தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இதன்போது, குற்றம் உறுதிச் செய்யப்படும் நபர்களுக்கு எதிராக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனையை வழங்குவதற்கும் , இந்த இரு தண்டனைகளையும் வழங்குவதற்கும் அனுமதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

இதன்போது அவர் மேலும் கூறியதாவது ,

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்றுகாலை(22.06.2021) ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 41 ஆயிரத்து 914 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.

இதன்போது , மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் 4, 5 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு கீழும், தண்டனைச் சட்டக்கோவையின்  264 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு  கீழும்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில், குற்றம் உறுதிச் செய்யப்படும் நபர்களுக்கு எதிராக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாதகால சிறைத்தண்டனை  வழங்குவதற்கு  அனுமதி உள்ளதுடன், இந்த இரு  தண்டனைகளையும் சந்தேக நபர்களுக்கு வழங்க முடியும் என்றார்.