Site icon ilakkiyainfo

ஆப்கானிஸ்தானின் தலைவர்களாகப் போவது யார், ஆட்சி அதிகாரம் எப்படியிருக்கும்?!: தாலிபன்களின் கதை – 8

தாலிபன்களின் கதை – 8 |ஆப்கானிஸ்தானின் தலைவர்களாகப் போவது யார், ஆட்சி அதிகாரம் எப்படியிருக்கும்?!

தாலிபன் தலைவர்களில் நன்கு ஆங்கிலம் பேசக் கூடியவர், ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய். ஆரம்பத்தில் ராணுவத்தில் பணியாற்றிய இவர், பிறகு தாலிபன்களின் அமைச்சராக இருந்தவர்.

‘அமெரிக்கர்களிடம் கடிகாரம் இருக்கிறது. எங்களிடம் நேரம் இருக்கிறது.’ ஆப்கனை அமெரிக்கர்கள் பிடித்தபோது தாலிபன் தலைவர் முல்லா முகமது ஒமர் சொன்ன வார்த்தைகள் இவை.

2001-ம் ஆண்டில் தாலிபன்கள் முழுமையாக வீழவில்லை. அவர்கள் பின்வாங்கி கிராமங்களில் பதுங்கினர்.

தலைவர்கள் வசதியாக பாகிஸ்தான் சென்று தஞ்சம் புகுந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கர்களின் கடிகாரம் களைப்படைந்து நின்றுவிட, தாலிபன்கள் நேரம் எடுத்துக்கொண்டு பலம் பெற்றார்கள். மீண்டும் ஆப்கனைப் பிடித்திருக்கிறார்கள்.

இடைப்பட்ட நாள்களில் தாலிபன்கள் பல நெருக்கடிகளை சந்தித்திருக்கிறார்கள். குறிப்பாக முல்லா ஒமரின் மரணத்துக்குப் பிறகு இந்த அமைப்பில் பிளவு ஏற்பட்டது.

இதை உணர்ந்தோ என்னவோ, ஒமரின் மரணத்தை இரண்டு ஆண்டுகள் ரகசியமாகவே வைத்திருந்தார்கள்.

2015-ம் ஆண்டு ஜூலையில் ஆப்கன் அரசு அதிகாரிகள் வெளிப்படையாகச் சொல்லும் வரை ஒமரின் மரணம் யாருக்குமே தெரியாது. தாலிபன்களும் அப்போதுதான் அதை ஒப்புக்கொண்டனர்.


முல்லா அக்தர் மன்சூர்

முல்லா அக்தர் முகமது மன்சூர் என்பவரை தலைவராக நியமித்தனர். தாலிபன் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலர் இதை ஏற்கவில்லை. சிலர் விலகினார்கள்.

இந்த நேரத்தில் ஐ.எஸ் அமைப்பு பெரிதாக வளர்ந்திருந்தது. இராக்கிலும், சிரியாவிலும் அது கணிசமான வெற்றிகளைப் பெற்று அங்கு ஒரு பகுதியில் தன் ஆட்சியையும் ஏற்படுத்தியது.

தாலிபன் அமைப்பில் அதுவரை இருந்த வெளிநாட்டு வீரர்கள் பலர், இதைப் பார்த்துவிட்டு ஐ.எஸ் அமைப்புக்குத் தாவினார்கள்.

அவர்களை வைத்து ஆப்கானிதானிலும் ஐ.எஸ் தனது கிளையை ஆரம்பித்தது. தாலிபன்கள் இதை எதிர்க்க, இரண்டு அமைப்புகளுக்கும் சண்டை மூண்டது.

ஒரே ஆண்டில் அமெரிக்கா ஒரு டிரோன் தாக்குதலில் முகமது மன்சூரைக் கொன்றது. தாலிபன்கள் மீண்டும் தலைவர் இல்லாமல் ஆனார்கள். மறுபடியும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஒமரின் மூத்த மகன் முல்லா முகமது யாஹுப் ஒரு தலைவராக உருவாகியிருந்தார்.

