Site icon ilakkiyainfo

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய விவகாரம் : இதுவரை 26 பேர் கைது : மேலும் 16 பேருக்கு வலைவீச்சு

கல்கிஸ்ஸை பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட அறையொன்றில் தடுத்துவைத்து 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளமூடாக பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் 16 பேரை கைது செய்ய உள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கல்கிஸ்ஸை பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட அறையொன்றில் தடுத்துவைத்து 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளமூடாக பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே 25 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், நேற்று வெள்ளிக்கிழமை மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விகாரம் தொடர்பில், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக விசேட விசாரணைப்பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்ற நிலையில், கடந்த வியாழக்கிழமை சிறுமியை விலைக்கு பெற்றுக் கொண்டதாக கூறப்படும் நான்கு பேரை கைது செய்திருந்தனர்.

இரத்தினக்கல் வர்த்தகர், கப்பலின் கெப்டனாக செயற்பட்டு வரும் நபரொருவர்,  அவருக்கு உதவியாளராக செயற்பட்ட ஒருவர்  உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறுமியை விலைக்கு பெற்றுக்கொண்டதாக கூறப்படும் 20 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமியை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தமை தொடர்பில் சிறுமியின் தாய் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிறுமியை விலைக்கு பெற்றுக் கொண்டதாக கூறப்படும் மேலும் 16 பேர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், தொழிநுட்ப ரீதியாக சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படவுள்ளனர்.

இதன்போது, சிறுமியின் தொலைப்பேசி தொடர்பில் இடம்பெற்றுவரும் சோதனை நடவடிக்கைகளுக்கமைய, மேலும் பலர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பில் தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கமைய மேற்படி விவகாரம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக விசேட விசாரணைப்பிரிவினர் மற்றும் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version