Site icon ilakkiyainfo

இலங்கையில் கொரோனா பரவல் அபாய நிலையை நோக்கி நகருகிறது ! – முழுமையான தகவல் இதோ

p>நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் போன்றே மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது.

நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படும் அதேவேளை சுமார் 20 அல்லது அதற்கு அதிகளவில் மரணங்களும் பதிவாகின்றன.

இவ்வாறான நிலையில் தற்போது கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணிகளின் உயிரிழப்புக்களும் அடுத்தடுத்து பதிவாகின்றன.

 

இந்நிலையில் கடந்த 14 நாட்களில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமைக்கமைய ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதிக அவதானம் மிக்க சுகாதார மருத்துவ பிரிவுகளை (எம்.ஓ.எச்.) தொற்று நோயியல் பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது.

அதற்கமைய 25 மாவட்டங்களிலும் 312 சுகாதார மருத்துவ பிரிவுகள் இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட் பரவல் ஆரம்பித்த போது மேல் மாகாணம் அதிக அபாயம் மிக்கதாகக் காணப்பட்டது. எனினும் தற்போது மத்திய மாகாணத்திலும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

கடந்த தினங்களில் கண்டி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இன்று முழு நேர போக்குவரத்து தளர்த்தப்பட்டு , இரவு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கொவிட் தொற்றால் நான்காவது கர்ப்பிணி பலி

இன்றைய தினம் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த பிரிதொரு கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ள நான்காவது கர்ப்பிணி இவராவார்.

8 மாத கர்ப்பிணியான இவர் தெபரவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டமையால் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த கர்ப்பிணியுடன் சிசுவும் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் கணவன் மற்றும் ஏனைய குழந்தைகள் இருவரும் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது கர்ப்பிணிகள் சகலரும் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இரவு 9 மணி வரை நாட்டில் 2275 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 42 746 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் ஒரு இலட்சத்து 18 322 பேர் குணமடைந்துள்ளதோடு , 22 940  பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சனியன்று 20 மரணங்கள்

நேற்று சனிக்கிழமை நாட்டில் 20 கொவிட் மரணங்கள் பதிவாகின. பன்வில, களனி, புலத்சிங்கள, கோனபொல, கம்பஹா, கலவான, பொலன்னறுவை, அம்பதென்ன, குண்டசாலை, களுத்துறை, நாவுத்துட்டுவ, மக்கொன, கொழும்பு – 13, ருவன்வெல்ல, வவுனியா, கொழும்பு-14, நேபொட, தியதலாவை மற்றும் பசறை  ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 60 – 87 வயதுக்கு இடைப்பட்ட 11 ஆண்களும் 9 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதற்கமைய நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் அதிக தொற்றாளர்கள்

சனிக்கிழமை நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 626 தொற்றாளர்கள் மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். கண்டியில் 338 தொற்றாளர்களும் , நுவரெலியா மாவட்டத்தில் 288 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர்.

சனியன்று அதிகளவான தொற்றாளர்கள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

267 000 பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றனர்

நாட்டில் இன்று காலை வரை 1 288 560 பேருக்கு முதற்கட்ட கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 267 900 பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அஸ்ட்ரசெனிகா கொவிட் தடுப்பூசிகள் முதற்கட்டமாக 925, 242 பேருக்கும் , இரண்டாம் கட்டமாக 256 465 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று சைனோபார்ம் தடுப்பூசிகள் முதற்கட்டமாக 348 619 பேருக்கும் இரண்டாம் கட்டமாக 2435 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் தடுப்பூசிகள் முதற்கட்டமாக மாத்திரம் 14 699 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version