ilakkiyainfo

குடும்ப ஆட்சியும் இலங்கையும்

சமகால அரசியலில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று அண்மையில் நாமல் ராஜபக்‌ஷ சொல்லியிருந்த கருத்து பெரும் நகைமுரணான வரவேற்பைப் பெற்றிருந்தது.

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி, அவரின் அண்ணன் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் மற்றும் முக்கிய பொருளாதாரம் சார்ந்த அமைச்சுக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறார்,

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியாடாத, தேசியப்பட்டியலில் கூட பெயர் இடம்பெறாத, ஆனால் இன்று பாராளுமன்றம் ஏகியுள்ள தம்பி பெசில் ராஜபக்‌ஷ நிதி அமைச்சர், அண்ணன் சமல் ராஜபக்‌ஷ அமைச்சரவை அமைச்சர், அவரின் மகன் சஷீந்திர ராஜபக்‌ஷ இராஜாங்க அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்‌ஷ அமைச்சரவை அமைச்சர், ராஜபக்‌ஷர்களின் சகோதரியான காந்தனி ராஜபக்‌ஷ ரணவக்கவின் மகன் நிபுன ரணவக்க மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். மஹிந்தராஜபக்‌ஷவின் இன்னொரு மகனான யோஷித ராஜபக்‌ஷ பிரதமரின் அலுவலர்களின் முதல்வர்.

2015 முன்னர் இருந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த நிஷாந்த விக்ரமசிங்ஹ, மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்‌ஷவின் சகோதரர்.

அதே ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருந்த சமீந்திரராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷவின் இன்னொரு மகன். 2006 காலப்பகுதியில் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டவரும், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் உக்ரேன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்தவருமான உதயங்க வீரதுங்க மஹிந்த ராஜபக்‌ஷவின் தாயின் சகோதரியின் மகன்.

முன்னர் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட ஜாலிய விக்ரமசூரிய மஹிந்த ராஜபக்‌ஷவின் தந்தையின் சகோதரர் டீ.எம்.ராஜபக்‌ஷவின் மகளின் மகன். மத்தளை விமானநிலையம் கட்டப்பட்ட காலத்தில் சிவில் விமானசேவை அதிகாரசபையின் தலைவராக இருந்த பிரசன்ன விக்ரமசூரிய, ஜாலிய விக்ரமசூரியவின் தம்பியாவார். நாமல் ராஜபக்‌ஷவின் கருத்து நகைமுரணான வரவேற்பைப் பெற்றமைக்கு இந்தப் பின்புலம்தான் காரணம்.

குடும்ப ஆட்சி என்று தமிழில் நாம் சுட்டுவதை ஆங்கிலத்தில் நெபொடிஸம் (Nepotism) என்பார்கள்.

இது nepotismo என்ற இத்தாலிய வார்த்தையிலிருந்து வந்தது. இந்த வார்த்தையின் வேர் nepos என்ற இலத்தீன் வார்த்தை. இலத்தீனில் nepos என்றால் nephew மருமகன் என்று அர்த்தம்.

17ஆம் நூற்றாண்டிற்கு முன்னர், பாப்பரசர்களின் தமது அதிகாரத்தை தமக்கடுத்து, தமது மருமகன்களுக்கு வழங்கிய வழக்கத்தைக் குறித்து இந்தச் சொல் உருவாகியிருக்கலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.

ஆனால் இந்தச் சொல்லின் பயன்பாடு, ஜனநாயக வௌியில்தான் முக்கியத்துவம் மிக்கதாக அமைகிறது.

ஃபிரஞ்ச் புரட்சிக்கு முன்னர், அறுதிப்பலங்கொண்ட முடியாட்சியாக இருந்த பதின்நான்காம் லூயியின் ஆட்சியின் போது,

தனது அறுதிப்பலத்தைக் குறிக்க பதின்நான்காம் லூயி சொன்னதான சொல்லப்படும் கூற்றுதான் “லீ டட் சீ முஆ” (l’etat, c’est moi), அதாவது “அரசு, அது நானே” (நானே அரசு). கவனிக்க, அரசன் நானே என்று லூயி சொல்லவில்லை,

அரசே நான்தான் என்பதுதான் அவரது கூற்று. இத்தகைய அறுதிப்பலங்கொண்ட முடியாட்சியை வீழ்த்தித்தான் பிற்காலத்தில் நவீன ஜனநாயகம் பிறக்கிறது.

