ilakkiyainfo

`தனி ராஜாங்கம்; அதே விதிகள்’ – கொடநாடு எஸ்டேட் இப்போது எப்படி இருக்கிறது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜெயலலிதா இருந்தவரை எப்போதும் மின்சாரம் தடைபடாத கொடநாட்டில் 2017 ஏப்ரல் 24 அன்று மின்சாரம் தடைபட்டது.

கொடநாடு விவகாரத்தை முன்வைத்து தி.மு.க அரசு ஆடும் ஆட்டத்தால் அ.தி.மு.க தலைமை அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ”ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு தற்போது வரையில் அங்கு நடப்பவை அனைத்தும் மர்மமாகவே உள்ளது,” என்கிறார் நீலகிரி மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்தோஸ். என்ன நடக்கிறது கொடநாட்டில்?

அ.தி.மு.கவின் அரசியல் வரலாற்றில் கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டுக்கு பெரும் பங்கு உண்டு. அரசியல் ரீதியாக பல முக்கிய முடிவுகளை ஜெயலலிதா எடுப்பதற்கும் பலநேரங்களில் ஆட்சியை வழிநடத்துவதற்கும் கொடநாடு எஸ்டேட்டை பயன்படுத்தி வந்தார்.

1991ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஓரிரு வருடங்களில் சசிகலா தரப்பினரின் கண்களில் கொடநாடு எஸ்டேட் தென்பட்டது. கொடநாடு காட்சி முனையும் மாயாறு அருவியின் ஓட்டமும் இந்த இடத்தை வாங்கியே தீருவது என்ற முடிவுக்கு சசிகலா தரப்பைத் தள்ளியது.

அபகரிக்கப்பட்ட கொடநாடு எஸ்டேட்

ஜெயலலிதா இறந்தபின் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் சசிகலா.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பலரிடம் கைமாறிய அந்த எஸ்டேட், கிரேக் ஜோன்ஸ் என்பவரது குடும்ப சொத்தாக இருந்தது. அவரிடம் இருந்து ஜெயலலிதா தரப்பால் வலுக்கட்டாயமாக இந்த எஸ்டேட் வாங்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

அரசியல் ரீதியாக தங்களது நிலம் அபகரிக்கப்பட்டதாகவும் தங்களிடம் இருந்து கொடநாடு எஸ்டேட் திருடப்பட்டதாகவும் ஜோன்ஸ் ஊடகங்களிடம் பேட்டி கொடுத்தார்.

இதையே ஜெயலலிதா மரணத்தை விசாரித்த ஆறுமுகசாமி கமிஷனிலும் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

கிரேக் ஜோன்ஸ் குடும்பத்தாரிடம் இருந்து 906 ஏக்கர் கொடநாடு எஸ்டேட்டை 7 கோடி ரூபாய்க்கு சசிகலா தரப்பினர் வாங்கியுள்ளனர்.

எஸ்டேட்டின் பங்குதாரர்களாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்பட்டன.

எஸ்டேட்டுடன் அருகில் இருந்த வேறு சில தேயிலைத் தோட்டங்களும் வாங்கப்பட்டதால் பரப்பளவு அதிகரித்தது.

கூடவே, பிரமாண்ட கட்டடம், தேயிலை தொழிற்சாலை, படகு இல்லம், மலர்த்தோட்டம் என ஜெயலலிதாவின் விருப்பத்துக்கேற்ப அழகுற வடிவமைக்கப்பட்டன.

ஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா?
எம்.ஜி.ஆர் நிழலில் தொடங்கிய ஜெயலலிதாவின் அரசியல் பயணம் எப்படி இருந்தது?

போயஸ் தோட்டத்துக்கு அடுத்தபடியாக ஜெயலலிதா அதிகமாக நேசித்த இடங்களில் கொடநாடு தேயிலை தோட்டத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.

தடைபட்ட மின்சாரம்; தொடர் மரணங்கள்

2016 டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, 2017 பிப்ரவரி மாதம் சொத்துக் குவிப்பில் சசிகலாவும் சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பின்னர், எப்போதும் மின்சாரம் தடைபடாத கொடநாட்டில் 2017 ஏப்ரல் 24 அன்று மின்சாரம் தடைபட்டது.

