ilakkiyainfo

பாலைவனத்தில் 100க்கு மேல் புதிய ஏவுகணை தளங்கள் அமைக்கிறதா சீனா? அணு ஆயுதங்கள் குவிக்கவா?

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தவல்ல சைலோ எனப்படும் தளங்களை தன் பாலைவனப் பகுதி ஒன்றில் நிறுவுகிறது சீனா என்று அமெரிக்கப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனா தன் அணு ஆயுத வலுவை அதிகரிப்பது கவலைக்குரியது என்றும், இது குறித்து அமெரிக்கா உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது அமெரிக்கா.

சீனா தன் மேற்கு மாகாணத்தின் பாலைவனப் பகுதிகளில் இந்த சைலோக்களை கட்டமைத்து வருவதாக வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட நாளேடுகள் செய்தி வெளியிட்டன.

சீனாவுக்கு தன் ஆயுதங்களை மறைப்பது சிரமமாகிவிட்டது என அமெரிக்காவின் உள் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார். சீனா தன் பல தசாப்த அணு ஆயுத கொள்கைகளில் இருந்து மாறுபட்டு நடப்பதாகத் தெரிகிறது எனவும் பிரைஸ் விமர்சித்துள்ளார்.

கவலைக்கு உள்ளாக்கும் சீனாவின் ஆயுதக் குவிப்பு

சமீபத்தில் வெளியாகி இருக்கும் செய்திகள், நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் சீனாவின் அணு ஆயுத எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கலாம் என்பதையே காட்டுவதாகவும் கூறியுள்ளார் நெட் பிரைஸ்.

சீனா ஆயுதங்களை அதிகரிப்பது கவலையளிக்கிறது என்ற போதிலும், சீனாவின் நோக்கம் என்ன என்பது குறித்து சந்தேகம் எழுவதாகவும் கூறியுள்ளார்.

அணு ஆயுத அபாயத்தைக் குறைக்க எதார்த்தத்தில் சாத்தியமான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் அவர்.

இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மறு பக்கம் சீனாவின் அரசு செய்தித் தாளான குளோபல் டைம்ஸ், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நிறுவனங்கள், தொடர்ந்து சீனாவின் அணு ஆயுத அதிகரிப்பு மற்றும் புதிய ஏவுகனை சைலோக்கள் அமைப்பது குறித்தும் மதிப்பீடுகளைச் செய்து வருகின்றன என்று கூறியுள்ளது.

அமெரிக்கா வதந்திகளின் அடிப்படையில் இப்பிரச்சனையைக் கிளப்பி விட்டிருக்கிறது. பொது மக்களை சீனாவின் அணு ஆயுதத்தின் பக்கம் திசை திருப்பி, சீனாவை அதற்கு எதிர்வினையாற்ற வைப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம் எனவும் கூறியுள்ளது குளோபல் டைம்ஸ்.

சீனாவின் அணு ஆயுத திறனை வளரவிடாமல் தடுப்பதும், இது தொடர்பாக சர்ச்சையை உண்டாக்குவதும்தான் அமெரிக்காவின் நோக்கம் எனவும் அப்பத்திரிகை குற்றம்சாட்டி உள்ளது.

இதுவரை இந்த மாதிரியான செய்திகளுக்கு சீனா அதிகாரபூர்வமாக எந்த ஒரு பதிலையும் கூறவில்லை. ஆனால் குளோபல் டைம்ஸ் பத்திரிகை சீன அரசின் பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை உண்மையான சூழலை கருத்தில் கொண்டு தான் எழுதுகிறதா எனத் தெரியவில்லை எனவும் குளோபல் டைம்ஸ் தன் செய்தியில் கேள்வி எழுப்பியிருக்கிறது.

சைலோ என்றால் என்ன?

ஏவுகனை சைலோ மாதிரிப் படம்

 

செலுத்துவதற்காக பேலிஸ்டிக் ஏவுகணைகள் போன்றவை தயாராக வைக்கப்படும் குழி போன்ற தளங்கள்தான் சைலோக்கள்.