ஃபிரஞ்ச் புரட்சியின் சிந்தாந்தகர்த்தாக்களில் ஒருவரான மொன்டஸ்க்யு “அதிகாரப் பிரிவுக் கோட்பாட்டை” முன்வைத்தது அறுதிப்பலங்கொண்ட தனிநபரின், அல்லது குழுக்களின் ஆட்சி உருவாகிவிடக்கூடாத என்பதனால்தான்.

ஓர் அரசின் மூன்று பாகங்களான சட்டவாக்கம், சட்டநிர்வாகம், நீதி ஆகியன ஒரு நபரின் அல்லது ஒரு குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதுதான் மொன்டெஸ்க்யூவின் கருத்தின் அடிப்படை. “அரசு, அது நானே” என்ற நிலை ஜனநாயகத்துக்கு உவப்பானதல்ல என்பதுதான் அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டின் தாற்பரியம். ஆகவேதான் குடும்ப ஆட்சி ஜனநாயக விரோதமானதாகக் கருதப்படுகிறது.

இந்த இடத்தில்தான் சிக்கலானதொரு மாற்றுக்கருத்து இடையீடு செய்கிறது. இங்கு கோட்டாபய, மஹிந்த, சமல், சஷீந்திர, நாமல் ஆகிய ராஜபக்‌ஷர்களும், நிபுன ரணவக்கவும் தேர்தலில் கோட்டியிட்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள்.

ஆகவே, இதனை ஜனநாயக விரோதம் என்று எப்படிச்சொல்லலாம் என்ற கேள்வியில் சில நியாயங்கள் தென்படலாம்.

​பெசிலின் நியமனம் வௌித்தோற்றத்திற்கு ஜனநாயக விரோதமானது என்பதில் மாற்றக்கருத்துக்கள் இருக்கமுடியாது.

ஆனால், பெசில் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார் என்பதில் பெரும் ஐயம் எழ முடியாது.

இதற்குக் காரணம் எமது நாட்டின் அரசியல் கலாசாரம். எமது நாடு என்பதை விட, தெற்காசியாவின் அரசியல் கலாசாரம் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

ஜனநாயகம் என்பது எமது நாடுகளில் போராடிப் பெறப்பட்ட ஒன்றல்ல. ஃபிரன்ஞ்ச் புரட்சியைப் போன்ற பெரும் புரட்சிகள் இங்கு மக்களால் நடத்தப்பட்டு முடியாட்சி வீழ்த்தப்படவில்லை.

பிரித்தானிய கொலனித்துவத்துவக் காலகட்டத்தில் ஜனநாயகத்தின் சில அம்சங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

ஜனநாயக, தாராளவாத சிந்தனைகள் வலுப்பெறத்தொடங்கிய காலகட்டத்தில் பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய கல்வியைப் பெற்றுக்கொண்ட உயர்குழாம் அங்கு பிரபலமாகிக்கொண்டிருந்த ஜனநாயக, தாராளவாத சிந்தனைகளை இங்கு கொண்டுவந்தார்கள்.

ஆகவே, ஒருவகையில் சிந்தித்தால் இங்கு ஜனநாயகம் என்பது உயர்குழாமின் செயற்றிறட்டமாகவே இருந்தது.

இதனால் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டாலும், ஜனநாயக சிந்தனைகள் இங்கு பெருமளவிற்கு வேரூன்றவோ, வளம்பெறவோ இல்லை.

நிலபிரபுத்துவக் கால சிந்தனைகளின் செல்வாக்கு தொடரவே செய்தது. அதனால்தான் ஆரம்பகாலம் முதல், இன்று வரை பிரித்தானிய கொலனித்துவ காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களின் ஆதரவால் செல்வாக்குப் பெற்ற குடும்பங்களாக மாறியவையே, இன்றும் அரசியலிலும் செல்வாக்கோடு தொடர்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

இதனைக் குறிப்பிடுவதால் ஜனநாயகத்தால் மற்றவர்களுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்று அர்த்தமல்ல.

