ilakkiyainfo

இஸ்ரேல் – காசா மோதல்: “ஹமாஸ் குழுவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை முழு வலிமையுடன் தொடரும்” – இஸ்ரேல் பிரதமர்

இன்று தொலைக்காட்சியில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு ஹமாஸ் குழுவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை “முழு வலிமையுடன் தொடரும்” என தெரிவித்துள்ளார்.

மோதலை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட வரும் சர்வதேச முயற்சிகளுக்கு மத்தியில் நேதன்யாஹு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பயங்கரவாததிற்கு எதிரான எங்களின் நடவடிக்கை முழு வலிமையுடன் தொடரும். இஸ்ரேல் குடிமக்களுக்கு அமைதியை கொண்டு வரும் வரை நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதற்கு சிறிது காலம் ஆகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நேற்று காசா நகரில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுவந்த கட்டடத்தை ஒரு நொடியில் தாக்கி தரைமட்டமாக்கியது இஸ்ரேல் இந்த நடவடிக்கை `நியாயமானது` என்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உடனடியாக மோதலை நிறுத்தும் முயற்சியில் அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐநா பொதுச் செயலர் ஆண்டானியோ தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சண்டை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் சண்டையை நிறுத்தும் முயற்சி தீவிரமடைய அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் குழு தலைவரை இலக்கு வைத்து தாக்குதல்

காசா மீது தொடுக்கப்பட்ட வான் தாக்குதலில், பாலத்தீனத்தில் உள்ள ஹமாஸ் குழுவின் அரசியல் தலைவரின் வீடு மீது குண்டு வீசப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த பிராந்தியத்தின் ஹமாஸ் குழுவின் தலைவர் யாயா சின்வாரின் வீட்டை வெடிகுண்டு தகர்த்ததாக கூறும் வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

காசாவில் ஞாயிறன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னதாக இஸ்ரேல்-பாலத்தீனம் இடையிலான மோதல் ஏழாவது நாளாக தொடரும் நிலையில் காசாவில் இருந்து வரும் ராக்கெட் தாக்குதல்களுக்கு தாங்கள் வலிமையான பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று காசாவில் இஸ்ரேல் படைகளால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் குறைந்தது மூன்று பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஹமாஸ் ஆயுதக் குழுவினரும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.

இதன் காரணமாக தடுப்பு அரண்கள் சென்று தப்பிக்க வேண்டிய சூழல் அந்நகர மக்களுக்கு உண்டானது.

தொடர்ந்து பதற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று சர்வதேச சமூகம் இருதரப்பையும் வலியுறுத்தி வருகிறது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலத்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோரை சனிக்கிழமையன்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் – பாலத்தீன விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூடி விவாதிக்க உள்ளது.

சென்ற திங்கட்கிழமை (மே 10ஆம் தேதி) இஸ்ரேல் – பாலத்தீன மோதல் தொடங்கியதிலிருந்து காசாவில் இதுவரை குறைந்தது 148 பேர் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தங்கள் தரப்பில், இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவிக்கிறது.

 

தாங்கள் நடத்திய தாக்குதலில் காசாவில் டஜன் கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் கூறுகிறது.

இஸ்ரேல் தாக்குதலால் தங்கள் தரப்பில் உயிரிழந்தவர்களில் 41 குழந்தைகளும் அடக்கம் என்று பாலத்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வளவு தேவைப்படுமோ அவ்வளவு காலம் காசா மீதான தாக்குதல்கள் தொடரும் என்று சனிக்கிழமையன்று தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தங்களின் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்க சாத்தியமான அனைத்தையும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் நடந்த மோதல்கள் கடந்த ஆறு நாட்களாக நடந்த வன்முறைச் சம்பவங்களின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதியிலிருந்து இஸ்ரேல் படைகள் விலக வேண்டும் என்று எச்சரித்து இஸ்ரேல் பகுதியின் மீது காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் தொடங்கியது ஹமாஸ் அமைப்பு. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வான் தாக்குதல்கள் நடத்தத் தொடங்கியது.

அல்-அக்சா மசூதி வளாகம் யூதர்களின் புனித தலமாகவும் விளங்குகிறது. இதை அவர்கள் ‘டெம்பிள் மவுண்ட்’ என்று அழைக்கின்றனர்.

காசாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி

காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் சனிக்கிழமையன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு ஐந்து மாத குழந்தை மட்டுமே உயிர் பிழைத்துள்ளது. அக்குழந்தையின் தாய், உடன் பிறந்தவர்கள் நான்கு பேர், தாயின் சகோதரி மற்றும் அக்குழந்தையின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் நடந்த சமயத்தில் குழந்தை ஓமர் அல்-ஹதிதியின் தந்தை முகமது அல்-ஹதிதி வீட்டில் இல்லை. “அந்த இடத்தில் ராக்கெட் எதுவும் இல்லை. பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இருந்தனர்.

