ilakkiyainfo

யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பம்

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் பொதுமக்களுக்கு கொரோனா  தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியது.

காலை 8 மணிக்கு தொடக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 இடங்களில் குறித்த தடுப்பு ஊசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 61 கிராம சேவகர் பிரிவுகளில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடானது முதற்கட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.

அதாவது, யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் தொற்றாளர்கள்  இனங்காணப்பட்ட பகுதியில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் குறித்த தடுப்பூசி வழங்குவதற்கு வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இன்று காலையில் இருந்து அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் முன்வந்து தமக்குரிய தடுப்பூசியினை பெற்றுக் கொள்கின்றார்கள்.

கொவிட் – 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு முதற் கட்டமாக 50 ஆயிரம் சீனத் தயாரிப்பான சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொவிட் – 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம அலுவலகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் இன்று காலை முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது .

 

Exit mobile version