இது குறித்த உண்மையான தகவல்கள் வெளிப்படுத்தப்படாவிட்டாலும் தற்போது நாட்டில் நூறு அல்லது ஆயிரக்கணக்கான டெல்டா தொற்றாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மாத்திரம் உறுதியாகக் கூற முடியும் என்று சுகாதார கொள்கை நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் வைத்தியர் ரவி ரன்னன் எலிய தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை மேலும் 14 டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமை கவலை அளிக்கிறது. எதிர்பார்த்தபடி, சமீபத்திய கண்டுபிடிப்புகள்  டெல்டா பரவியுள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

தற்போது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் சோதனைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை என்பதால் இதைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படும். இதன் விளைவாக அடுத்த சில மாதங்களில் இலங்கையில் ஆயிரக்கணக்கான இறப்புகளைக் காண வாய்ப்புள்ளது.

நாடு முழுவதிலுமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 142 மாதிரிகளில் பத்தில் ஒன்று டெல்டா என்பது கவலை அளிக்கிறது. உண்மையான விவரங்கள் எமக்கு தெரியாது.

ஆனால் இப்போது நாட்டில் பல நூறு அல்லது ஆயிரக்கணக்கான டெல்டா தொற்றாளர்கள் உள்ளனர் என்று உறுதியாகக் கூறுகிறோம்.

இதைக் கட்டுப்படுத்த எம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் வைத்தியர் ரவி ரன்னன் எலிய தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.