Site icon ilakkiyainfo

உடலுறவில் பெண்கள் இதையெல்லாம் விரும்புகிறார்கள் எனத் தெரியுமா? – பெட்ரூம் – கற்க கசடற – 3

உடலுறவின்போது பெண்கள் விரும்பும் சில ஆச்சர்யமான விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்தப் பட்டியலில் உங்கள் விருப்பங்கள் என்ன? இதுவரை இவற்றில் எதையேனும் முயற்சி செய்திருக்கிறீர்களா? இல்லையெனில், இன்றே தொடங்குவீர்!

 

செக்ஸில் பொதிந்திருக்கும் ஆச்சர்யங்களின் எண்ணிக்கையை அளவிட முடியாது. உடலுறவு என்பது ஆரோக்கியமான உறவில் முக்கியப் பங்கு வகிக்கும் விஷயம்.

அதை ஏதோ கடமைக்காகச் செய்வது அந்தக் கட்டிலுக்கே பொறுக்காது! படுக்கையறையில் உங்களுக்கு எது பிடிக்கும் எனத் தெரியுமா? இதுவரை அதுபற்றி யோசிக்கவில்லையென்றாலும், இனியாவது யோசியுங்கள்.

உங்கள் இணைக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். உங்கள் விருப்பங்களையும் தயங்காமல் வெளிப்படுத்துங்கள்.

ஏனெனில், படுக்கையறையில் எந்த விதிமுறையும் கிடையாது. எது சரி, எது தவறு என்கிற வரையறையும் கிடையாது. இருவருக்கும் இயைந்த எந்தவொரு விஷயமும் அங்கு இன்பம் தரும்.

உடலுறவின்போது பெண்கள் விரும்பும் சில ஆச்சர்யமான விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்தப் பட்டியலில் உங்கள் விருப்பங்கள் என்ன? இதுவரை இவற்றில் எதையேனும் முயற்சி செய்திருக்கிறீர்களா? இல்லையெனில், இன்றே தொடங்குவீர்!

உடலுறவின்போதான விருப்பம் என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும்தான். அது மட்டுமல்ல, வயது மற்றும் சூழலைப் பொறுத்தும் விருப்பு வெறுப்புகள் உருவாகலாம். இருப்பினும், உலகளாவிய அடிப்படை விருப்பங்கள் குறித்து முதலில் அறிவோம்.

படுக்கையில் உங்கள் இணை என்ன விரும்புகிறார் என்பதை அறிவது உங்கள் இருவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

உங்கள் துணை என்ன விரும்புகிறார் என்பதைக் கண்காணிப்பது கடினமாகத் தோன்றலாம். கவலை வேண்டாம்.

பெரும்பாலும், உடலுறவின்போது ஒரு பெண் விரும்பும் மிக முக்கியமான விஷயங்கள் காலப்போக்கில் அவ்வளவாக மாறுவதில்லை.

ஆண் என்ன விரும்புகிறார் என்பதைப் பெண்களால் எளிதில் கண்டறிய முடியும்தானே? நீங்கள் (அல்லது உங்கள் இணை) விரும்புவதைப் பார்த்து வெட்கப்பட வேண்டாம்.

நீங்கள் ஆரோக்கியமான, ஒருமித்த உறவில் இருக்கும்வரை, படுக்கையில் நீங்கள் விரும்புவது அனைத்துமே இயல்பானவை. அதோடு, இவையெல்லாம் உங்கள் இருவருக்கே இருவருக்கான விஷயம்தானே. ஸோ, என்ஜாய்!

இது அது அல்ல… அப்போ எது?

செக்ஸ் என்பது பெரும்பாலும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்படுவது போன்றதல்ல.

படுக்கையறை காரியங்களைக் கொஞ்சம் மெதுவாக, ரிலாக்ஸாகச் செய்வது நன்மைகளைத் தரும்.

மெதுவாகச் செல்வதன் மூலம் அன்றாட வாழ்க்கையின் நெருக்கடியிலிருந்து மீள உதவும். இந்த நேரம் நீங்கள் முழுமையாக நிம்மதியாக இருக்கவும் உதவுகிறது.

மெள்ள மெள்ள வேகம் கூட்டி உச்சக்கட்டத்தை அனுபவிப்பது விவரிக்க முடியாத இன்பத்தை அளிக்கும். குறிப்பாக, நாள் முழுவதும் அதிக வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு இந்த `ஸ்லோ அண்ட் ஸ்டெடி’ செயல்முறை நல்ல பலனளிக்கும்.

இணையைப் பற்றி நினைத்தாலே இனிக்கும்!

பெண்களுக்கு உடலின் மூலம் கிடைக்கும் கிளர்ச்சியைவிடவும் உள்ளத்தின் மூலம் கிடைக்கும் பரவசமே மிக முக்கியம். `உன்னையே நினைச்சுக்கிட்டிருந்தேன்’ என்று சொன்னாலே போதும்…

உள்ளே உருகத் தொடங்கிவிடும். வெறும் இயக்கம் மட்டுமே பெண்களுக்குப் போதுமானதல்ல. செய்கிற காரியங்களைவிடவும் பேச்சு ரொம்பவே முக்கியம்.

ஆகவே, வாயை மூடாமல் இதமாக, இனிமையாக வருடிக்கொண்டே பேச்சையும் தொடர்வதே ஆண்களுக்கு அழகு.

