ilakkiyainfo

நடிகர் விஜயை கண்டித்த நீதிபதி – “வரி ஏய்ப்பு செய்வது தேச துரோகம்” – ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கு

பிரிட்டன் இறக்குமதி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அபராத தொகையுடன் காருக்கு உரிய வரியை இரண்டு வாரங்களில் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்து வாங்கியிருந்தார்.

அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததோடு, வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் அவர் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு உரிய வரியைச் செலுத்தும்படி வணிக வரித் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அந்த கார் பதிவு செய்யப்படவில்லை என்பதால், அது பயன்படுத்தப்படுவதில்லை என்று கூறிய நடிகர் விஜய், அந்தக் காருக்கான வரியை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்தக் காருக்கு உரிய வரியை செலுத்தாவிட்டால், அதைப் பதிவு செய்ய முடியாது என வட்டார போக்குவரத்து அலுவலகம் தெரிவித்தது.

இதை எதிர்த்தே நடிகர் விஜய் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், ஒரு காரை இறக்குமதி செய்வதற்கு முன்பாக, உரிய வரியைச் செலுத்தியிருக்க வேண்டும் என வணிகவரித் துறை வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த அபராதத்தை இரண்டு வாரத்திற்குள் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்குச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சினிமா நடிகர்கள் உரிய நேரத்தில் தங்களது வரியைச் செலுத்த வேண்டும் என்றும் அந்த வரி வருவாயின் மூலமாகத்தான் நாட்டில் பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் நீதிபதி கூறினார்.

வரி என்பது கட்டாயமாகச் செலுத்த வேண்டிய ஒன்று என்றும் விரும்பினால் செலுத்தக்கூடிய நன்கொடை அல்ல என்றும் கூறிய நீதிபதி, தான் ஒரு நடிகர் என்பதையே மனுவில் விஜய் குறிப்பிடவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் நடிகர்கள், வரியைச் செலுத்தாமல் இருப்பது ஏற்றக்கொள்ளக்கூடியதல்ல என்று தெரிவித்த நீதிபதி, நடிகர்கள் ‘ரீல் ஹீரோக்கள்’ ஆக இல்லாமல் ‘ரியல் ஹீரோக்கள்’ ஆக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

வரி ஏய்ப்பு என்பது தேச துரோகத்துக்கு சமம் என்று குறிப்பிட்ட நீதிபதி, இரண்டு வாரங்களுக்குள் அபராதத்தையும் உரிய வரியையும் விஜய் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

 

Exit mobile version