது. பதிலாக திணிக்கப்பட்ட ஒன்றாகவே காணப்பட்டது.

இவ் ஒப்பந்தத்தினை ஜே ஆர் அரசின் முக்கிய அமைச்சர்களான பிரேமதாஸ, காமினி ஜயசூரிய, லலித் அத்துலத் முதலி என்போர் ஆதரிக்கவில்லை.

இவ் அமைச்சர்களின் எதிர்ப்புக் காரணமாக முடிவெடுக்க முடியாமல் ஜே ஆர் அவதிப்பட்ட போது இன்னொரு அமைச்சரான காமினி திஸநாயக்காவின் ஆலோசனையின் அடிப்படையில் அவர் ஒப்பந்தத்தை ஏற்றார்.

ஓப்பந்த நகலை நிராகரித்த பிரபாகரன் தன்னை மீண்டும் இலங்கைக்கு எடுத்துச் செல்லுமாறு வற்புறுத்தினார்.

அப்போது தீக்சித் தலையிட்டு இந்திய அரசையும், பிரதமர் ராஜிவ் காந்தியையும் ஏமாற்றிவிட்டதாகவும், இது போன்று முன்னரும் நான்கு தடவைகள் ஏமாற்றப்பட்டதாகக் கூறி இது போன்ற நிலமை மீண்டும் ஏற்படுமாயின் இந்திய அரசினதும், பிரதமரினதும் மரியாதையை இழக்க வேண்டி ஏற்படும் என எச்சரித்தார்.

இந்த அழுத்தங்களால் ஒப்பந்த்தினைத் தயக்கத்துடன் பிரபாகரன் ஏற்றுக்கொண்டார். இவ் ஒப்பந்தத்தினைப் பிரபாகரன் நிராகரித்தமைக்குக் காரணம் அந்த ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கும் இடையேயானதாக அமைந்ததால் தன்னையும், தனது அமைப்பையும் கைவிட்டுள்ளதாக உணர்ந்தார்.

பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு அதில் ஒப்பமிட வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதே பிரதான காரணமாக அமைந்தது. இதன் விளைவே புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்குமிடையே ஏற்பட்ட போரின் பின்னணியாக அமைந்தது.

வடமராட்சி இரண்டாவது கட்ட தாக்குதல்கள் கைவிடப்பட்ட நிலையில் ராணுவத்தினர் கப்பல் வழியாக திருகோணமலை திரும்பினர்.

அப்போது எம்மிடையே இந்தியாவின் அதிகாரப் போக்குக் குறித்து விவாதிக்கப்பட்டது. இத் தருணத்தில் ஒப்பந்தம் குறித்த முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

பலர் அதன் உள்ளடக்கத்தை அறிய ஆவலாக இருந்தனர். எம்மில் பலர் இந்தியர்கள் புலிகளிடம் நல்லதொரு பாடத்தை ஒருநாள் கற்றுக் கொள்வார்கள் என எண்ணினோம்.

பிரதமர் ராஜிவ் காந்தி மீதான தாக்குதல்

1987ம் ஆண்டு யூலை 28ம் திகதி விடுமுறைக்காக கொழும்பு செல்லத் தீர்மானித்தேன்.

இச் சமயத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்பந்த இறுதித் தயாரிப்பை முடித்து மறுநாள் ஒப்பமிடுவதற்காக பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனது கொழும்பை நோக்கிய பயணத்தில் குருநாகலை அண்மித்த போது இந்தியப் பிரதமர் மறுநாள் வருவதால் கொழும்பிலுள்ள பொலீசாருக்கு மேலதிகமாக உதவும் பொருட்டு விசேட புகையிரத மூலம் வவுனியாவிலிருந்து ராணுவத்தை எடுத்துச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது.

இலங்கை – இந்திய ஒப்பந்த உள்ளடக்க விபரங்கள் எனக்குத் தெரியாவிடினும் இந்தியா அந்த ஒப்பந்தத்தினைத் திணித்துள்ளது என்பதை நன்கு உணர்ந்தேன்.

