ilakkiyainfo

7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்ததாக கூறி அடித்துக் கொன்ற தாய் உள்பட மூவர் கைது

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி தாய் உட்பட 3 பெண்கள் அந்த சிறுவனை அடித்து கொன்றதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த மூன்று பெண்களையும் கண்ணமங்களம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்களம் பேரூராட்சியில் உள்ள ஒரு வளாகத்தில் சிறுவனை 3 பெண்கள் அடித்து துன்புறுத்துவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தச் சென்றனர். ஆனால், அதற்குள் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சிறுவனின் சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்ய காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

பிறகு அந்த சிறுவன் அருகே இருந்த மூன்று பெண்களிடம் கண்ணமங்களம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

என்ன நடந்தது?

ஊர் பெயர்

தன்னுடைய மகனுக்கு பேய் பிடித்து இருப்பதாகவும் அதை வந்தவாசியில் உள்ள முஸ்லிம் தர்காவில் இருப்பவர் விரட்டுவார் என்ற நம்பிக்கையுடன் தனது சகோதரிகளுடன் அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு தாயார் திலகவதி வந்துள்ளார்.

ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவனுக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி தாய் உட்பட மூன்று பெண்கள் அவரை அடித்துத் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விரிவாக அறிய கண்ணமங்களம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் விஜயகுமாரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.

“சிறுவனின் தாய் திலகவதி, பாக்யலட்சுமி, கவிதா ஆகிய மூன்று பெண்களும் சகோதரிகள். இந்த மூன்று பெண்களுடைய‌ தாயார் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.

இவர்களின் மூத்த சகோதரி செம்பகவள்ளி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும், இவர்களுடைய தந்தை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளனர்.

மேலும் சிறுவன் ஆறு மாத கருவில் இருந்த போதே அவனது தந்தையும் இறந்து விட்டார்.

முன்பு திலகவரிக்கு உடல்நிலை சரியில்லாதபோது, வந்தவாசியில் உள்ள தர்காவில் இருக்கும் சாமியாரை பார்த்ததால் அவருக்கு உடல்நிலை சரியானதாக விசாரணையில் மூன்று பேரும் கூறியுள்ளனர்.

தன்னைப்போலவே மகனுக்கும் உடல்நலை முடியாமல் போகவே, அவரை வந்தவாசியில் உள்ள சாமியாரிடம் அழைத்து செல்ல பேருந்தில் வந்ததாகவும், வழியில் சிறுவனுக்கு பேய் பிடித்து விட்டதாகக் கருதி முஸ்லிம் தர்கா செல்லாமல் கண்ணமங்களம் பகுதியிலேயே அவர்கள் இறங்கியுள்ளனர்.

அங்குதான் இந்த சம்பவம் நடந்துள்ளது,” என்று விஜயகுமார் கூறினார்.
உயிரிழந்த சிறுவன்

தொடர்ந்து விவரித்த அவர், “பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள பகுதியில் அந்த சிறுவனுக்கு பேய் வந்ததாக கூறி மூன்று பெண்களும் பிடித்துள்ளனர்.

அதில் தாயார் சிறுவனின் நாக்கை இழுத்தவாறு வாயைப் பிடித்திருந்தார். மற்றொரு பெண் சிறுவனின் மேல் அமர்ந்திருந்தார்.

மூன்றாவது பெண் சிறுவனின் கழுத்தின் மீது காலை வைத்து மிதித்தபடி இருந்துள்ளார். இதனால் சிறுவன் அழுத்தம் அதிகமாகி சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது என தெரிய வந்துள்ளது,” என்று கூறினார்.

“பின்னர் இரண்டு சகோதரிகளும் சேர்ந்து, மூன்றாவது சகோதரியை தாக்க முற்பட்டபோது காவல்துறையினர் சம்பவ பகுதிக்குச் சென்று அந்த பெண்ணை மீட்டனர்.

அந்த மூன்று பெண்களும் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது போல தோன்றுகிறது,” என்று காவல் அதிகாரி தெரிவித்தார்.

“இந்த மூன்று பெண்களுடைய குடும்பத்தில் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இறந்துள்ளனர்.

தற்சமயம் இவர்களுக்கு ஆதரவு யாருமில்லாத நிலையில், சிறுவனை பார்த்துக்கொண்டு தனியாகவே இருந்துள்ளனர்.

கொஞ்சம் கொஞ்சமாக மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றியுள்ளதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் சிறுவனுக்கு பேய் வந்ததாக கூறி அவனை கொலை செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது,” என உதவி காவல் ஆய்வாளர் விஜயகுமார் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version