மேலும் இந்த சைலோக்களில் வைத்தே ஏவுகனைகளில் பராமரிப்புப் பணிகளைச் செய்யவோ, பழுது பார்க்கவோ, எளிதில் ஏவவோ முடியும்.

சீனா 119 சைலோக்களை அதன் கன்சு மாகாணத்தில் இருக்கும் பாலைவனப் பகுதிகளில் நிறுவுவதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கூறியுள்ளது.

சீனாவின் மாவோ சிட்டுக் குருவிகளை கொல்ல உத்தரவிட்டது ஏன்?
ஷி ஜின்பிங் எச்சரிக்கை: “சீன உள்விவகாரத்தில் தலையிட துணிந்தால் தலையை நசுக்குவோம்”

இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால், சீனாவின் அணு ஆயுத கொள்கையில் வரலாறு காணாத மாறுதல்கள் ஏற்படலாம் எனவும் கூறியுள்ளது.

இந்த சைலோக்களில் சீனாவின் DF41 ஏவுகனைகள் வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இது பல அணு ஆயுதங்களை ஒன்றாக எடுத்துச் சென்று அமெரிக்காவைத் தாக்கும் வலிமை உடையது எனவும் கூறப்படுகிறது.

ஆனால் குளோபல் டைம்ஸ் பத்திரிகையோ, DF41 ஏவுகனை திட எரிபொருளில் இயங்கக் கூடியது என்றும், அந்த ஏவுகணை ஹை மொபிலிட்டி லாஞ்சர் வாகனம் மூலம் ஏவப்படக்கூடியது எனவும் கூறியுள்ளது.

ஷி ஜின்பிங்கின் செய்தி

சீனா அமெரிக்கா

 

சமீபத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தன் நூற்றாண்டை நிறைவு செய்ததற்காக கொண்டாடப்பட்ட விழாவில், பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், சீனாவை சீண்ட நினைத்தாலோ அல்லது சீனாவின் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்தாலோ, அவர்களின் தலை சீனப் பெருஞ்சுவற்றில் அடித்து நொறுக்கப்படும் என கூறினார்.

மேலும் சீனா தன் ராணுவ பலத்தை அதிகரிக்கும் என்றும், தைவானை தன்னோடு இணைக்கும் என்றும், ஹாங்காங்கில் சமூக அமைதியைக் நிலை நாட்டும் எனவும் கூறினார்.

சீனாவின் அணு ஆயுத மதிப்பீடு

அமெரிக்க காங்கிரஸுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத் தலைமையகம் கொடுத்த அறிக்கையில் சீனாவிடம் சுமார் 200 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சீனா தன் ராணுவத்தை நவீனமயமாக்கி வருவதால், இந்த ஆயுதங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பகுப்பாய்வாளர்களின் கணிப்புப் படி அமெரிக்காவிடம் 3,800 அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இதில் 1,357 ஆயுதங்கள் ஏவத் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

புதிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் ரஷ்யாவுடன் இணையுமாறு சீனாவுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆனால் சீனா இந்த ஒப்பந்தத்தில் இணைவதாக இல்லை.

ரஷ்யா மற்றும் அமெரிக்காவை ஒப்பிடும் போது, தங்களிடம் மிகக் குறைவான அணு ஆயுதங்களே இருப்பதாகக் கூறி வருகிறது சீனா.

இரு தரப்புக்கும் மரியாதை கொடுக்கு விதத்தில் ஏற்பாடு செய்யப்படும் பேச்சு வார்த்தைக்கு சீனா எப்போதும் தயாராக இருப்பதாகவும் அது கூறுகிறது.

மேற்குலகின் கருத்துகளைக் கண்டு கொள்ளாமல், சீனா தன் பாதுகாப்புக்குத் தேவையான ஆயுதங்களை உருவாக்க வேண்டும் என குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

 

Exit mobile version