ilakkiyainfo

ஹைதி: சுட்டுக் கொல்லப்பட்ட அதிபர் ஜொவினெல் மொய்சே; படுகொலையின் பின்னணி என்ன?!

ஹைதி அதிபர் ஜொவினெல் மொய்சே படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், குற்றவாளிகள் 4 பேரையும் சுட்டுக்கொன்றது ஹைதி காவல்துறை.

அமெரிக்க கண்டத்தில் இருக்கும் கரீபியன் தீவுக்கூட்டத்தில் ஒன்று தான் ஹைதி நாடு. கியூபாவை அடுத்து இரண்டாவது பெரிய தீவாகக் கருதப்படும் இந்த நாட்டில், கடந்த சில ஆண்டுகளாக சட்ட ஒழுங்கு பிரச்சனையானது மாபெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்தது.

நாட்டுக்கே சவால் விடும்படி தொடர்ந்து அதிகரித்து வந்த குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக தற்போது ஹைதி நாட்டின் அதிபரே சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.

அவரது மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு அதிபரையே சுட்டுக்கொள்ளும் அளவுக்கு அந்த நாட்டின் நிலைமை மாறியதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று, ஹைதி நாடு கடந்த 10 ஆண்டுகாலமாக சந்தித்து வந்த புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களும், அதனால் அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட வாழ்வாதார இழப்பு.

இப்படி, தொடர்ச்சியான பாதிப்புகளால் ஒரு பக்கம் உணவு, மருந்து, பெட்ரோலியம் என அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் அதிகரிக்க, மறுபக்கம் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் திருட்டு, கொள்ளை, கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கினர்.

ஹைதி நாட்டின் தனிநபர் வருமானம் வேகமாகக் குறைந்தது, அதேவேளை குற்றச்செயல்களின் கூடாரமாக மாறியது அந்நாடு.

ஜொவினெல் மொய்சே

இந்நிலையில் தான், கடந்த 2017-ம் ஆண்டு ஹைதியின் அதிபராக பதவியேற்றுக்கொண்டார் அதிபர் ஜொவினெல் மொய்சே! 53 வயதான இவர் ஹைதியின் அதிபரானது முதல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.

ஒரு சர்வாதிகாரியாக செயல்பட்ட மொய்சே, அந்நாட்டு மக்களிடம் பெருமளவு வெறுப்பை சம்பாதித்தார்.

அந்நாட்டு கிளர்ச்சியாளர்களும், அரசுக்கு எதிராக மிகத்தீவிரமாக செயல்படத் தொடங்கினர். நாளடைவில் ஹைதி நாட்டின் நிலைமை முன்பைவிட மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டது.

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையை மேலும் உயர்த்தினார் அதிபர் ஜொவினெல் மொய்சே.

இதனால் ஹைதியின் மக்கள் தலைநகர் போர்ட்-அயு-பிரின்ஸில் திரண்டு அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.

ஏற்கனவே நாடு கடும் பொருளாதார சரிவில் சிக்கித் திணரும் சூழலில் அதிபர் மீதான ஊழல் குற்றச்சாட்டு அவர் மீதான எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தின.

இதுபோன்ற தொடச்சியான போராட்டங்கள், கிளர்ச்சியாளர்களின் வன்முறை சம்பவங்களைக் காரணம் காட்டி 2019-ஆம் ஆண்டு நடைபெற வேண்டியத் தேர்தலை, நடத்தாமல் ஒத்தி வைத்தார் அதிபர் மொய்சே.

இதனால் எதிர்க்கட்சிகளும் கடும் அதிருப்தியில் இருந்தனர். பின்னர் கொரோனா பேரலையில் உலகமே அடித்துச்செல்ல, ஏற்கனவே பாதாளத்தில் இருந்து வந்த ஹைதி முற்றிலுமாக முடங்கியது.

இந்நிலையில் அதிபர் ஜொவினெல் மொய்சே கொல்லப்பட்டிருப்பது ஹைதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் தான், அதிபர் மொய்சேவுக்கான பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதத்தோடு முடிவடைந்தது.

ஆனால், யாரும் எதிர்பாராதபடி, “தான் தாமதமாக பதவியேற்றுக்கொண்டதால், இன்னும் ஓராண்டுகள் என் பதவி தொடரும்.” என தனது பதவிக்காலத்தை நீட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் மொய்சே!

அதனைத்தொடர்ந்து, அதிபருக்கான எதிர்ப்பு மேலும் வலுக்கத்தொடங்க, ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்த கிளர்ச்சியாளர்களின் குறி, மொய்சேவின் உயிருக்கு வைக்கப்பட்டது.

இதனையடுத்து, ஹைதியின் தலைநகரில் இருக்கும் ஒரு தனியார் குடியிருப்பு வாளாகத்தில், தனது மனைவியோடு தங்கியிருந்த அதிபர் ஜொவினெல் மொய்சே, ஒரு கிளர்ச்சியாளர் குழுவால் சரமாரியாக சுடப்பட்டார்.

நேற்று நள்ளிரவில் நடந்த இந்த கோர நிகழ்வில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அதிபர் மொய்சே.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரது மனைவி மார்டின் போராடிக்கொண்டிருக்க, பாதுகாப்புக்கு இருந்த காவலர்களையும் பிணையக் கைதிகளாக பிடித்துக்கொண்டு, தப்பிச்சென்றுள்ளனர் அந்தக் கொலையாளிகள்.

சம்பவம் நடந்த இடத்தில், உயிருடன் மீட்கப்பட்ட அவரது மனைவி மீட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் மருத்துவமனையில் சேர்ர்த்தனர் கைதி காவல்துறையினர்.

இதனையடுத்து, கொலையாளைகளை கண்டுபிடிப்பதற்காக தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர், 4 பேர் கொண்ட குழுவை சுற்றி வலைத்தனர்.

நீண்டநேரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், கொலையாளிகள் 4 பேரையும் சுட்டுக்கொன்றனர் ஹைதி காவல்துறையினர்.

இதுகுறித்து பேசிய ஹைதியின் தலைமை காவல் அதிகாரி லியான் சார்லஸ், “குற்றவாளிகளுடன் நீண்ட நேரம் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 2 பேரைப் பிடித்து விசாரணை செய்து வருகின்றோம். குற்றவாளிகளில் சிலர் ஸ்பானிஷ் மொழி பேசினர்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது, ஹைதியின் இடைக்கால பிரதமராக கிளாட் ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் கொலை சம்பந்தமாக பேசிய ஜோசப், “அதிபர் கொலை செய்யப்பட்டாலும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.

இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.

ஹைதியின் அதிபர் மொய்சே படுகொலைக்கு, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Exit mobile version