ilakkiyainfo

ஆந்திரா: கடத்தப்பட்ட லாரிகள்; புதைக்கப்பட்ட 13 ஓட்டுநர்கள்! – 12 கேங்ஸ்டர்களுக்குத் தூக்கு தண்டனை

போலீஸ் உடையில், லாரி ஓட்டுநர்களைக் கொன்று லாரிகளை கடத்திவந்த 12 பேர் கொண்ட கும்பலுக்கு தூக்கு தண்டனை விதித்து, ஆந்திர மாநிலம் ஓங்கோல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது.

2008-ம் ஆண்டில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வழியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு லாரிகள் அடிக்கடி மாயமாகின. அந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து 13 லாரிகள் மாயமானதாகவும், அவற்றின் ஓட்டுநர்களும், கிளீனர்களும் என்ன ஆனார்கள் என்பது தெரியாமலும் மர்மம் நீடித்திருக்கிறது.

இதில், தமிழக வாகனங்களும் அடங்கும். மாயமானவர்களின் குடும்பத்தினரிடமிருந்தும், வாகனம் மற்றும் சரக்குகளை கண்டுப்பிடித்துத் தரக்கோரி அதன் உரிமையாளர்களிடமிருந்தும் புகார்கள் குவியத் தொடங்கியதால், கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அந்த நேரத்தில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை


குற்றவாளிகள்

முன்னா பாய் என்கிற கேங்க்ஸ்டர் தலைமையிலான கும்பல், ஆந்திர காவல்துறையினரின் உடையில் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு லாரிகளை சூறையாடியது தெரியவந்தது.

முன்னா பாயின் இயற்பெயர் சையத் அப்துல் சமத். லாரிகளை மறிக்கும் இந்த கும்பல், ஓட்டுநர் மற்றும் கிளீனர்களை கொன்று தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வனப்பகுதிக்குள் உடல்களை புதைத்திருக்கின்றனர்.

பின்னர், லாரிகளைக் கடத்திச்சென்று அதிலுள்ள சரக்குகளை மார்க்கெட்டில் விற்பனை செய்திருக்கின்றனர். அந்த லாரிகளின் பாகங்களையும் பிரித்து விற்றுள்ளனர். காணாமல் போன 13 லாரிகளுக்கும், அவற்றின் ஓட்டுநர்களுக்கும் இதே கதி தான்.

இதுதொடர்பாக, பிரகாசம் மாவட்டத்திலுள்ள ஓங்கோல் காவல் நிலையத்தில் மட்டும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கேங்க்ஸ்டர் கும்பலைப் பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த கேங்க்ஸ்டர் முன்னா பாய், ஊரில் பெரிய மனிதராக வலம் வந்திருக்கிறார். பின்னணியில் அரசியல் செல்வாக்கும் இருந்திருக்கிறது. இந்த வழக்கில் கேங்க்ஸ்டர் முன்னா பாயை நெருங்குவதிலும், விசாரணைக்கு அவரை உட்படுத்துவதிலும் பிரகாசம் மாவட்ட போலீஸாருக்குப் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன.

ஆதாரங்களைத் திரட்டிய போலீஸார், முன்னா பாயை கைது செய்ய முயன்றபோது, அவர் ஓங்கோல் பகுதியிலிருந்து கர்நாடக மாநிலத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.

முன்னா பாயைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் கர்நாடகாவுக்கு விரைந்தன. பெங்களூருவில், முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த முன்னா பாய் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். அவரின் கூட்டாளிகள் 17 பேரும் பிடிபட்டனர்.

தூக்கு

பிரகாசம் மாவட்ட போலீஸார், அவர்களை கைது செய்து தமிழகம், பீகார், மேற்கு வங்கம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று தடயங்களைச் சேகரித்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஓங்கோல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கில் தொடர்புடைய கேங்க்ஸ்டர் முன்னா பாய் உட்பட 18 பேரும் குற்றவாளிகள் என நிரூபனமானது. கூடுதல் மாவட்ட 8-வது அமர்வு நீதிபதி ஜி.மனோகர்ரெட்டி, 13 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

ஐ.பி.சி 396-ன் கீழ் கேங்க்ஸ்டர் முன்னா பாய் உட்பட 12 பேருக்கு மரண தண்டனையும், மேலும் 6 பேருக்கு ஐ.பி.சி 396 மற்றும் 120-பி ஆகியவற்றின் கீழ் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தீர்ப்பு ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உறுதிப்படுத்துவதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நாட்டிலேயே ஒரே வழக்கில் 11 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது, இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.

Exit mobile version