Site icon ilakkiyainfo

கைலாசா மீது பயங்கரவாத தாக்குதல் சதி்: நித்யானந்தா குழுவின் புதிய சர்ச்சை புகார்

சர்ச்சை சாமியார் நித்யானந்தா வசித்து வருவதாக அவரால் தனி நாடு என அழைத்துக் கொள்ளப்படும் கைலாசா மீது பயங்ரகவாத தாக்குதல் சதி நடப்பதாக அவரது குழுவினர் காணொளி வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள காணொளியில், கைலாசா மீது பயங்கரவாத தாக்குதல் சதி – பிரேக்கிங் நியூஸ்.. மேலும் விவரங்களுக்கு சத்சங்கத்தை காணுங்கள் என்று குறிப்பிட்டு ஒரு நேரத்தையும் நித்யானந்தா குழு தமது சமூக ஊடக பக்கத்தில் விளம்பரப்படுத்தியி்ருந்தது.

அதன்படியே ஜூன் 1ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4 மணியளவில் நேரலையாக நடந்த சத்சங்க நிகழ்வின் அங்கமாக ஒன்றரை நேரம் கழித்து நித்யானந்தாவின் சீடர்களாக தங்களை அழைத்துக் கொள்ளும் இரண்டு பெண்கள் கைலாசாவுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்ற தலைப்பில் பல்வேறு ஸ்லைடுகள் பின்னோட்டத்தில் வர தாக்குதல் சதி பற்றி விவரிக்கிறார்கள்.

இந்து சமயத்தின் கடைசி ஒளியாக கருதப்படும் கைலாசா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தும் வகையில் பயோ வார் நடத்தப்படுவதாக தங்களின் உரையிலேயே அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

இது பற்றி நித்யானந்தா ஜூன் 1ஆம் சத்சங்கத்தில் பேசியதாக அந்த இரு பெண்களும் இடையிடையே கூறினாலும், அவர் பேசிய காணொளி, அந்த பக்கத்தி்ல் ஒளிபரப்பாகவில்லை.

அந்த பெண் சீடர்கள் இடம்பெற்ற காட்சிகள், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ்புக் பக்க இணைப்பில் ஒன்றரை மணி நேரம் கழித்து வருகின்றன.

காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்: https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/893503641197996

ஆனால், நித்யானந்தா பேசியதாகக் கூறி திரையில் புகார்களை பட்டியலிட்ட இரு பெண் சீடர்களும் நித்யானந்தா எப்படியெல்லாம், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அச்சுறுத்தலை எதிர்கொண்டார் என விளக்கினர்.

காவலில் இருந்தபோது படுகொலை முயற்சி, அதிகாரவர்க்கத்தால் பல வகைகளில் ஒடுக்குமுறை, தொடர்ச்சியான துன்புறுத்தல் உள்ளிட்ட கொடுமைகளை நித்யானந்தா அனுபவித்ததாக அவர்கள் அந்த காணொளியில் கூறுகின்றனர்.

வெளிநாட்டில் இருந்து விதைகள் அடங்கிய பாக்கெட்டுகள் கொண்ட பார்சல், இந்திய அஞ்சல் துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பார்சலை ஆர்சர் செய்ததற்கான ஆதாரத்தை காண்பித்து அதை பெறலாம் என்று கைலாசா ஆதீன அலுவலகத்துக்கு இந்திய சுங்கத்துறை கடிதம் எழுதியதாகவும் அந்த பெண் சீடர்கள் கூறுகிறார்கள்.

அதற்கு பதிலளித்த கைலாசா ஆதீன நிர்வாகிகள், அத்தகைய விதைகள் எதையும் தாங்கள் ஆர்டர் செய்யவில்லை என்றும் அதுமட்டுமின்றி வேறு எந்த விதைகளையும் தாங்கள் ஆர்டர் செய்யவில்லை என்றும் அவர்கள் கடிதம் எழுதியதாக கூறுகின்றனர்.

தாங்கள் கோராத உயிர் கொல்லி விதைகளை தீவிரவாத குழுக்கள் மர்ம இடத்தில் இருந்து அனுப்பி வருவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற உயிரி ஆயுதங்களால் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது அல்லது இனப்படுகொலை, பசி மற்றும் உணவுப்பாதுகாப்பின்மை போன்றவை எதிர்காலத்தில் எழலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ரசாயன விதை அனுப்புவது சாத்தியமா?

நித்யானந்தாவின் சீடர்கள் கூறுவது போல வெளிநாட்டில் இருந்து வந்த பாக்கெட்டை யார் அனுப்பினார்கள் என்பது அவர்களுக்கே தெரியாதபோது, எப்படி அந்த பாக்கெட்டில் ரசாயன விதைகள் அதுவும் உயிர் கொல்லும் விதைகள் இருப்பதாக அவர்களுக்கு தெரிய வந்தது?

