ilakkiyainfo

ஆப்கானிஸ்தானின் ஹீரோ அகமது ஷா மசூத்… அமெரிக்கா மட்டும் இவரை நம்பியிருந்தால்? : தாலிபன்களின் கதை-6

ஆப்கானிஸ்தானில் 34 மாகாணங்களில் ஒன்று பஞ்ச்ஷிர். ஆப்கனே ஒரு பாலைவனம் போல தெரிந்தாலும், வளமாக இருக்கும் ஒரு பிரதேசம் அது.

மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் பஞ்சமி நதி அந்தப் பகுதியை வளமாக வைத்திருக்கிறது. இந்தப் பகுதியின் அசைக்க முடியாத தலைவராக இருந்தவர் அகமது ஷா மசூத்.

ஆப்கன் தலைவர் ஒருவரின் பேச்சை அமெரிக்கா கேட்டிருந்தால், தாலிபன்கள் எப்போதோ தவிடுபொடி ஆகியிருப்பார்கள்.

அமெரிக்காவில் அல் கொய்தாவின் தாக்குதல் நடக்காமலே போயிருக்கும். அந்தத் தாக்குதலிலும் ஆப்கனில் 20 ஆண்டுகள் நடத்திய போரிலும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்காது. முக்கியமாக, ஆப்கன் மக்களுக்கு அமைதியும் வளமான வாழ்க்கையும் கிடைத்திருக்கும்.

அந்தத் தலைவரின் பெயர், அகமது ஷா மசூத். சாகசப் போராளி சே குவாரா, வியட்நாம் தலைவர் ஹோ சி மின் ஆகியோருக்கு இணையாக ஆப்கன் மக்கள் மதிக்கும் ஒரு தலைவர். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கொரில்லா போர்ப்படைத் தளபதிகளில் ஒருவராகக் கருதப்படுபவர்.

‘நேஷனல் ஹீரோ’ என அடைமொழி கொடுத்து, அவரின் நினைவு நாள் ஆப்கனில் தேசிய விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது.

இன்றைக்கு தாலிபன் கொடூரத்தில் இருந்து தப்பிக்க ஆப்கன் மக்கள் அடித்துப் பிடித்துக்கொண்டு காபூல் விமான நிலையம் போகிறார்கள். விமானத்தில் தொங்கியபடியாவது ஏதாவது ஒரு நாட்டுக்குச் சென்று அடைக்கலம் தேடப் பார்க்கிறார்கள்.

இந்த வாய்ப்புக் கிடைக்காத பலர் ரகசியமாக ஆப்கனின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்குக்கு போகிறார்கள்.

 

தாலிபன்கள் காபூலைப் பிடித்ததும், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டுத் தப்பி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடைக்கலம் புகுந்துவிட்டார்.

நாடு தங்கள் கைக்கு வந்துவிட்டதாக தாலிபன்கள் காபூலில் பிரஸ்மீட் வைத்த அதே நேரத்தில் இன்னொரு சம்பவம் நடந்தது.

அஷ்ரப் கனி அரசில் துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலே அவர்களுக்கு சவால் விட்டார். ‘’ஆப்கன் அரசியல் சட்டப்படி, அதிபர் இல்லாவிட்டால் துணை அதிபரிடம்தான் பொறுப்புகள் போகும். எனவே, ஆப்கனின் புதிய அதிபர் நான்தான்’’ என்று ட்விட்டரில் அவர் பதிவிட்டார். பாதுகாப்பான பஞ்ச்ஷிர் பகுதியில் இருந்துகொண்டு அவர் இதைச் செய்கிறார்.

தாலிபன்களால் தேடப்படும் முன்னாள் ஆப்கன் ராணுவ வீரர்கள், முன்னாள் முஜாகிதீன் போராளிகள், தாலிபன்களை விரும்பாதவர்கள் என்று பலரும் அங்கு ஒருங்கிணைகிறார்கள்.

பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தலைவர்களின் கூட்டம்

ஆப்கானிஸ்தானில் 34 மாகாணங்களில் ஒன்று பஞ்ச்ஷிர். ஆப்கனே ஒரு பாலைவனம் போல தெரிந்தாலும், வளமாக இருக்கும் ஒரு பிரதேசம் அது.

மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் பஞ்சமி நதி அந்தப் பகுதியை வளமாக வைத்திருக்கிறது. இந்தப் பகுதியின் அசைக்க முடியாத தலைவராக இருந்தவர் அகமது ஷா மசூத்.

சோவியத் படைகளை வீழ்த்த ஆப்கனில் பல முஜாகிதீன் குழுக்களை அமெரிக்காவும், பாகிஸ்தானும், இதர இஸ்லாமிய நாடுகளும் உருவாக்கின.

முல்லா ஒமர் போலவே அப்படி உருவாக்கப்பட்ட ஒரு தலைவர்தான் மசூத். ஆனால், மற்றவர்கள் போல துப்பாக்கி முனையில் அதிகாரம் செலுத்த நினைத்தவர் இல்லை அவர்.

சோவியத் படைகளோ, பிறகு தாலிபன்களோ தன் எல்லைக்குள் வர விடவில்லை அவர். அந்தக் கொந்தளிப்பான நாட்களில் ஆப்கனில் அமைதியாக இருந்த ஒரே பிரதேசம் பஞ்ச்ஷிர்.

தாலிபன்களின் கொடூரத்தை தாக்குப் பிடிக்க முடியாத பல்லாயிரம் மக்கள் பஞ்ச்ஷிர் சென்று அடைக்கலம் புகுந்தனர். தங்கள் பகுதியினருக்கே உணவுப் பற்றாக்குறை இருந்த சூழலிலும், அத்தனை பேருக்கும் அடைக்கலம் கொடுத்தார் அவர்.

கிட்டத்தட்ட ஓர் அரசாங்கம் செய்வது போன்ற நிர்வாகத்தை அவர் அங்கு கொடுத்தார். மருத்துவமனைகள், பள்ளிகள் என அடிப்படை வசதிகளை உருவாக்கினார்.

ஆண்களைப் போலவே பெண்களும் வேலைக்குச் செல்வதை ஊக்குவித்தார். பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

இளம் வயதுப் பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதை தடுத்தார். பெண்கள் சம உரிமைக்கான ஒரு பிரகடனத்தையும் வெளியிட்டார்.

‘’ஆண்களும் பெண்களும் சமம். இந்த மனநிலை ஆப்கானிஸ்தானில் எல்லோருக்கும் வர வேண்டும். கல்வியால் மட்டுமே அது சாத்தியம். அடுத்த தலைமுறையில் ஆப்கன் அப்படி இருக்கும்’’ என்று சொன்னார்.

 

சோவியத் படைகள் வெளியேறிய பிறகு ஆப்கனில் அமைந்த இடைக்கால அரசில் மசூத் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.

குறுகிய காலத்துக்குள் ஆப்கன் ராணுவத்தை வலுவாக்கினார். தாலிபன்கள் நாடு முழுக்க வெற்றி பெற்று காபூலை நோக்கி வந்தபோது, அவர்களை நகருக்கு வெளியே தோற்கடித்து விரட்டியவர் அவர்தான்.

சில மாதங்களில் தாலிபன்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் துணையுடன் வந்து காபூலைப் பிடித்தபோது வெளியேறி பஞ்ச்ஷிர் சென்றார். அங்கிருந்தபடி தாலிபன் படையுடன் மோதினார்.

தாலிபன்களுக்கு எதிரான பல அரசியல் மற்றும் முஜாகிதீன் தலைவர்களை ஒருங்கிணைத்து ‘வடக்குக் கூட்டணி’ என்ற அமைப்பை உருவாக்கினார்.

”நாங்கள்தான் உண்மையான ஆப்கன் அரசு” என்று அறிவித்தார். ஈரான், ரஷ்யா, துருக்கி, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் என அண்டை நாடுகள் அவரை ஆதரித்தன. இந்தியாவும் அவருக்கு நண்பனாக இருந்தது.

அமெரிக்காவையே அலட்சியமாகக் கையாண்ட தாலிபன்கள் பெரிதும் பயந்தது அகமது ஷா மசூத் ஒருவருக்குத்தான்! தாலிபன்கள் அவரைக் கொலை செய்ய பலமுறை முயன்றார்கள்.

அதில் தோற்றதால் அவருடன் சமாதானம் பேசினார்கள். பணம் தர முன்வந்தார்கள். ‘’எங்களுடன் இணைந்து ஆப்கானிஸ்தானின் பிரதமர் ஆகிவிடுங்கள்’’ என்றுகூட பேசிப் பார்த்தார்கள்.