கொடநாடு எஸ்டேட் பகுதியில் வழக்கமாக வரும் காவல் ரோந்து வாகனங்களும் வரவில்லை. அப்போது உள்ளே புகுந்த மர்ம கும்பல் ஒன்று காவலாளி ஓம் பகதூரை கொன்றுவிட்டு உள்ளே இருந்த ஆவணங்களைத் திருடியுள்ளது.

இதனைத் தடுக்க வந்த கிருஷ்ணா பகதூர் என்ற காவலாளியும் தாக்கப்பட்டார். அ.தி.மு.க தொண்டர்களால் பெரிதும் வணங்கப்பட்ட கொடநாட்டில் கொள்ளை போன சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட ஜெயலலிதாவின் ஓட்டுநராக இருந்த கனகராஜ், சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முக்கிய நபராகக் குற்றம் சுமத்தப்பட்ட சயானும் கேரளாவில் விபத்து ஒன்றில் சிக்கினார். இந்தச் சம்பவத்தில் சயானின் மனைவியும் மகளும் விபத்தில் உயிரிழந்தனர்.

இதன்பிறகு கொடநாடு வழக்கில் கைதான சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போதே, `யாருக்காக இதனைச் செய்தோம்?’ என மனம் திறந்து பேட்டி கொடுத்தனர்.

இதனை பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் வெளிக்கொண்டு வந்தார். இதன் காரணமாக மூவர் மீதும் வழக்குகள் பாய்ந்தன. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு கொடநாடு விவகாரத்தை தி.மு.க கையில் எடுத்துள்ளது.

எடப்பாடியின் பதற்றம்

கொடநாடு வழக்கில் தம்மைச் சிக்க வைக்க முயற்சி நடக்கிறது என்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்த வழக்கில் மறு விசாரணை நடத்தக் கோரி உதகை (உதகமண்டலம்) நீதிமன்றத்தில் தி.மு.க அரசு மனுத்தாக்கல் செய்தது. இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் சயானிடம், நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத் 3 மணிநேரம் விசாரணை நடத்தினார்.

இதன்பிறகு வெளியான தகவல்களால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி, தன்னை வழக்கில் சேர்க்க சதி நடப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து தி.மு.க அரசு மீது புகார் மனு ஒன்றையும் அளித்தார்.

இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ` சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக கொடநாடு வழக்கினை மறு விசாரணை செய்வதாக முதலமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது.

ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சியை கண்டு எம்.ஜி.ஆர் பொறாமைப்பட்டாரா?
கொடநாட்டில் கொலை – கொள்ளை: மர்மங்களும், கேள்விகளும்

இந்த வழக்கின் விசாரணை முடியும் தருவாயில் மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் எனத் தி.மு.க கூறுகிறது. தேர்தல் வாக்குறுதிக்காக எல்லாம் விசாரிக்க முடியாது.

இந்த வழக்கில் மறு விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குற்றப் பின்னணி கொண்டவர்களுக்குத் தி.மு.க ஆதரவு அளிப்பது ஏன்?’ எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.

எப்படியிருக்கிறது கொடநாடு எஸ்டேட்?

கொடநாடு எஸ்டேட்

 

கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதாவுக்கு பிடித்த இடங்களில் ஒன்று.

தமிழ்நாடு அரசியலில் மையப்புள்ளியாக மாறியுள்ள கொடநாடு எஸ்டேட் தற்போது எப்படியுள்ளது?” என்பதை அறிய கொடநாடு ஊராட்சியின் முன்னாள் தலைவரும் மாவட்ட ஊராட்சித் தலைவருமான பொன்தோஸிடம் பேசினோம்.

“பினாமி சட்டத்தின்கீழ் கொடநாடு எஸ்டேட்டை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இதன்பிறகு அரசாங்கமே இந்த எஸ்டேட்டை எடுத்து நடத்தியிருக்க வேண்டும்.

தற்போது பழைய நிர்வாகமே தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் அதிகப்படியான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். ஜெயலலிதா இருந்தபோது என்னென்ன கெடுபிடிகள் இருந்ததோ அவையெல்லாம் மாறவில்லை” என்கிறார்.

தொடர்ந்து பேசியவர் “கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் இங்குள்ள மக்களும் உறுதியாக உள்ளனர்.