எனவே, அவரையே தலைவராக்க பலரும் விரும்பினார்கள். ஆனால், ‘எனக்கு இன்னும் போர் அனுபவங்கள் தேவைப்படுகிறது’ என்று மறுத்த யாஹுப், மௌல்வி ஹிபதுல்லா அகுன்ஸடா என்பவரைத் தலைவராக்கினார்.

தான் ராணுவப் பணிகளை மட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்றார். அவரைத் துணைத் தலைவராக்கி, ஆப்கனில் போரிடும் பணியையும் அவருக்குக் கொடுத்தார்கள்.

26 தலைவர்களைக் கொண்ட தாலிபன் தலைமை கவுன்சிலான ரஹ்பாரி ஷுராவிலும் இடம் கொடுத்தார்கள்.

அதுவரை தாலிபன் ராணுவ நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்த இப்ராஹிம் சதர் என்பவர் இதனால் கோபமானார். சமாதானத்தில் நம்பிக்கை இல்லாத போராளி அவர்.

அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைக் கடுமையாக எதிர்த்து வந்தவர், முல்லா ஒமரின் மகனுக்குத் தன் பதவியைக் கொடுத்ததும் இன்னும் கொந்தளித்தார். தாலிபனிலிருந்து விலகி தனி அமைப்பு ஆரம்பித்தார்.


தாலிபன் தலைவர்கள்

தாலிபன் தலைவர்கள் பலர் எப்படி இருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தற்போதைய தலைவர் மௌல்வி ஹிபதுல்லா அகுன்ஸடாவின் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே இதுவரை வெளியாகி இருக்கிறது.

60 வயதைத் தொடும் இவர் அதிகம் வெளியில் தலைகாட்டுவதில்லை. முல்லா ஒமரின் மறைவுக்குப் பிறகு தாலிபன்கள் மத்தியில் நிலவிய மோதலைத் தடுத்து எல்லோரையும் இணைத்தவர் என்பதால், இவர்மீது எல்லோருக்கும் மதிப்பு அதிகம்.

ஆப்கனை தாலிபன்கள் ஆண்டபோது தலைமை நீதிபதியாக இருந்தவர். அங்கு அந்தக் காலத்தில் தாலிபன்கள் வழங்கிய எல்லா கொடூர தண்டனைகளையும் வடிவமைத்த மாஸ்டர் மைண்ட் இவர்தான்.

மத போதகர் என்பதால் போருக்குப் போனதில்லை. இப்போது ஆப்கனை தாலிபன்கள் கைப்பற்றி இருந்தாலும், இவர் எந்தப் பதவியையும் விரும்பவில்லை என்கிறார்கள்.

ஆட்சி அமைக்கும் பேச்சுவார்த்தைகளில்கூட இவர் தலையிடவில்லை என்கிறார்கள். என்றாலும், தாலிபன் அமைப்பில் எந்த இறுதி முடிவையும் இவரே எடுக்கிறார்.

 

தாலிபன்களின் நம்பர் 2, முல்லா அப்துல் கனி பரதார். இந்த அமைப்பை முல்லா ஒமருடன் இணைந்து நிறுவிய தலைவர்களில் ஒருவர்.

‘பரதார்’ என்றால் ‘சகோதரர்’ என்று அர்த்தம். முல்லா ஒமர் இவரை இப்படி அழைத்து அந்த அளவுக்கு அன்பு காட்டினார். தாலிபன் அமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவராக இருக்கும் இவர்தான் அந்த அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர். பாகிஸ்தானின் பாதுகாப்பில் வளர்ந்தவர்.

தாலிபன்கள் வீழ்ந்தபோது பாகிஸ்தானுக்குப் போய் தலைமறைவானார். அமெரிக்கப் படைகளும் பாகிஸ்தான் படைகளும் தேடுதல் வேட்டையில் இவரைப் பிடித்தன.