”நான் கேட்டிருந்தால் அவர்கள் ஜனாதிபதி பதவிகூட கொடுத்திருப்பார்கள். ஆனால், அதற்கான விலையாக என் கொள்கையை விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.

அது என்னால் முடியாது. ‘இந்த நாடும் ஆப்கன் சமூகமும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த சிந்தனையிலேயே இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஆப்கனில் ஆண்கள், பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். ஜனநாயக ஆட்சிமுறை இருந்தால் மட்டுமே அது சாத்தியம். நீங்களும் ஜனநாயகப் பாதைக்கு வாருங்கள். தேர்தலை நடத்துங்கள்’ என்று சொன்னேன். அதைத் தாலிபன்கள் ஏற்கவில்லை” என்று மசூத் ஒரு பேட்டியில் சொன்னார்.

தாலிபன்கள் தவறான இஸ்லாத்தை ஆப்கனில் பரப்பிக்கொண்டிருப்பதாக சர்வதேச சமூகத்திடம் சொன்னார்.

”தாலிபன்கள் வீழ்த்த முடியாதவர்கள் அல்ல. பாகிஸ்தானும் பின்லேடனும் தரும் ஆதரவில்தான் அவர்கள் அதிகாரம் செலுத்துகிறார்கள். ஆப்கன் மக்கள் அவர்களை வெறுக்கிறார்கள்.

தாலிபன்கள் கையில் இருக்கும் ஆயுதமே, மக்களைப் போராட விடாமல் தடுக்கிறது. எங்களுக்கு உதவி செய்யுங்கள். நாங்கள் அவர்களை வீழ்த்திக் காட்டுகிறோம்” என்று அவர் கேட்டார்.

ரஷ்யாவும் ஈரானும் ஆதரிக்கும் ஒரு நபரை நாமும் ஆதரிப்பதா என்று அமெரிக்கா தயங்கியது. இந்தத் தயக்கம் இருவருக்குமே பெரும் விபரீதமாக முடிந்தது.

2001-ம் ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக பிரஸ்ஸல்ஸ் நகருக்கு அகமது ஷா மசூத் சென்றிருந்தார்.

”அமெரிக்க மண்ணில் ஒரு பெரிய தாக்குதல் நடத்துவதற்கு பின்லேடனும் முல்லா ஒமரும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

எங்கள் உளவுத்துறைக்கு இதுபற்றி தகவல் கிடைத்தது” என்று எச்சரித்துவிட்டு வந்தார். ‘எங்கள் பாதுகாப்பை மீறி இங்கே யார் வந்து தாக்குதல் நடத்துவார்கள்’ என்று அமெரிக்கா அதை அலட்சியம் செய்தது.

2001 செப்டம்பர் 9. பத்திரிகை நிருபர்கள் என்று சொல்லிக்கொண்டு இரண்டு அரபு இளைஞர்கள் மசூத்தை பேட்டி எடுக்க வந்தார்கள்.

அவர்கள் பின்லேடன் அனுப்பிய அல் கொய்தா தற்கொலைப் படையினர். வீடியோ கேமராவில் நவீன ரக வெடிகுண்டை பதுக்கி வைத்திருந்தார்கள்.

பாதுகாப்பு சோதனைகளில் அது தெரியவில்லை. மசூத்தின் அறைக்குள் நுழைந்ததும், குண்டை வெடிக்கச் செய்தார்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அகமது ஷா மசூத் உயிரிழந்தார்.

அப்போது யாருக்கும் தெரியாது… அடுத்த இரண்டு நாட்களில் அமெரிக்கா அலறப் போகிறது, உலகம் அதிரப் போகிறது என்று!

பின்லேடன் பயிற்சி கொடுத்து அனுப்பிய தற்கொலைப்படை தீவிரவாதிகள், அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்களை விமானங்களால் மோதி பேரழிவு ஏற்படுத்தினார்கள்.