 

அதில், என்னென்ன மர்மங்கள் உள்ளன என்பதை அரசு வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

தற்போது வருமான வரித்துறையின் கண்காணிப்பில் இருந்தாலும் தொழிலாளர்களுக்கு வழக்கம்போல சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், உள்ளே நடந்த பல விஷயங்களில் ஏராளமான மர்மங்கள் உள்ளன” என்கிறார் பொன்தோஸ்.
5 அமைச்சர்களின் சொத்து ஆவணங்கள் எங்கே?

“அப்படியென்ன மர்மம்?” என்றோம். “ ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2011-16 காலகட்டத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த ஐந்து அமைச்சர்களின் மீது சந்தேகப் பார்வை விழுந்தது. அவர்கள் முறைகேடாக சொத்து சேர்த்ததை அறிந்து அதற்கான ஆவணங்களை எல்லாம் ஜெயலலிதா அங்கேதான் வைத்திருந்தார்.

அவர் இறந்த பிறகு சசிகலா கையில் அந்த ஆவணங்கள் சென்றுவிடக் கூடாது என்பதில் சிலர் உறுதியாக இருந்தனர். தங்களின் லகான் அந்த ஆவணங்களில் உள்ளது என்பதால்தான் கொலை, கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றினர்.

அப்போது நீலகிரி மாவட்டத்தில் இருந்த அதிகாரிகள் அனைவரும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் அ.தி.மு.க அரசுக்கு சாதகமாக நடந்து கொண்டனர். அந்த வழக்கை உடனடியாக முடித்துவிட வேண்டும் என்பதிலும் அதிக அக்கறை காட்டினர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தின்போது காயமடைந்த கிருஷ்ணா பகதூர் என்ற காவலாளியை நேபாளத்துக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர். ஒரு சாவு நடந்தால்கூட உள்ளே கொண்டு போகவிடவில்லை.

ஸ்டாலின் & இ பி எஸ்

அதேபோல், எஸ்டேட்டில் நடந்த டிராக்டர் விபத்தில் 20 பேர் சிக்கினர். அதில் ஒரு பெண்மணி இறந்தபோது அவரது உடலை அடக்கம் செய்யவிடாமல் சொந்த ஊருக்குக் கொண்டு போகுமாறு கூறிவிட்டனர்.

விதிகள் மாறவில்லை

இப்போதும் அதே அராஜகம்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக, தி.மு.க அரசு விசாரணை ஒன்றை அமைத்தால்தான் அனைத்தும் சரியாகும்.

அங்கே ஒரு தனி ராஜாங்கம் நடந்து வருகிறது. தொழிலாளர்களை அடிமை போல நடத்தி வருகின்றனர். எஸ்டேட்டை 3 கி.மீ சுற்றித்தான் வெளியில் வர வேண்டும், நடைபாதையை அடைத்ததைக்கூட இன்னும் மாற்றவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை அவர்கள் செயல்படுத்தவில்லை.

அங்கிருந்த நிர்வாகி தனது சொந்த எஸ்டேட்டை போல அனைவரையும் மிரட்டி வருகிறார். அங்கே அரசு சார்பில் பார்வையாளர் ஒருவரை நியமித்தால் மட்டுமே அனைத்தும் சரியாகும்” என்கிறார் பொன்தோஸ்.

இதையடுத்து, கொடநாடு பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

“ எஸ்டேட்டுக்குள் இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் தேயிலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது உயர்ரக தேயிலையாகப் பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலகட்டத்தில் இங்குள்ள தொழிலாளர்களின் நிலை வேறாக இருந்தது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் போனஸ், புத்தாடை எனக் கொண்டாட்டமாக இருக்கும்.

அவர் இறந்த பிறகு அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது வருமான வரித்துறையின் கண்காணிப்பில் எஸ்டேட் உள்ளதால் தொழிலாளர்கள் நலனில் எஸ்டேட் நிர்வாகம் அக்கறை காட்டுவதில்லை” என்கிறார்.

எஸ்டேட்டில் பறந்த ஹெலிகாப்டர்

மேலும், “ கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இதன்பிறகு அனைத்தும் மாறிவிட்டது. கொடநாட்டை பார்த்தாலே வணங்கிச் செல்லும் உள்ளூர் அ.தி.மு.க நிர்வாகிகளும் தற்போது பெரிதாக கண்டுகொள்வதில்லை.

