Site icon ilakkiyainfo

பெகாசஸ் (pegasus)  இணையவழி “பெரியண்ணன்”

 

ததற்போது இந்தியா உட்பட உலக அரசியலை உலுக்கிவரும் வார்த்தை பெகாசஸ் (pegasus) . பெகாசஸ் என்பது இஸ்ரேல்  நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ (NSO) நிறுவனத்தின் இராணுவ
ஒட்டுக்கேட்பு மென்பொருள் (spyware) .

 

இந்த மென்பொருளின் துணையுடன் உலகம் முழுவதும் ஐம்பதினாயிரம் பேரின்
கைத்தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸைச்  சேர்ந்த இலாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ்  (Forbidden Stories) மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல்
(Amnesty International) ஆகியன 16 ஊடகங்களுடன் இணைந்து புலனாய்வு செய்து கண்டுபிடித்துள்ளன.

 

இந்தியாவில் மட்டும் சுமார் 40 பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள், ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உட்பட 300 இற்கும் மேற்பட்டவர்களின்
கைத்தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக ‘தி வயர்’
(The Wire) என்ற இணையப் பத்திரிகை கூறுகின்றது.

பெகாசஸ் மென்பொருள் அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்குகின்றது. எப்போதுமே உளவுப் பார்க்கும் வசதிகளில்  சக்தி வாய்ந்த முதல் தர நாடாக இருக்கின்ற இஸ்ரேல் அரசு,
பெகாசஸை ‘இணையவழி ஆயுதம்’ என்றுதான் அழைக்கிறது.

அந்தளவுக்கு எளிதாக ஊடுருவி ஒருவரின் அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

கைத்தொலைபேசிக்கு வரும் தீங்கிழைக்கக்கூடிய  இணைப்பைத் தெரியாமல் தொட்டுவிட்டாலோ அல்லது கைத்தொலைபேசிக்கு வரும் குறுஞ்செய்திகள் மூலமாகவோ
பெகாசஸ் மென்பொருள் கைத்தொலைபேசிக்குள் நுழைந்து விடுகின்றது.

பின்னர் கைத்தொலைபேசி பயனாளர்களுக்குத் தெரியாமலேயே, இந்த மென்பொருள் தன்னைப் பதிவிறக்கம்  செய்து, வெகுதொலைவில் இயக்கும் நபரின் கேள்விகளுக்குத்
தேவையான பதில்களையும், தகவல்களையும் திருடி, இந்த  மென்பொருள் வழங்கும்.

ஒரு முறை தொலைப்பேசியில் பெகாசஸ் நிறுவப்பட்டால் தொடர்பில் இருக்கும் இருவருக்குமான செய்திப் பரிமாற்றத்தை இடைமறித்து ஒட்டுக்கேட்கும் உங்கள் தொலைப்பேசியில்  இருந்து குறுஞ்செய்தி, மின்னஞ்சல், தொடர்பு, நாட்காட்டி,
கடவுச்சொல், அழைப்பு பற்றிய தகவல், பார்க்கப்பட்ட  இணையங்களின் தரவுகள், தேடுப்பொறி வரலாறு போன் அனைத்தும் திருடப்பட்டு, உங்களின் அனுமதியின்றி மூன்றாம்
நபருக்கு அனுப்பிவிடும்.

நீங்கள் பேசுவதையும் பதிவு செய்யும்,  மறைமுகமாக உங்களின் கமராவை இயக்கி உளவு பார்க்கும்,  ஜி.பி.ஸ் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தையும் அனுப்பும்.
இப்படி பல்வேறு உளவு வேலைகளை உங்களின் உங்களின்
அனுமதியின்றி செய்யும் ஆற்றல் இந்த பெகாசஸ{க்கு உள்ளது.

பாதிக்கப்பட்ட கைத்தொலைபேசிகளைக் கண்டறிவது கடினமாக இருந்திருக்கிறது. ஆனால் தற்போது சில கைத்தொலைபேசிகளில் பெகாசஸை நீக்கும்போது சில
தடயங்களை அந்த மென்பொருள விட்டுச் செல்வதாகக்  கூறப்படுகிறது.

இதனை வைத்தே பெகாசஸ் ஊடுருவலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்
என்.எஸ்.ஓ அமைப்பு இதுவரை தன்னுடைய உளவு மென்பொருளை எந்தெந்த நாடுகள் பயன்படுத்துகின்றன என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

ஆனால், இந்த மென்பொருள் பெரும்பாலும், ஒரு நாட்டின் அரசுக்கே
அதிகாரபூர்வமாக விற்கப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு இந்த  மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு கட்டணமாக 70 முதல்
80 இலட்சம் டொலர்கள் செலுத்த வேண்டும்.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால்  கஷோக்ஜி (Jamal Khashoggi) , கடந்த 2018 ஆம் ஆண்டு  ஒக்ரோபர் மாதம், துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவூதி  அரேபியா துணை தூதரகத்துக்குச் சென்றபோது கொலை  செய்யப்பட்டார்.

அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு  அவரது கைத்தொலைபேசி மூலம் அவரது நடமாட்டமும், கொலை செய்யப்பட்டதற்குப் பின்பு, அவரது குடும்பத்தினரின்
கைத்தொலைபேசிகளும் பெகாசஸ் மூலம் உளவு  பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும், பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த முன்வர வேண்டுமென்று என்று காங்கிரஸ், திரிணாமுல்
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

‘விசாரணை நடத்துவதில் மத்திய அரசுக்கு  என்ன தயக்கம் இருக்கிறது? ஏன் ஒடி ஒளிகிறார்கள்?’ என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களான ராகுல் காந்தி, ப.சிதம்பரம்
போன்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன் நோக்கமும், இது பயன்படுத்தப்படும் விதமும் மிகவும்  தெளிவானது. ஆட்சியில் இருப்பவர்கள் தங்களைத்  தற்காத்துக்கொள்ளும் விதத்தில், எதிர்க்கட்சியினரைப்
பலவீனப்படுத்திடவும், ஊடகங்களில் வெளிவரும்  மாற்றுக்கருத்துகளைக் கண்காணித்திடவுமே இது  பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.

இன்று கண்காணிப்பு (surveillance)   தொழில்நுட்பம் வர்த்தகம் ஆகியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை உளவு பார்த்து அச்சுறுத்தும் அரசும், எமது
தனிப்பட்ட தகவல்களை திருடி வணிகமாக்கும்  முதலாளித்துவப் பொருளாதார முறைகளும் கைகோர்க்கையில்,  இன்றைய நவதாராளவாத உலகில் எதேச்சதிகாரம்  சுலபமாகிவிடுகிறது. தொழில்நுட்பம் சார்ந்த இத்தகைய  எதேச்சதிகார அரச கட்டமைப்புக்கு எதிராக மக்கள் எப்படிப் போராடப்போகிறார்கள் என்பதுதான் இன்று எமக்கு முன்னால்
விடுக்கப்பட்டிருக்கும் சவால்!

 

 

 

Exit mobile version