ilakkiyainfo

கொரோனா பயணத் தடையை மீறிய பொதுமக்களை முட்டியிட வைத்த இலங்கை ராணுவத்தினர்tured test

பயணத்தடையை மீறிய பொதுமக்களை முட்டியிட வைத்த இலங்கை ராணுவத்தினர் நீக்கம்

இலங்கையில் பொதுமக்கள் சிலரை முழங்காலில் இருக்க வைத்து ராணுவத்தினர் தண்டித்த சம்பவம் தொடர்பாக கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பயணத்தடை அமலில் உள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் வீதிக்கு வந்த பொதுமக்கள் சிலரை முழங்காலில் வைத்து தண்டனை வழங்கிய ராணுவத்தினர்,

அவர்களின் பணியிலிருந்து நேற்று, (சனிக்கிழமை) மாலை அகற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தினர் ஒருசிலரின் முறையற்ற நடத்தை குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, ராணுவ தளபதியின் உத்தரவுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ராணுவம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள வீதியொன்றில், பொதுமக்களை ராணுவத்தினர் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் படங்கள் வைரலானதை அடுத்து, அது தொடர்பில் ராணுவ போலீசார் ஆரம்ப கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.

இதேவேளை பொறுப்பான ராணுவ அதிகாரியும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முடிவடிந்த பின்னர், சம்பந்தப்பட்ட ராணுவத்தினருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராணுவம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

ஏறாவூர் – ‘மிச் நகர்’ எனும் பகுதியில் சனிக்கிழமை காலை வீதியில் பயணித்த பொதுமக்கள் சிலரை தடுத்து வைத்த ராணுவத்தினர், அவர்களை தண்டிக்கும் வகையில் கைகளை உயர்த்தியவாறு முழங்காலில் இருக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பயணத்தடையை மீறிய பொதுமக்களை முட்டியிட வைத்த இலங்கை ராணுவத்தினர் நீக்கம்

இதன்போது சம்பவத்தை படம் பிடித்தவர்கள், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட, குறித்த படங்கள் வைரலாகின.

இதனையடுத்து ராணுவத்தினரின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் விமர்சிக்கத் தொடங்கினர்.

‘மனிதாபிமானமற்ற நடவடிக்கை’

இச்சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்; “நாடு சர்வதிகாரத்தை நோக்கிச் செல்வதையே ஏறாவூர் பொதுமக்கள் ராணுவத்தினரால் முழங்காலில் வைக்கப்பட்டமை எடுத்துக் காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.

“இந்த நாடு ஜனநாயக நாடு, சட்டவாட்சி அமுலில் உள்ள ஒரு நாடு. எனவே எல்லாவற்றையும் சட்ட ரீதியாகவே அணுக வேண்டும். சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் எனும் அரசியலமைப்பு வாசகத்துக்கு ஏற்ப – எல்லோருக்கும் சமமாக சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். பாரபட்சமாக சட்டம் அமல்படுத்தப்படக் கூடாது”.

இம்ரான் மஹ்ரூப்

“ஏறாவூர் சம்பவம் சட்டத்துக்கு புறம்பானது. இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்றது.

வீதியில் முட்டுக்காலில் வைக்கப்பட்ட இந்த நிகழ்வு – சம்பந்தப்பட்டவர்களின் சுயகௌரவத்தைப் பாதித்திருக்கிறது” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இந்த குறித்து கூறியுள்ளார்.

மேலும் பயணத்தடை அமலில் உள்ளபோது ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்வதைக் காண முடிவதாகவும், ஏறாவூரில் தமது அத்தியவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வெளியில் வந்தவர்கள் இவ்வாறு ராணுவத்தினரால் தண்டிக்கப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன், ‘இந்த நடவடிக்கை சித்திரவதைகளுக்கு எதிரான உடன்படிக்கையின்படி, ஒரு குற்றமாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ராணுவத்தால் வழங்கப்பட்ட இந்தத் தண்டனை, இழிவான ஒரு செயற்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பிகா சற்குணநாதன்

‘இலங்கை அரசியலமைப்பின் 11ஆவது உறுப்புரையானது மனிதாபிமானமற்ற அல்லது இழிவான தண்டனையை தடைசெய்கிறது’ எனவும், சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் வசித்துவரும் இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஷமீலா யூசுப் அலி – இந்த சம்பவம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “பசி, தாகம், நோய்கள், அவமானம் இதற்கெல்லாம் அப்பால் ‘நீதி’ என்ற ஒரு பொருள் உள்ளது.

அது அதிகார வலிமையற்ற எளிய மனிதர்களை மட்டும் பொறுக்கியெடுத்து நசுக்கும். தோற்றுப் போய் முழங்காலில் இருப்பது முழு தேசத்தினதும் கதியற்ற தன்மைதான்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version