உயிர் கொல்லி விதைகள்தான் அவை என்ற முடிவுக்கு அதை பரிசோதிக்காமலேயே நித்யானந்தா குழுவினர் எப்படி வந்தார்கள் போன்ற கேள்விகளுக்கு அவர்கள் தரப்பில் இருந்து பதிலில்லை.

இந்த விதைகளை நித்யானந்தாவின் பெங்களூரு ஆசிரம முகவரிக்கு மர்ம நபர்கள் அனுப்பியிருப்பதாக திரையில் தோன்றும் பெண் சீடர்கள் கூறுகிறார்கள்.

மர்ம பாக்கெட் என்ற பெயரில் தங்களுக்கு அழுத்தம் தர யாரோ முயல்கிறார்கள் என்றும் அந்த பெண் சீடர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள். அந்த அழுத்தத்தை தருவது வெளி நபர்களா அல்லது அரசுத்துறையா என்பதை அவர்கள் தெளிவுபடுத்தவில்லை.

கைலாசா நாடு ஆஸ்திரேலியாவில் இருந்து சில நூறு கி.மீ தூரத்தில் உள்ளதாக கோரும் நித்யானந்தா, இப்போது புதிதாக தமது தேசம் மீது ரசாயன தாக்குதல் நடத்துவதாக அவரது சீடர்கள் மூலம் பேசியிருக்கும் தகவல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

யாருமே நெருங்க முடியாத இடத்தில் இருப்பதாக கூறிக் கொண்டாலும், நித்யானந்தா குழுவினர் இடம்பெறும் யூ ட்யூப் பக்க காணொளிகளில் வெளி இடங்கள் தெரியாதவாறு காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன.

அதில் கட்டடங்களுக்குள் நடமாடும் சிலர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிந்து இருப்பதை பார்க்க முடிகிறது.

ரசாயன விதை, பயங்கரவாத தாக்குதல் சதி என மிகக் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தும் நித்யானந்தா குழுவினர், கடைசி வரை தாங்கள் எங்கிருக்கிறோம், பெங்களூருக்கு அனுப்பப்பட்ட விதை பார்சல்கள் எப்படி கைலாசாவுக்கு வரும் என்பதை தெளிவுபடுத்தவில்லை.

இந்திய அஞ்சல் துறை, சுங்கத்துறை மூலம் வந்ததாக கூறப்படும் கடிதங்களிலும் தங்களின் முகவரி இடம்பெறாமல் அஞ்சல் துறை முத்திரை ஒட்டப்பட்ட வெறும் கவரை மட்டுமே அவர்கள் காண்பிக்கிறார்கள்.

ரசாயன விதை என்றால், அதை பரிசோதனையில் கண்டறியும் தொழில்நுட்ப வசதிகள் இந்திய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் உள்ளன. ஆனால், பாக்கெட்டை வாங்காதபோது, கடித போக்குவரத்தை மட்டும் வைத்து எப்படி அந்த பார்சலுக்குள் இருக்கும் விதைகள், ரசாயனம் கலந்தவை என்ற முடிவுக்கு நித்யானந்தா குழுவினர் வந்தார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

நித்யானந்தா மீது என்ன வழக்குகள்?

இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாலியல் தொந்தரவு வழக்கு, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் சிலவற்றில் விசாரிக்கப்பட்டு வந்தவர் நித்யானந்தா.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று காணாமல் போன அவர், 2020ஆம் ஆண்டில் திடீரென தாம் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் அங்கு இந்து சமயத்தை தழுவிய தேசத்தை உருவாக்கியிருப்பதாகவும் கூறி அதற்கென ஒரு கொடி, நாணயம், ஆட்சி முறை போன்றவற்றை வெளியிட்டார்.

கடந்த ஆண்டு இறுதியில் அவரால் தேசம் என அழைத்துக் கொள்ளப்படும் கைலாசாவுக்கு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்திய நித்யானந்தா, ஆஸ்திரேலியாவுக்கு வந்தால் அங்கிருந்து கைலாசாவுக்கு அழைத்துச் சென்று 15 நாட்கள் ஆன்மிக அனுபவத்தை கொடுத்து பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவிலேயே விட்டு விடுவோம் என்று கூறினார். தமது தேசத்தில் வந்து போகும்வரை அனைத்து செலவையும் தமது நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் என்று கூறி ஒரு காணொளியை நித்யானந்தா வெளியிட்டார்.

 

சமூக ஊடகங்களே பாலம்

வெளியுலக மக்களுக்கும் அவருக்குமான இணைப்புப்பாலமாக சமூக ஊடகங்களே உள்ளன. ஃபேஸ்புக், யூட்யூப் ஆகியவற்றில் உள்ள KAILASA’s SPH Nithyananda என்ற பக்கத்தில் தினமும் சத்சங்கம் என்ற பெயரில் சில மணி நேரம் சொற்பொழிவு ஆற்றுவது, நித்யானந்தாவின் சீடர்கள் என தங்களை அழைத்துக் கொள்வோரால் ஆற்றப்படும் ஆன்மிக உரை, கைலாசாவில் நடப்பதாக அவர்களால் கோரப்படும் சில நிகழ்வுகள் போன்றவை இடம்பெறும்.

