ilakkiyainfo

ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா

20 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால் தாலிபன்கள் அதிவேகமாக ஆப்கனை கைப்பற்றி வருகிறார்கள்.

2021 செப்டம்பர் 11ஆம் தேதிக்கும் ஒட்டுமொத்த அமெரிக்க படையையும் ஆப்கனில் இருந்து வெளியேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்புகிறார்.

ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கியதில் இருந்து நேட்டோ மற்றும் அமெரிக்கா எவ்வளவு செலவழித்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

ஆப்கானிஸ்தானில் புகுந்த மேற்குலகப் படைகள்

இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அக்டோபர் 2001ல் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் புகுந்தன.

தாலிபன்களை எதிர்கொள்ள பில்லியன் டாலர் கணக்கில் அமெரிக்கா பணத்தை வாரி இரைத்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையும் 2011ஆம் ஆண்டு அதிகபட்சமாக 1,10,000 பேரைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த ஆண்டு வெறும் இது 4,000 துருப்புகளாகவும், தற்போது 650 துருப்புகளாகவும் சுருங்கி இருக்கிறது. அவர்களும் அமெரிக்க வெளியுறவு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க அங்கு இருக்கிறார்கள்.

நேட்டோ படைகள் இருந்தாலும், அமெரிக்காதான் ஆதிக அளவில் ஆட்களை களமிறக்கி இருந்தது.

செலவழித்தது எவ்வளவு?

2010 – 2012 காலத்தில், ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட துருப்புகளைக் கொண்டிருந்த காலத்தில், ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் வரை செலவழித்தது அமெரிக்கா.

அதிரடி தாக்குதல் திட்டங்களிலிருந்து ராணுவம் தன் கவனத்தை திசை திருப்பி, ஆப்கன் படைகளுக்கு பயிற்சி வழங்கத் தொடங்கிய பின் செலவுகள் கணிசமாக குறைந்தன.

கடந்த 2018ஆம் ஆண்டு, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் சுமார் 45 பில்லியன் டாலர் செலவழித்ததாக மூத்த பென்டகன் அதிகாரி ஒருவர் அமெரிக்க காங்கிரசிடம் கூறியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கணக்குப் படி, 2001 – 2019 வரையான காலத்தில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்காக 778 பில்லியன் டாலரைச் செலவழித்திருக்கிறது.

அது போக அமெரிக்காவின் உள் துறை அமைச்சகம் போன்ற மற்ற சில அமெரிக்க முகமைகள் எல்லாம் சேர்த்து சுமார் 44 பில்லியன் டாலரை ஆப்கானிஸ்தான் போருக்கு செலவழித்து இருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் 822 பில்லியன் டாலர்.

இதை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் கடந்த 18 ஆண்டுகளில் சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் வருகிறது என ஒரு புரிதலுக்காக வைத்துக் கொள்ளலாம். 18 ஆண்டுகள் என்பதால் ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மாற்றம் கண்டு இருக்கும் என்பது வேறு.

இதை எல்லாம் தாண்டி, ஒவ்வொரு அமெரிக்க முகமைகள் மற்றும் அமைச்சகங்கள் கணக்கு வழக்குகளை பராமரிக்கும் முறை வித்தியாசமாக இருக்கும் என்பதால் சரியாக எவ்வளவு செலவானது என கணக்கிட்டுச் சொல்வது கடினமானது.

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து பின் வாங்கினாலும் அரசுப் படைகளுக்கு ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் வீதம், 2024ஆம் ஆண்டு வரை உதவி செய்ய ஒப்புக் கொண்டுள்ளன.

ஏற்கனவே இந்த ஆண்டில் நேட்டோ 72 மில்லியன் டாலர் அளவிலான சாதனங்கள் உள்ளிட்டவற்றை தந்திருக்கிறது.

பணம் எப்படி செலவானது

 

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ஆபரேஷன்கள், ராணுவ வீரர்களின் உணவு, உடை, மருத்துவ வசதிகள், அவர்களுக்கான சிறப்பு ஊதியம், சலுகைகளுக்கே அதிகம் செலவானது.

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா இதுவரை சுமார் 143.27 பில்லியன் டாலரை ஆப்கானிஸ்தான் மறுகட்டுமானத்துக்காக செலவழித்துள்ளது.

அதில் 88.32 பில்லியன் டாலர் வரை ஆப்கானிஸ்தானின் ராணுவத்தைக் கட்டமைக்க செலவழிக்கப்பட்டது. இதில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவம் மற்றும் காவலர்கள் படை இரண்டுமே அடக்கம்.

கிட்டத்தட்ட 36 பில்லியன் டாலர் அரசு நிர்வாகத்துக்கும், வளர்ச்சிக்கும் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் சிறு சிறு பகுதிகள் போதை மருந்துக்கு எதிரான நடவடிக்கைக்கும், சில மனிதாபிமான உதவிகளுக்கும் செலவழிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தியது, வீணடித்தது, மோசடி செய்தது என மே 2009 முதல் டிசம்பர் 2019 வரை கிட்டத்தட்ட 19 பில்லியன் டாலர்

வீணடிக்கப்பட்டிருப்பதாக அக்டோபர் 2020-ல் அமெரிக்க காங்கிரஸில் தாக்கல் செயப்பட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது.

 

 

Exit mobile version