தற்போதும் எஸ்டேட் பகுதிக்குள் இருக்கும் அண்ணா நகருக்கு முதல் நுழைவாயில் வழியாகச் செல்வதற்கு அனுமதிச் சீட்டு வாங்கிய பிறகே செல்ல வேண்டும். இதற்காக காலை 6.30 மணிக்குள் எஸ்டேட் நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விதி இப்போதும் உள்ளது.

கொள்ளைச் சம்பவத்தைப் பற்றி தொழிலாளர்கள் யாரும் பெரிதாக பேசுவதில்லை. ஓரிரு மாதங்களுக்கு முன்பு எஸ்டேட் பகுதியைச் சுற்றி ஹெலிகாப்டர் ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. `யாராவது வந்திருப்பார்களா?’ என விசாரித்தபோதும், உரிய தகவல் கிடைக்கவில்லை.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்தபோது கணக்கு வழக்குகளைக் காட்டுவதற்காக எஸ்டேட் மேலாளர் நடராஜன் அடிக்கடி சென்று வருவார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு இங்குதான் வருவார் என தொழிலாளர்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் வரவில்லை” என்கிறார்.

தி.மு.கவுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?

முன்னாள் அமைச்சர்கள் ஐந்து பேரின் சொத்து ஆவணங்களுக்காகத்தான் கொள்ளை நடந்ததாகச் சொல்கிறார்களே? என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

“ இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் புதிதாக எதையோ நிறுவப் பார்க்கிறார்கள். அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக வாதாடியது யார், பிணை கொடுத்தது யார்… பத்திரிகையாளர் என்ற பெயரில் டெல்லியில் இருந்தெல்லாம் பேட்டி கொடுத்தார்கள்.

இதுதொடர்பாக அப்போதே எங்கள் தரப்பில் தெளிவுபடுத்திவிட்டார்கள். தொடக்கத்தில் இருந்தே இந்த விவகாரத்தின் பின்புலத்தில் தி.மு.க இருந்து வருகிறது. இவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?” என்கிறார்.

தொடர்ந்து பேசியவர், “அரசியல் ரீதியாக எப்படியெல்லாம் அ.தி.மு.கவின் செல்வாக்கை இழக்கச் செய்வது என்பதுதான் தி.மு.கவின் நோக்கமாக உள்ளது.

திமுக கொடி

பத்தாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். உள்ளாட்சியில் வெற்றி பெறவில்லையென்றால் பொய் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டுத்தான் ஆட்சிக்கு வந்தனர் என்பது நிரூபணமாகிவிடும்.

அவர்கள் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருப்பதாக உணர்கிறார்கள். அதற்காக அ.தி.மு.கவை எந்தெந்த வகைகளில் செல்வாக்கைக் குறைக்கலாம் எனத் திட்டமிடுகின்றனர்.

இதற்காக யார் யாரையெல்லாம் இலக்கு வைத்து தாக்கலாம் எனத் திட்டமிடுகின்றனர். எங்கள் தலைவர்களின் பிரபலத்தை இழக்க வைக்கும் வேலைகளை தி.மு.க செய்கிறது” என்கிறார்.

“கொடநாடு விவகாரத்தில் மர்மம் இருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வருகிறதே?” என்றோம்.

“ இவர்களின் செயல்பாட்டில்தான் மர்மம் உள்ளது. கொடநாடு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை இவர்கள் ஏன் பிணையில் எடுக்க வேண்டும். சாதிக் பாட்ஷா மரணத்தில் உள்ள மர்மத்தை இவர்கள் கண்டுபிடித்துவிட்டார்களா.

முதலில் தா.கிருஷ்ணன், ஆலடி அருணா, ராமஜெயம் ஆகியோர் கொலைக்கான பின்னணிகளை இவர்கள் வெளியில் கொண்டு வரட்டும். கொடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக எங்கள் தரப்பில் இருந்து எதாவது உதவிகள் சென்றதா..?

அவர்களை வெளியில் கொண்டு வருவதற்கு தி.மு.கதான் முயற்சி செய்தது. முடியப் போகும் வழக்கை கிளறிப் பார்ப்பதன் மூலம், கொடநாடு வழக்கை பகடைக்காயாக பயன்படுத்தி அ.தி.மு.கவை அழிப்பதற்கு தி.மு.க முயற்சிக்கிறது” என்கிறார் மகேஸ்வரி.

நன்றி
செய்தி மூலம்: பிபிசி தமிழ்

Exit mobile version