Site icon ilakkiyainfo

கொரோனாவில் காதல்; மூதாட்டியை கரம் பிடித்த முதியவர்

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த காக்கநாடு பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ்(வயது73). கேட்டரிங் உரிமையாளர். வர்கீசுக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மகன்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளிமாநிலங்களில் வசித்து வருகிறார்கள். இதனால் வர்கீஸ் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக தொழிலில் முடக்கம் ஏற்பட்டதால் இவர் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இந்நிலையில் முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி தடுப்பூசி போடும் முகாம்கள் கொச்சியில் நடந்தது.

பரிசோதனை மையத்தில் சந்திப்பு

இதனால் கொரோனா பரிசோதனை முகாமுக்கு வர்கீஸ் சென்றபோது, அங்கு அதே பகுதியை சேர்ந்த அஸ்வதி(68) என்பவரை சந்தித்தார். அஸ்வதிக்கும் திருமணமாகி மகள் உள்ளார். இவரது கணவர் லண்டனில் டாக்டராக இருந்தார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து போனார். இதனால் அஸ்வதி கொச்சியில் தனியாக வசித்து வந்தார். அங்கு ஒரு அழகுநிலையம் நடத்தி வந்தார்.வர்கீஸ் சென்ற கொரோனா பரிசோதனை மையத்திற்கு இவரும் சென்றார். அங்கு இருவரும் சந்தித்து மனம் விட்டு பேசினர்.

முதிய வயதில் தனிமையின் கொடுமை பற்றி அவர்கள் பேசிக்கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொண்ட நிலையில் அடுத்தகட்டமாக திருமணம் செய்து கொண்டால் என்ன? என்று யோசித்தனர்.இந்த யோசனையை அவர்கள் தங்களின் மகன், மகள்களிடம் கூறினர்.

வெளியூர்களில் வசிக்கும் மகன்கள் தந்தையின் ஆசைக்கு குறுக்கே நிற்க விரும்பவில்லை. வர்கீஸ், அஸ்வதியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டனர்.

திருமணம்

இதுபோல அஸ்வதியின் மகளும், தாயார் அவரது காதலன் வர்கீசை மணம் முடிக்க ஒப்புக்கொண்டார். இதையடுத்து வர்கீஸ்-அஸ்வதி திருமணம் நேற்று முன்தினம் கொச்சியில் எளிமையாக நடந்தது. இருவரின் மகன், மகள் மற்றும் பேரன், பேத்திகள் முன்னிலையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

காதலுக்கு வயது கிடையாது. ஒருவர் மீது மனதில் அன்பு உருவானால் அது எந்த நேரத்திலும் வெளிப்படும் என்பது இவர்களின் காதல் திருமணம் உறுதிபடுத்தி உள்ளது.

Exit mobile version