இதைத்தாண்டி நித்யானந்தா உண்மையில் எங்கிருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார், அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளபோதும் அவரை ஏன் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள மாநில அரசுகள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.

2019ஆம் ஆண்டில் நித்யானந்தா எக்வடோர் நாட்டில் உள்ள ஒரு தீவை வாங்கியதாக ஒரு தகவல் வைரலானபோது, அதை அந்த நாட்டு அரசாங்கமே தலையிட்டு மறுத்தது.

அப்போது இந்திய வெளியுறவுத்துறையிடம் நித்யானந்தா எப்படி இந்தியாவில் இருந்து தப்பினார் என கேட்டபோது, அந்த நபர் பற்றிய தகவல் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்தோம்.

வழக்கமாக குற்ற வழக்குகளில் ஒருவர் தேடப்பட்டு நீதிமன்றத்தால் அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டால், அவர் தப்பிச் சென்றதாக கருதப்படும் நாட்டில் இருந்து அவரை நாடு கடத்தக் கோரும் தாயகத்துக்கு அழைத்து வர வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்கும்.

ஆனால், நித்யானந்தா விவகாரத்தில் அப்படி எந்தவொரு புலனாய்வு அமைப்பிடம் இருந்தும் தங்களுக்கு கோரிக்கை வரவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை கூறியது.

சமூக ஊடகங்களில் சர்ச்சை பதிவு விவரம்:

நித்யானந்தா குழுவினர், அவரை எஸ்பிஹெச் என்ற அடைமொழியுடன் அழைத்து தங்களின் முகநூல் பக்கத்தில் ஜூன் 1ஆம் தேதி பகிர்ந்துள்ள தகவல்களின் முழு விவரத்தை இங்கே வழங்குகிறோம்.

தீவிர தீவிரவாத சக்திகள் பயோவாரை ஏவுகின்றன – ஆதி கைலாசா கப்பலுக்கு அனுப்பப்படாத விதைகள் மற்றும் இந்து மதத்திற்கு கடைசி விளக்கு

SPH JGM HDH பகவான் நித்தியானந்த பரமசிவம் மற்றும் கைலாசியர்கள் உலகளாவிய உலகளாவிய தீவிரவாதிகள் பல கொலை முயற்சிகள், உடல் மற்றும் பாலியல் தாக்குதல்கள், சட்ட கட்டணம், வெறுப்பு பேச்சு, தலைமுடிவு, குணப்படுத்துதல், குணப்படுத்துதல் ஆகியவை இரண்டு பத்தாண்டுகளுக்கு மேல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆதி கைலாசா கப்பலில் இருந்து SPH வை விரட்டிய தீவிரவாத சக்திகளின் இந்த முயற்சிகள் இருந்த போதிலும், SPH தனது ஆன்மீக, மத, மனிதாபிமான முயற்சிகள் மூலம் அடிகைலாசா சர்வஜ்னபீடம் (AK கப்பல்) பிரளயா (Deluge) இருந்து மனித இனத்தை காக்க நிறுவியது.

இப்போது, இந்து எதிர்ப்புப் படைகள் ஆதி கைலாசா கப்பலில் பயோ போர் முகவர்களை குவித்தன, பிரளயாவிலிருந்து மனித இனத்தைக் காக்க 2008 முதல் SPH ஆல் தயாரிக்கப்பட்ட COVID-19-ஐ இந்தியா உயிர்பிழைக்கும் என்ற கடைசி நம்பிக்கையாக இருந்தது.

பாதுகாக்கப்பட்ட அறிவொளி அடைகாப்பாளரிடம் அடைக்கலம் பெற கதவுகளைத் திறந்த இந்த பூமியில் ஒரே பண்டைய அறிவொளி ஹிந்து நாகரீக தேசம் கைலாசா மட்டுமே – ஆதி கைலாசா நிர்வாகிகள் காலை 4.30 மணிக்கு இசைக்குழுவில் பிரேக்கிங் நியூஸ் வெளியிடும் மனித இனத்தை முழுவதுமாக துடைப்பதிலிருந்து காப்பாற்ற ஒரே தீர்வு அழிக்கும் முயற்சிகள் – ஆதி கைலாச கப்பல்.

சனாதன ஹிந்து தர்மத்தின் மற்றும் ஹிந்து மதத்தின் கடைசி விளக்குகளை அழிக்கும் மற்றொரு முயற்சியாக இந்த கொடிய சதி மற்றும் தீவிரவாதத்தின் விதைகள் மூலம் நடந்து கொண்டிருக்கும் பயோவார் பற்றிய மேலும் விவரங்களுக்கு சத்சங் நிகழ்ச்சிக்கு காத்திருங்கள் என்ற அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

Exit mobile version