அமெரிக்கர்கள் தனியாகப் பிடித்திருந்தால் கொன்றிருப்பார்கள். பாகிஸ்தான் ராணுவத்தினர் இவரைக் காப்பாற்றி சிறையில் அடைத்தார்கள்.


முல்லா அப்துல் கனி பரதார்

ஆப்கானிஸ்தானில் தாக்குப் பிடிக்க முடியாமல் திரும்பிப் போய்விடலாம் என முடிவெடுத்தபோது, இவரைத்தான் அமெரிக்கா அணுகியது.

ஒரு தனித் தூதரை நியமித்து இவருடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் தாலிபன்கள் அரசியல் அலுவலகம் திறந்தனர். பரதாரை சிறையிலிருந்து விடுவிக்கச் செய்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.

52 வயதாகும் பரதார், அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப்புடன் போனில் பேசிய ஒரே தாலிபன் தலைவர் என்ற பெருமைக்குரியவர்.

அமெரிக்காவுடனான சமாதான ஒப்பந்தத்தில் தாலிபன்கள் சார்பில் இவர்தான் கையெழுத்து போட்டார். இப்போது ஆப்கனில் அரசு அமைக்க, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தாலிபன்களின் ஆட்சியில் இவரே முக்கியமான பொறுப்பில் இருப்பார்.

தாலிபன் துணைத் தலைவர்களில் இன்னொருவர், முல்லா முகமது யாஹுப். ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை இவரை யாருக்கும் தெரியாது. இதுவரை இவரின் புகைப்படம் ஒன்றுகூட வெளியானதில்லை.

தாலிபன் தலைவர் முல்லா ஒமரின் மகனான இவர், இப்போதுதான் 30 வயதைத் தாண்டியிருக்கிறார். அப்பா போல இல்லாமல், சமாதானத்தில் நம்பிக்கையுள்ளவராக இருக்கிறார். சவுதி அரேபிய மன்னர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்.

தாலிபன் தலைவர் மௌல்வி ஹிபதுல்லா அகுன்ஸடா கொரோனா தொற்றுக்கு ஆளானபோது, அமைப்பின் எல்லா முடிவுகளையும் எடுத்தவர் யாஹுப். கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத ஒரு தலைவராகவே அவர் வலம் வருகிறார். போர் அனுபவங்களும் நிர்வாக அனுபவங்களும் பெற்றபிறகு இந்த இளவரசருக்கு தலைவராக முடிசூட்டி விடுவார்கள்.


சிராஜுதீன் ஹக்கானி

தாலிபன் அமைப்பின் மூன்றாவது துணைத் தலைவர், சிராஜுதீன் ஹக்கானி. ஆப்கன் தலைவர்களில் ஒருவரான ஜலாலுதீன் ஹக்கானியின் மகன்.

‘ஹக்கானி நெட்வொர்க்’ என்ற பெயரைக் கேட்டால், அமெரிக்க உளவுத்துறையினர் தூக்கத்தில் கூட நடுங்குவார்கள்.

ஆப்கன் – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பல மதரஸாக்களை உருவாக்கி, தாலிபன் அமைப்பில் ஆயிரக்கணக்கான இளைஞர்களைச் சேர்த்தது இந்த ஹக்கானி நெட்வொர்க். ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அமெரிக்க உளவுத்துறை உதவி செய்தது.

ஒரு கட்டத்தில் இவர்கள் அமெரிக்காவையும் எதிர்க்க, அதன்பின் இதை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா. பாகிஸ்தானும் இப்படி அறிவித்திருக்கிறது. என்றாலும், தாலிபன்களுடன் இணைந்தும், தனியாகவும் ஆப்கனில் இயங்குகிறார்கள் ஹக்கானிகள்.

50 வயது சிராஜுதீன் ஹக்கானி, பல தாக்குதல்களின் மூளையாக செயல்பட்டவர். ஆப்கன் அதிபராக இருந்த ஹமீத் கர்சாயைக் கொல்ல முயன்றது, காபூல் இந்தியத் தூதரகத்தை குண்டுவீசி தாக்கியது,

ஆப்கனில் வசிக்கும் வெளிநாட்டவர்களைக் கடத்தியது என பல விவகாரங்களில் இவர் பெயர் அடிபடுகிறது. தாலிபன்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி மற்றும் ஆயுத உதவிகள் இவர் வழியாகவே வருகின்றன.