1987ம் ஆண்டு யூலை 29ம் திகதி அதிகாலை கொழும்பை அடைந்த ராணுவத்தினர் தலைமையகத்தில் தங்கியிருந்த போது கொலன்னாவ என்ற இடத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நிகழ்வதாகவும்,

அதனைக் கட்டுப்படுத்தும்படியும் உத்தரவு வந்தது. இவ் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி வந்தனர்.

சிறிய ராணுவக் குழுவினரால் இப் பாரிய மக்கள் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

எனது படைப்பிரிவினருக்கு இத்தனை மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து எந்த அனுபவமும் இல்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் மிகவும் கோபத்தோடும், அமைதி அற்றும் காணப்பட்டனர்.

எமது படைப் பிரிவினர் அங்கு சென்று சற்றுக் கடினமான உத்திகளைப் பயன்படுத்தி 30 நிமிடங்களில் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது பொது மக்கள் எம்மை மிக மோசமான வார்த்தைகளால் ஏசியும், எமது பெற்றோரை இழிவுபடுத்தியும் பேசினர்.

இதே மக்கள்தான் நாம் புலிகளுக்கு எதிராக போரிடச் சென்றபோது வாழ்த்தி அனுப்பியவர்களாகும். இவை மிகவும் துர்அதிர்ஸ்டமானது.
எமது கட்டுப்பாட்டிற்கு வெளியில் உள்ளது. எமது தாய் நாட்டிற்காக அர்ப்பணிக்கும் எம்மை நோக்கி எப்படி அவர்களால் தகாத வார்த்தைகளால் திட்ட முடிகிறது?

இலங்கைக் கடற் படையினர் இந்தியப் பிரமருக்கு மரியாதை அணிவகுப்பை மேற்கொண்டார்கள். ஆனால் நாட்டின் பல இடங்களில் இந்திய எதிர்ப்பும், இலங்கை அரசிற்கெதிரான எதிர்ப்பும் இவற்றைத் தமது அரசியலிற்கு ஜே வி பி இனர் பயன்படுத்துவதும் வெளிப்பட்டது.

என்ன விலை கொடுத்தேனும் குறைந்த பட்ச அமைதியையாவது தோற்றுவிக்க வேண்டுமென சிலர் கருதினர்.

கடற்படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்ளச் சென்ற பிரதமர் ராஜிவ் காந்தி மேல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சியை இலங்கையரில் பெரும்பாலோரும், இந்திய மக்களும் மறந்திருக்க முடியாது.

எந்த ஒரு நாட்டுத் தலைவரும் இத்தகைய அனுபவத்திற்குள் சென்றிருக்க முடியாது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஒரு ராணுவ அதிகாரி தனது துப்பாக்கியை இந்தியப் பிரதமரின் தலையில் அடிக்க முயற்சிக்கும் அளவிற்கு எடுத்துச் சென்றிருப்பதும், அது விருந்தோம்பலை ஏற்பாடு செய்த நாட்டிலேயே நிகழ்வதும் மிகவும் அவமானத்திற்குரிய செயலாகும்.

இது ராணுவத்திற்கும் அவமானமாகும். இச் செயல் ஒட்டு மொத்தமான இலங்கையரும் வெட்கப்படும் சம்பவமாகும்.

இச் செயலை முப்படைகளிலிருந்த சிலர் ஆதரித்துள்ளனர். இருப்பினும் முப் படைகளைச் சேர்ந்த எம்மைப் போன்றவர்கள் இச் செயலை முழுமையாக கண்டித்ததோடு, அவமானமாகவும் கருதினோம்.

தொடரும்…
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

தொகுப்பு : வி. சிவலிங்கம்

வடமராட்சித் தாக்குதலுக்குப் பின்னரான இந்தியத் தலையீடும், ராணுவத்தினர் மத்தியில் ஏற்பட்ட அச்சமும்!! : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-7) 

ராணுவச் சுற்றி வளைப்பும், ராணுவத்தின் கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும்!! (மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு!! (பகுதி-6)

 

Exit mobile version