அமைதியான குழந்தைகள் ஈத் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர். இத்தகைய கொடுமையை அனுபவிக்கும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள்,” என்று முகமது அல்-ஹதிதி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

“அக்குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அவனது தொடை எலும்பு முறிந்து இருந்தது. உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் நல்ல வேளையாக தற்போது சீரான உடல் நிலையுடன் இருக்கிறான்,” என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் ஏவிய 278 ராக்கெட்டுகள்

காசா பகுதியில் இருந்து பாலத்தீன தீவிரவாதிகள் 278 ராக்கெட்டுகளை இஸ்ரேல் பகுதியை நோக்கி ஏவியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் கூறுகின்றன.

இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள ஆஷ்தோத், பீர்ஷாபா, மற்றும் ஸ்தெராட் ஆகி நகரங்களில் உள்ள வீடுகள் இந்தத் தாக்குதலில் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல் அவிவ் நகரின் புறநகர் பகுதியான ரமாத் கன் எனும் பகுதியில் தெருவில் வந்து விழுந்த ராக்கெட்டால் ஒருவர் கொல்லப்பட்டார்.

தமது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் இருந்த அந்த நபர் ராக்கெட்டின் சிதறிய பாகங்கள் தாக்கியதில் காயமடைந்து இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் இருந்த கட்டடத்தை தாக்கிய இஸ்ரேல்

காசா நகரில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுவந்த கட்டடத்தை ஒரு நொடியில் தாக்கி தரைமட்டமாக்கியது இஸ்ரேல். இந்த தாக்குதல் சனிக்கிழமை பிற்பகல் நடந்தது.

முன்னதாக ஜலா டவர் என்ற அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் ஜாவத் மெஹ்தியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரி அந்தக் கட்டடத்தை தாக்கவிருப்பதாகவும், ஒரு மணி நேரத்தில் அதை காலி செய்துகொள்ளும்படியும் கூறியுள்ளார். இத்தகவலை ஜாவத் மெஹ்தி கூறியதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை கூறியுள்ளது.

பத்திரிகையாளர்கள் தங்கள் கருவிகளை எடுத்துக்கொள்ள கூடுதலாக ஒரு பத்து நிமிடம் அவகாசம் தரும்படி ஜாவத் அந்த அதிகாரியிடம் கெஞ்சுவதை ஏ.எஃப்.பி. செய்தி முகமை பார்த்துள்ளது. ஆனால், மறுமுனையில் பேசிய அந்த அதிகாரி அதற்கு மறுத்துவிட்டார்.

கத்தார் அரசு நிதியுதவியோடு நடக்கும் அல் ஜசீரா செய்தி சானல், அந்த கட்டடம் வான் தாக்குதல் மூலம் தகர்க்கப்படுவதை நேரலையாக ஒளிபரப்பியது.
இஸ்ரேல் – பாலத்தீன தரப்புகள்: சமீபத்திய வன்முறை ஏன்?

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜெருசலேம் நகரில் சமீப நாட்களாக வன்முறை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

திங்களன்று ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதிக்கு வெளியே இஸ்ரேலிய காவல்துறையினருடன் நடந்த மோதலில் 300க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் காயமடைந்தனர்.

கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் உள்ள இஸ்லாமியர்கள் வாழும் பகுதி வழியாக இஸ்ரேலிய தேசியவாதிகள் கொடி அணிவகுப்பு ஒன்றை, திங்களன்று நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் எனும் அச்சத்தின் காரணமாக கைவிடப்பட்டது.

ஆண்டுதோறும் ஜெருசலேமில் நடக்கும் ஜெருசலேம் தின கொடி அணிவகுப்பின் போது இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகள் வழியாக ஜியனிச (zionism) கொள்கையுடைய யூதர்கள் செல்வார்கள்.

1967ஆம் ஆண்டு ஜெருசலேம் பழைய நகரம் அமைந்துள்ள கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியதை கொண்டாடும் நிகழ்வாக இந்த அணிவகுப்பு நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் ரமலான் மாதத்தின் இறுதி நாட்களில் நடைபெறும் இந்தக் கொடி அணிவகுப்பு, தங்களை வேண்டுமென்றே தூண்டிவிடும் செயல் என்று பாலத்தீன தரப்பு கருதுகிறது.

கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் உள்ள தங்கள் வாழ்விடங்களில் இருந்து, யூத குடியேறிகளால் பாலத்தீன குடும்பங்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ள சூழல் உருவானது பாலத்தீனர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது. இதனால் அங்கு சமீப நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது.

யூத குடியேறிகளுக்கு ஆதரவாக தங்களது சொந்த இடத்திலிருந்து பாலத்தீன குடும்பத்தினர் வெளியேற்றப்படுவதை, எதிர்த்து 70க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் தொடர்ந்த வழக்கு பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

ஆனால் திங்கட்கிழமை இஸ்ரேலிய அரசின் தலைமை வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நடக்கும் வன்முறைகளை காரணம் காட்டி இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. விசாரணை தள்ளி வைக்கப்பட்ட முப்பது நாட்களுக்குள் புதிய தேதி முடிவு செய்யப்படும்.

 

Exit mobile version