ilakkiyainfo

EURO 2020: தோல்வியையே சந்திக்காத இத்தாலி Vs பெல்ஜியம்… காலிறுதியில் வெல்லப்போவது யார்?!

இத்தாலிக்கு எதிராக இந்த யூரோ கோப்பையில் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் பெரிய அணிகளுடன் இத்தாலி இதுவரை மோதவில்லை. ஆனால், பெல்ஜியம் நடப்பு சாம்பியன் போர்ச்சுகலையே வீழ்த்திவிட்டு வந்திருக்கிறது.

2020 யூரோ கோப்பையின் பரபரப்பான நாள் இன்று. அரையிறுதிக்குத் தகுதிபெறப்போவது யார் எனத் தீர்மானிக்கும் காலிறுதிப்போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன.

இரவு 9.30 மணிக்குத் தொடங்கும் முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து – ஸ்பெயின் அணிகள் மோத இருக்கும் நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் இதுவரை யூரோ கோப்பையில் தோல்வியையே சந்திக்காத இத்தாலி மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இப்போட்டி ஜெர்மனியின் மூனிச் நகரில் நடைபெற இருக்கிறது.

இத்தாலி Vs பெல்ஜியம்!

இத்தாலியும், பெல்ஜியமும் கடந்த 2016 யூரோ கோப்பையிலும் நேருக்கு நேர் மோதின. இதில் இத்தாலி 2-0 என வெற்றிபெற்றது.

இந்த யூரோ கோப்பையைப் பொருத்தவரை பெல்ஜியம், இத்தாலி இரண்டுமே தோல்வியை சந்திக்காத டாப் அணிகள். பெல்ஜியம் லீக் சுற்றில் ரஷ்யாவை 3-0 எனவும், ஃபின்லாந்தை 2-0 எனவும், டென்மார்க்கை 2-1 எனவும் தோற்கடித்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகலை 1-0 என தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்.

இத்தாலி லீக் சுற்றில் துருக்கி, சுவிட்சர்லாந்து அணிகளை 3-0 என தோற்கடித்ததோடு வேல்ஸை 1-0 எனவும் தோற்கடித்து லீக் சுற்றில் தனக்கு எதிராக எந்த அணியும் கோல் போடமுடியாமல் விளையாடியது.

ஆனால், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஆஸ்திரியாவுக்கு எதிராக எக்ஸ்ட்ரா டைமில் 2 கோல்கள் அடித்து முன்னிலையில் இருந்தபோது கடைசி நேரத்தில் ஆஸ்திரிய வீரர் ஒரு கோல் அடிக்க, இத்தாலிக்கு எதிராக இந்த யூரோ கோப்பையில் அடிக்கப்பட்ட முதல் கோலாக அது மாறியது. 2-1 என வெற்றிபெற்றது இத்தாலி.

EURO 2020 | Belgium playersTHANASSIS STAVRAKIS

வெற்றி யாருக்கு?!

இத்தாலிக்கு எதிராக இந்த யூரோ கோப்பையில் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் பெரிய அணிகளுடன் இத்தாலி இதுவரை மோதவில்லை.

ஆனால், பெல்ஜியம் நடப்பு சாம்பியன் போர்ச்சுகலையே வீழ்த்திவிட்டு வந்திருக்கிறது. அதனால் இத்தாலியைவிடவும் நம்பிக்கையோடு இருக்கிறது பெல்ஜியம்.

காயம் அடைந்திருக்கும் பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர்களான கெவின் டி ப்ரூய்ன் மற்றும் ஈடன் ஹஸார்ட் இருவரும் இன்று விளையாடுவார்களா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இருவரும் விளையாடவில்லை என்றால் அது பெல்ஜியத்துக்கு பாதிப்பை உண்டாக்கலாம்.

இத்தாலி போன்ற ஒரு அணிக்கு எதிராக, பெல்ஜியம் தங்களது வலுவான லெவனை களத்தில் இறக்கவேண்டும்.

“இத்தாலி முதல் நொடியிலிருந்தே நிச்சயம் தாக்கும். அவர்களின் தாக்குதல் கட்டுக்கோப்பாகவும், ஆற்றல் மிக்கதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

பெல்ஜியத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு வீரருக்கும் தாங்கள் என்ன செய்யவேண்டும், அணியில் தங்களின் பங்கு என்ன என்பது தெளிவாகத் தெரியும்.

போர்ச்சுகலுக்கு எதிரான வெற்றி எங்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது” என்கிறார் பெல்ஜியம் அணியின் பயிற்சியாளரான ராபர்டோ மார்டினெஸ்.

“நாங்கள் இதுவரை சந்தித்த மிகக் கடினமான எதிரியாக இத்தாலி இருக்கும். அவர்கள் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுவருகிறார்கள்.

அவர்களின் வெற்றியை முடிவுக்குக் கொண்டுவருவது எங்களுக்கு சவாலானதாக இருக்கும்’’ என்கிறார் போர்ச்சுகலுக்கு எதிராக கோல் அடித்த தோர்கன் ஹஸார்ட்.

 

Exit mobile version