ilakkiyainfo

பிகார்: கொரோனா வைரஸின் கோரக்காட்சிகள், பதற வைக்கும் கதைகள்

கொரோனா பாதுகாப்பு கவச ஆடை (PPE) அணிந்தவாறு ஒரு இளம் பெண் தனது தாயின் சடலத்தை சவக்குழிக்குள் இறக்க முற்படும் காட்சி, பிகார் மாநிலத்தில் கோரத்தாண்டவமாடும் கொரோனா தாக்கத்தின் வலி நிறைந்த யதார்த்தத்தை புரிய வைக்கிறது. அந்த படத்தை எடுத்த தைனிக் பாஸ்கர் நாளிதழின் புகைப்பட செய்தியாளர் சந்தன் செளத்ரி.

14 வயதே ஆன சோனி குமாரி மற்றும் அவரது உடன் பிறந்தவர்களை, அவர்களின் பெற்றோர் கொரோனாவால் இறந்ததால் ஊருக்குள் சடலங்களை கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது மதுலதா கிராமம். அங்கு அவர்களின் பெற்றோரின் சடலத்தை எரிக்கவும் உள்ளூர்வாசிகள் விடவில்லை.

இந்த நிலையில்தான் தமது தாயின் சடலத்தை தனி ஆளாக புதை குழி தோண்டி புதைக்க முற்பட்ட சோனி குமாரியின் செயல், மறுநாள் நாளிதழ் செய்தியில் இடம்பெற்று வெகுஜன கவனத்தை ஈர்த்தது.

சோனி குமாரியின் தந்தை விரேந்திர மேத்தா உள்ளூர் வைத்தியர். உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபோதே அவரது தந்தைக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது.

இந்த நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருபவரான உள்ளூர் செய்தியாளர் மெராஜ் கான், சோனியின் தந்தை கடந்த 3ஆம் தேதி உயிரிழந்ததாகவும், சோனிக்கு 12 வயதில் தங்கையும், 10 வயதில் சகோதரனும் இருப்பதாகக் கூறினார்.

இதன் பிறகு கொரோனா சிகிச்சைக்காக தங்கள் வசம் இருந்த நிலம், கால்நடைகளை இந்த குடும்பம் விற்றுள்ளது.

அனைத்து சேமிப்புகளும் கரைந்த நிலையில்தான் மேத்தாவின் மரணம் நடந்தது. அப்போது ஆனால், அவர்களின் கிராமம் மேத்தாவின் சடலத்தை புதைப்பதற்கு உதவ முன்வரவில்லை. இதனால் மேத்தாவின் மனைவி பிரியங்கா தேவி தமது மூன்று பிள்ளைகளுடன் சேர்ந்து குழி தோண்டி கணவரின் சடலத்தை புதைத்தார்.

ஆனால், துரதிருஷ்டவசமாக அடுத்த மூன்று நாட்களில் பிரியங்கா தேவி உயிரிழந்தார். தந்தையின் சடலத்தை தாயார் புதைத்த துயர அனுபவத்துக்கு சாட்சியாய் இருந்த குழந்தைகள், இப்போது தாயின் சடலத்தையும் புதைக்க தாங்களாகவே குழி தோண்டி புதைத்த வலியில் இருந்து இன்னும் விடுபடவில்லை.

இந்த ஒரு காரணத்துக்காகவே, சோகமும் வலிகளும் தந்த அந்த காட்சிகளை பொதுவெளியில் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பியதாகக் கூறுகிறார்

செய்தியாளர் மெராஜ்.

வதந்திகளும் சமூக புறக்கணிப்பும்

நடந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், ஆதரவற்ற மூன்று பிள்ளைகளுக்கும் உதவும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நான்கு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

இப்போது அந்த மூன்று பிள்ளைகளுக்கும் உதவி செய்யும் வகையில் அவர்களின் பெற்றோர் இறப்புச் சான்றிதழை பெற்றுத் தரும் முயற்சியில் இறங்கியிருப்பதாகக் கூறுகிறார் மெராஜ்.

இதன் பிறகே பலரும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவ முன்வந்தனர்.

ஆனால், பிகாரில் நடக்கும் கொரோனா அவலங்கள் பலவற்றில் இது ஒரு துளி மட்டுமே என்கிறார் மெராஜ் கான்.

நேசித்த அன்புக்குரிய உறவுகளை பறிகொடுத்த பிறகு நிராயுதபாணியாகும் குடும்பங்களின் வரிசையில் இப்போது இந்த மூன்று பிள்ளைகளும் சேர்ந்துள்ளனர்.

இதுபோலத்தான் சமீபத்தில் பிகார், உத்தர பிரதேச மாநிலங்களில் ஓடும் கங்கை நதிக்கரைகளில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்த சம்பவங்களிலும் பல சோகக் கதைகள் புதைந்திருக்கின்றன.

Exit mobile version