ட்வின் டவர் அட்டாக்

விமானங்களை வெடிகுண்டுகள் போல பயன்படுத்துவார்கள் என்பது உலகம் அதுவரை எதிர்பார்க்காதது. சுமார் 3,000 பேர் அந்தத் தாக்குதலில் இறந்தனர். அமெரிக்க மண்ணில் நிகழ்ந்த மிக மோசமான பேரழிவு அது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வெகுண்டெழுந்தார். ‘’அல் கொய்தா பயிற்சி முகாம்களை மூட வேண்டும். பின் லேடனை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று ஆப்கன் அரசுக்கு கட்டளையிட்டார்.

ஆனால், அமெரிக்காவின் கோபம் புரியாமல் தாலிபன் அமைச்சர்கள் காமெடி செய்தார்கள். கிராமத்து போலீஸ் ஸ்டேஷன் ஏட்டய்யா போல, ‘’பின்லேடன் தாக்கினார் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நாங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றார்கள்.

பாகிஸ்தானுக்கு விபரீதம் புரிந்தது. அது தாலிபன்களை எச்சரித்தது. அடுத்த கட்டத் தலைவர்கள் சிலர் தயங்கித் தயங்கி முல்லா ஒமரிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.

”ஒருவர் நம்மிடம் அடைக்கலம் கேட்டு வந்தால், அவரை எதிரியிடம் ஒப்படைக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.

எதிரியே நம்மிடம் அடைக்கலம் கேட்டு வந்தாலும், அவரை மன்னித்து அடைக்கலம் கொடு என நம் ஆப்கன் பாரம்பரியம் சொல்கிறது. ஆப்கானிஸ்தானில் நாம் நடத்திய ஜிகாத்தில் நமக்கு உதவியவர் பின்லேடன். நாம் கஷ்டப்பட்ட காலங்களில் நமக்குத் துணையாக இருந்தவர். அவரை நான் யாரிடமும் ஒப்படைக்க மாட்டேன்” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் முல்லா ஒமர்.

தாலிபன்களின் ஆப்கன் பிரதமராக இருந்த அப்துல் கபீர், ”ஆதாரம் கொடுத்தால் பின் லேடனை ஒப்படைக்கிறோம். ஆனால், அமெரிக்காவின் கையில் இல்லை. ஏதாவது ஒரு மூன்றாவது நாட்டிடம் ஒப்படைக்கிறோம். மூன்று நாடுகளின் நீதிமன்றம் ஒன்றை உருவாக்கி அவரை விசாரிக்கலாம்” என்றார்.

முல்லா முகமது ஒமரை சந்தித்துப் பேட்டி எடுத்தவர், பாகிஸ்தான் நிருபரான ரஹிமுல்லா யூசுப்சாய். அவரிடம் ஒமர் இதுபற்றிப் பேசியிருக்கிறார். ”ஒரு விருந்தினரைக் காட்டிக் கொடுத்த துரோகியாக வரலாற்றில் இடம்பெற நான் விரும்பவில்லை. இதற்காக நான் ஆட்சியையும் இழக்கத் தயார், உயிரையும் இழக்கத் தயார்” என்றாராம்.

அதன்பிறகு தாலிபன்களை வீழ்த்தவும், பின் லேடனைக் கொல்லவும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கன் வந்தன.

அகமது ஷா மசூத் உருவாக்கி வைத்திருந்த வடக்குக் கூட்டணி படைகள்தான் அவர்களுக்கு உதவின. இரண்டே மாதங்களில் தாலிபன்கள் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்பட்டார்கள்.

ஆனால், ஒமரையோ பின்லேடனையோ பிடிப்பது அத்தனை சுலபமாக இல்லை!

தாலிபான்களின் கதை  தொடரும்.

தலிபான் ஆட்சி எவ்வாறு அமையும்?: தாலிபன்களின் கதை-1

பிரிட்டிஷ் ஆட்சி டு சோவியத் அதிகாரம்… ஆப்கன் நிம்மதியை இழந்த தருணம் எது?: தாலிபன்களின் கதை – 2

முல்லா முகமது ஒமர் எப்படி உருவானார், பாகிஸ்தான் எதற்காக ஆதரித்தது?! : தாலிபன்களின் கதை – 3

தாலிபன்களின் ஆட்சி ஏன் கொடூரத்தின் உச்சமாக இருந்தது?!: தாலிபன்களின் கதை – 4

பின்லேடனுக்கும் – முல்லா ஓமருக்குமான நட்பு எப்படிப்பட்டதாக இருந்தது?: தாலிபன்களின் கதை – 5

 

Exit mobile version