அந்த அறைக்குள் எந்த வார்த்தையும் தவறல்ல!

உடலுறவின்போது அப்படி, இப்படி – ஏன் எப்படிப்பட்ட வார்த்தைகளையும், உடலுறுப்புகளின் கொச்சையான பெயர்களையும் இணை சொல்லும்போதும், சிருங்கார ரசத்தோடு வர்ணிக்கும்போதும் பல பெண்கள் அந்தப் பேச்சை விரும்பி அனுபவிக்கிறார்கள் என்பது உலகம் முழுக்கவே அறியப்பட்ட உண்மை.

ஆகவே, இதில் `ஆபாசம்… அய்யோ இப்படியெல்லாமா பேசுவாங்க’ என்றெல்லாம் அதிர்ச்சிக்கு ஆளாக வேண்டாம்.

அதோடு முடிவதில்லை, அது!

ஒரு பெண்ணுக்கு முழுமையான உடலுறவு என்பது உச்சக்கட்டத்தோடு முடிந்துவிடுவதில்லை. தன்னால், தன் செயல்பாடுகளால் இணை மகிழ்விக்கப்பட்டாரா எனத் தெரிந்துகொள்ள விரும்புவது வழக்கம்.

இது இணைக்கும் பொருந்தும்தானே? அதனால் `வேலை முடிந்தது’ எனத் திரும்பிப் படுத்து, குறட்டை விடத் தொடங்காமல், ஓர் அணைப்போடு கொஞ்ச நேரமாவது பேசிக்கொண்டிருக்க வேண்டியது அவசியம். அதோடு, இரு தரப்பினரும் மனம் விட்டுப் பேச இதைவிட உகந்த நேரம் ஏது?

அங்கே முரட்டுத்தனமும் இனிமைதான்!

சில கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, சில பெண்கள் உடலுறவின்போது சிறிது முரட்டுத்தனத்தை விரும்புகிறார்கள். மென்மையான, விளையாட்டுத்தனமான செயல்பாடுகள் உறவில் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். `முரடா’, `முரட்டுப் பயலே’ வகையறாக்களை எல்லாம் கொஞ்சம் அனுமதிக்கலாம்!

புதிய விஷயங்களை முயலலாமே!

முழுக்க முழுக்க ஸ்டெப் பை ஸ்டெப் போல ஒரு விதிமுறையைப் பின்பற்றி செக்ஸ் செயல்பாடு இருப்பதையோ, அது முற்றிலும் வழக்கமானதாக இருப்பதையோ யாரும் விரும்புவதில்லை.

அப்படியிருந்தால் அது மானுடவியலின் கவர்ச்சி அம்சமாக இருக்காதே! புதிய விஷயங்களை முயற்சி செய்வது உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஓர் உற்சாகத்தை உண்டாக்க உதவும்.
எதிர்வினை அவசியம்!

உடலுறவின்போது எதிர்வினையாற்றவும், அவர்கள் விரும்பும் உணர்வுகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பு அளிக்கப்படுவதை பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை.

கணநேர எதிர்வினைதான் என்றாலும் அந்தச் சத்தமும் அதன் தொடர்ச்சியும் இருவரையும் எங்கேயோ கொண்டு செல்லும்!

ஆச்சர்யங்கள் அவசியம்!

ஏற்கெனவே கூறியதுபோலவே, செக்ஸ் என்பது ஒரு ஸ்கிரிப்ட் போல எழுதப்பட்டதை நிகழ்த்துவதல்ல. ஒரு பெண்ணை யூகிக்க வைப்பது முக்கியம் என்று மனவியலாளர்கள் கருதுகின்றனர்.

`ஓ, நாங்கள் உடலுறவு கொள்ளப் போகிறோமா?’, `இன்று என்ன மாற்றம் இருக்கும்’, `இன்னும் என்ன செய்யப் போகிறாய்’ என்பது போன்ற ஆச்சர்யங்கள், வாழ்க்கையைப் போலவே உடலுறவிலும் நல்லது.

ஓர் இணைப்பை உருவாக்குங்கள்!

பாலியலில் பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று, அதன் நெருக்கம். காதலாகி, கசிந்துருகவே அவர்கள் விரும்புகிறார்கள் என்கிறது அறிவியல். தங்கள் இணையுடன் பெண்கள் உருவாக்கும் தொடர்பு அந்த ஓர் உடலுறவுக்காக மட்டுமே அல்ல.

அது அன்பாகக் கனிந்து நீடிக்க வேண்டும் என்பதே அவர்களின் உள்ளாசை. உறவு என்பது இருவரையும் நெருக்கமாக உணர வைப்பதோடு, உடலுறவின்போது உடல் வெளியிடும் ஹார்மோன்களுக்கும் ஒரு பாத்திரத்தை அளிக்கின்றன. இந்த ஹார்மோன்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் உகந்தவை!

ஆசை அதிகம் வச்சு அந்தக் காரியத்தில் ஈடுபடும்போது அணு அணுவாக இன்பம்தான். உங்கள் விருப்பங்களை நீங்களே அறியுங்கள்… தயங்காமல் உங்கள் இணையிடம் வெளிப்படுத்தத் தயாராகி களத்தில் இறங்கி கலக்குங்கள். இனியும் என்ன வெட்கம்!

– சஹானா

Exit mobile version