Site icon ilakkiyainfo

கொரோனாவுக்கு இது அரிதான மருந்தாம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ

கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் பலர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, தங்களுக்கு தெரிந்த மற்றும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவ சமுதாயம் திணறி வருகிறது. கொரோனா வைரசானது பல்வேறு நிலைகளில் மரபணு மாற்றம் அடைந்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்துவது சவாலாகவே உள்ளது. எனவே, மருத்துவ நிபுணர்கள் புதிய மருந்துகளை கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு அலோபதி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், அந்தந்த பகுதி பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

இதுதவிர கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாக்கவும், தங்களுக்கு தெரிந்த மற்றும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் மதுரை அருகே கொரோனா நோய்க்கு அரிதான மருந்து என கூறி உயிருள்ள பாம்பை ஒருவர் கடித்து தின்னும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. விவசாய கூலித் தொழிலாளியான இவர், வயல்வெளியில் சுற்றிய ஒரு பாம்பை பிடித்து, அரியவகை மருந்து எனக் கூறி அதை கடித்து சாப்பிடுகிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version