ஆனால் அதிகாரத்தின் ஸ்தலம் பெருமளவிற்கு மாறவில்லை. அவ்வப்போது ஏற்படும் குறுகிய மாற்றங்கள் கூட, புதிய “நிலபிரபுக்களை” உருவாக்குகிறதேயன்றி, இங்கு ஜனநாயக அரசியல் கலாசாரம் உறுதியடையவில்லை. 1936ல் தெற்கிலிருந்த கிராமமொன்றில் நிலவுடைமையாளர்களாக இருந்த ராஜபக்‌ஷர்களின் குடும்பத்திலிருந்து டீ.எம்.ராஜபக்‌ஷ அரச சபைக்கு தெரிவு செய்யப்படுவதோடு ராஜபக்‌ஷர்களின் அரசியல் பிரவேசம் தொடங்கியது.

1945ல் டொன் மத்யூ ராஜபக்‌ஷவின் மரணத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற இடைத் தேர்தலில் அவரின் சகோதரரும், மஹிந்த ராஜபக்‌ஷவின் தந்தையாருமான டொன் அல்வின் ராஜபக்‌ஷ தேர்தலில் வெற்றி பெறுகிறார்.

அதன் பின்னர் அரசியலில் அவர்களின் ஆதிக்கம் மக்களின் வாக்குகளோடு அதிகரித்ததேயன்றி குறையவில்லை. ஆகவே இந்த குடும்ப ஆட்சிக்கு அவர்கள் மட்டும் காரணமல்ல. அவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள்தான் பிரதான காரணம்.

இந்தியாவில் தேர்தலில் போட்டியிட நேரு பரம்பரையில் வந்தவன் என்பதைத்தவிர ராகுல் காந்திக்கு வேறு எந்த தகுதியும் தேவையில்லை.

அதுபோலத்தான் இங்கும் பண்டாரநாயக்க, ராஜபக்‌ஷ, சேனநாயக்க, விக்ரமசிங்ஹ, விஜேவர்த்தன போன்ற குடும்பங்களைச் சார்ந்தவர்களின் நிலையும். இதற்கு அவர்கள் காரணம் என்று சொல்வது சோம்பேறிகளின் சாட்டாகத்தான் இருக்க முடியும்.

தேர்தலில் வெல்லவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் ஒரு வாய்ப்பு இருக்கும் போது அதனை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

இங்கு மக்களின் சிந்தனையும், மனநிலையும், அரசியல் கலாசாரமும்தான் மாறவேண்டும். ஒருவர் நல்லவர் வல்லவர் என்பதற்காக அவரது தம்பிக்கும், மனைவிக்கும், மகனுக்கும், பேரனுக்கும் வாக்களிக்கும் மக்கள் கூட்டம் குடும்ப ஆட்சியைப் பற்றி விமர்சிக்கும் தகுதியை இழந்துவிடுகிறது.

அதேவேளை ஒருவர் அரசியலில் இருந்தார் என்பதனால், அவரது மகனோ, பேரனோ, தம்பியோ, மனைவியோ அரசியலுக்கு வரவே கூடாது என்பதும் அபத்தமாகும்.

இந்த நிலையில் ஒரு சாதகமான சமநிலையை சாதிப்பதற்கு வலுவான ஜனநாயக விழுமியங்களும், ஜனநாயகக் கட்டமைப்புக்களும், ஜனநாயக அரசியல் கலாசாரமும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அத்தகையதொரு கட்டமைப்பும், கலாசாரமும் இல்லாது போனால், இன்றுள்ள நிலபிரபுத்தன மனநிலையின் தொடர்ச்சியை நாம் மாற்றியமைக்க முடியாது.

மாறாக காலங்காலமாக குடும்ப ஆட்சி பற்றி பிதற்றிக்கொண்டிருக்கும் கையறு நிலையில் நாம் சிக்கிக்கொண்டு விடுவோம்.

ஒரு வகையில், இந்த கலாசார மாற்றம் ஏற்படுதவற்கு இந்த குடும்ப ஆட்சியின் வல்லாதிக்கம் உதவலாம்.

இந்த வல்லாதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க, ஆட்சி தோல்வியடையும். அப்போதுதாவது மக்கள் இத்தகைய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்களேயானால், இங்கும் ஜனநாயனத்தின் தாற்பரியமும், தேவையும் மக்களால் நேரடியாக உணரப்படும். அது மட்டும்தான், இந்த நிலையை மாற்றியமைப்பதற்கான விதையாக அமையும்.

-. என்.கே.அஷோக்பரன்

Exit mobile version