Site icon ilakkiyainfo

நான்கு பொலிஸார் சுற்றி நின்று தாக்கினர்”நேரில்கண்ட சாட்சி!

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனின் பிரேத பரிசோதனை வெளியாகியுள்ளது .

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞனை நேற்று இரவு கைது செய்துள்ளனர். இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த ச.விதுசன் எனும் இளைஞனே இன்று தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் ‘ஐஸ்’ போதைப்பொருள் பக்கற் நான்கினை விழுங்கிய நிலையில் ஐஸ் போதைப்பொருள் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எனது மகன் வீட்டில் சகோதரியோடு தூங்கிக் கொண்டிருந்தான்.தொலைபேசி அழைப்பு வர நன்பனைச் சந்தித்துவிட்டு வருவதாக கூறி சென்றான்.

வீதிக்கு சென்ற சிறிது நேரத்தில் அயலவர்கள் அழைக்க வீதிக்கு சென்ற போது எனது மகனை கைவிலங்கிட்டு பொலிஸார் தாக்கிக்கொண்டிருந்தனர். தடுத்தும் விடவில்லை பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றனர்” என்று தெரிவிக்கின்றார் உயிரிழந்த இளைஞனின் தாயார்.

“சத்தம் கேட்டு வீதிக்கு சென்று பார்த்தபோது கைவிலங்கிட்டு நான்கு பொலிஸார் தாக்கினர். மதிலோடு சேர்த்து வைத்து தாக்கினர். பொலிஸார் தாக்கியதில் தலை பின் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது.

பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே என்ன செய்தனர் என தெரியவில்லை அவருக்கு எந்த வருத்தமும் இல்லை பொலிஸார் அடித்தே இறந்துள்ளார்” என்று தெரிவிக்கின்றார் சம்பவத்தை நேரில் கண்ட உறவினர்.

பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் போது நெருங்கிய உறவினர் ஒருவர் அனுமதிக்கப்படுவது வழமை. ஆனால் குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனையின் போது உறவினர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொண்டு உண்மை நிலவரம் வெளிப்படுத்தப்படவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் வேண்டுகோள்.

Exit mobile version