Site icon ilakkiyainfo

மக்களின் ஆரோக்கியத்தை கருத்திற் கொண்டே மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன : எஸ். பி. திஸாநாயக்க

மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி கொடுத்தது யார் என்ற கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினமானது.

மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்திற் கொண்டே மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாக அமையும். இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையிடும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும், மனித உரிமை ஆணையாளருக்கும் கிடையாது.

காணாமல்போனார் விவகாரமும், தமிழ் பிரச்சினையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், புலம் பெயர் தமிழர் அமைப்புக்களும் தங்களின் சுய தேவைக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்பில் நல்ல நிலைப்பாடு ஏதும் கிடையாது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல் போனோருக்கு நேர்ந்ததை அவர்களின் உறவினர்கள் நன்கு அறிவார்கள். இருப்பினும் தற்போது  காணாமலாக்கப்பட்டோரை தேடி தருமாறு போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏற்பட்ட பேரழிவிற்கு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும், அவரது குடும்பத்தாரும் பொறுப்புக்கூற வேண்டும்.

இராணுவத்தில் சரணடைவதற்கான ஆயுதங்களை எறிந்த போராளிகளையும், இராணுவத்தினர் வசம் நோக்கி சென்ற தமிழர்களையும் புலிகள் அமைப்பின் பிரதான தரப்பினரே கொன்றனர். இந்த மனித உரிமை மீறல் குறித்து மனித உரிமை பேரவை ஆராயவில்லை.

நாட்டில் காணப்படும் உள்ளக பிரச்சினைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முரண்பாடற்ற தீர்வை வழங்குவார். எடுக்கப்படும் தீர்மானங்கள் நாட்டின் சுயாதீனத்தன்மைக்கும், பொதுச்சட்டத்திற்கும் உட்பட்டதாக இருக்கும்.

கேள்வி – மதுபானசாலைகளை திறப்பதற்கு உண்மையில் அனுமதி வழங்கியது யார்?

இந்த கேள்விக்கு எம்மால் பதிலளிப்பது மிகவும் கடினமானது. மதுபானசாலைகள் மூடப்பட்டதால் கிராமபுறங்களில் சட்டவிரோதமான மதுபான உற்பத்திகள் அதிகரித்துள்ளன.

சட்டவிரோத மதுபானங்கள் உடலாரோக்கியத்திற்கு தீங்கிழைக்கும். நாட்டு மக்களின் உடலாரோக்கியத்தை கருத்திற்கொண்டே மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

Exit mobile version