அப்துல் ஹக்கீம் ஹக்கானி

அப்துல் ஹக்கீம் ஹக்கானி. அமெரிக்காவுடன் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கியவர். 60 வயதாகும் இவர், பாகிஸ்தானின் குவெட்டாவில் ஒரு மதரஸாவை நடத்தி வருகிறார்.

தாலிபன்களின் நீதித்துறையை நிர்வாகம் செய்பவர் இவர்தான். தாலிபன்களின் மதகுருக்கள் சபையைத் தலைமை தாங்கி நடத்தும் இவர், தாலிபன் தலைமைக்கு மிக நெருக்கமானவர்.

தாலிபன் தலைவர்களில் நன்கு ஆங்கிலம் பேசக் கூடியவர், ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய்.

ஆரம்பத்தில் ராணுவத்தில் பணியாற்றிய இவர், பிறகு தாலிபன்களின் அமைச்சராக இருந்தவர்.

அந்த நாள்களில் அமெரிக்காவுக்கு பயணம் செய்து, ‘எங்களுடன் தூதரக உறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று கேட்டவர்.

சமாதானப் பேச்சுவார்த்தைக்காக தாலிபன்கள் அலுவலகம் திறந்தபோது, அதைப் பார்த்துக்கொள்ள இவரைத் தான் நியமித்தார்கள்.

தாலிபன்கள் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே சீனா, உஸ்பெகிஸ்தான் என பல நாடுகளுக்கு தாலிபன் பிரதிநிதியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தியவர். பல நாடுகளின் தலைவர்கள் தங்கள் கருத்தை இவர் வழியாகவே தாலிபன்களுக்குத் தெரிவிக்கிறார்கள்.


முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய்

தாலிபன்கள் கையில் காபூல் வீழ்ந்ததும், ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் பத்திரிகையாளர் சந்திப்பை அவர்கள் நடத்தினார்கள்.

அப்போது ஒரு மனிதரின் முகத்தைப் பார்க்க எல்லோரும் ஆர்வமாக இருந்தார்கள். அவர், ஜபிஹுல்லா முஜாகீத். தாலிபன்களின் செய்தித் தொடர்பாளராக கடந்த பல ஆண்டுகளாக சர்வதேசப் பத்திரிகையாளர்களுக்கு இவர்தான் பேட்டி கொடுத்தார், எல்லாமே போனில்தான்.

முதல்முறையாக அவர்கள் காபூலில்தான் அவர் முகத்தைப் பார்த்தார்கள். ‘உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் யாரையும் எதிரிகளாக வைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை’ என அமைதியின் வடிவம் போல அவர் பேசினார்.

ஜபிஹுல்லா முஜாகீத்

அந்த பிரஸ்மீட்டில் அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் அதற்கு முன் அமர்ந்திருந்தவர், ஆப்கன் அரசின் செய்தித்துறை இயக்குநர். அவரை ஒரு தாக்குதலில் கொன்றுவிட்டு, அதன்பிறகே அந்த நாற்காலியில் அமர்ந்தார் இந்த சமாதானத் தூதர்.

தாலிபன்களின் வருங்கால ஆட்சியில் இந்த ஏழு பேரும் தவிர்க்க முடியாத மனிதர்களாக இருப்பார்கள். அமெரிக்காவுடன் இவர்கள் சமாதானம் பேசிய கதையும், ஒவ்வொரு கட்டத்திலும் அமெரிக்கா பணிந்த கதையும் விசித்திரமானது.

விசித்திரங்களை நாளை படிக்கலாம்!

பின்லேடனை கொன்ற அமெரிக்காவால் ஏன் முல்லா ஒமரை பிடிக்க முடியவில்லை?: தாலிபன்களின் கதை – 7

 

Exit mobile version