Site icon ilakkiyainfo

நீதிமன்ற அவதூறு வழக்கு: ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் ஊர்வலத்தின் ஒரு பகுதியாக, மேடை அமைத்து பேச மறுக்கப்பட்டதாக கூறி பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்தார் ஹெச். ராஜா.

அப்போது நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாகப் பேசியதாக அவர் மீது திருமயம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

பிறகு திருமயம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஹெச். ராஜா தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஜூலை 23ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறி கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யாமல் இருக்க ஹெச்.ராஜா தனக்கு முன்ஜாமீன் வழங்குமாறு உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், “திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த புகாரின் பேரில் நான் உட்பட 8 பேர் மீது சாதி, மத, இன, மொழி மற்றும் சமயம் தொடர்பான விரோத உணர்ச்சியை தூண்டும் வகையில் பொது இடத்தில் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நான் தலைமறைவாக உள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 23ஆம் தேதி ஆஜராகுமாறும் எனக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளேன். அதனால் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்,” என்று ராஜா கூறியிருந்தார்.

இந்த மனு இரண்டு நாட்களுக்கு முன் நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தந்தை பெரியார் திராவிட கழக துணைத்தலைவர் வழக்கறிஞர் துரைச்சாமி ஹெச். ராஜாவிற்கு முன்ஜாமீன் வழங்குவதை எதிர்த்து மனு தாக்கல் செய்தார்.

விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியதற்கு ஆட்சேபம் தெரிவித்து தலைமறைவாக உள்ளவருக்கு கைது ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று துரைசாமி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து நீதிபதி, “விசாரணை நீதிமன்றம் அனுப்பியது அழைப்பாணையா கைது ஆணையா என்று அறிய வேண்டியிருப்பதால், இந்த வழக்கை ஜூலை 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று ஹெச். ராஜாவின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சந்திரசேகரன், மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் சம்மன்தான் அனுப்பியுள்ளது.

அதை ஏற்று அவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். ஹெச். ராஜா நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியிருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version