ilakkiyainfo

கைகொடுக்கப் போவது மனித உரிமைகள் பேரவையா, ஐரோப்பிய ஒன்றியமா?

அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான இறுதிப் போர் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விடயத்தில், அக்காலத்தில் ஆட்சி புரிந்த அரசியல் தலைவர்களையும் இராணுவ தலைவர்களையும் பொறுப்புக் கூறச் செய்வதை நோக்கமாகக் கொண்டதாகவே, வடக்கு-கிழக்கு தமிழ் அரசியல் இருக்கிறது.

இந்த விடயத்தில், தமிழ்த் தலைவர்கள், ஐ.நா மனித உரிமைகள் பேரவை, ஏனைய ஐ.நா அமைப்புகள் மீதே, தமது நம்பிக்கையை வைத்துள்ளனர்.

இதன் காரணமாகவோ என்னவோ, அவர்கள் ஏனைய தேசிய பிரச்சினைகளையோ, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியையோ கைவிட்டுள்ளவர்கள் போல் காணப்படுகின்றார்கள்.

ஆனால், அவர்கள் எதிர்பார்க்கும் அளவில், மனித உரிமைகள் பேரவையிலோ,  ஏனைய உலக அரங்குகளிலோ ஏதும் நடைபெறுகிறதா, நடைபெறுமா என்பதும் சந்தேகத்துக்கு உரியதாகவே இருக்கிறது.

குறிப்பாக, மனித உரிமை மீறல்கள் விடயத்தில், மனித உரிமைகள் பேரவையின் வேகம், ஆச்சரியத்துக்குரிய வகையில் மந்தமாகக் காணப்படுகிறது.

போர் நிறைவடைந்து 12 வருடங்கள் முடிவடைந்துள்ளன. அதேவேளை, இலங்கையில் போர்க் காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளனவா என்பதைப் பற்றி, மனித உரிமைகள் பேரவை நடத்திய விசாரணையொன்றின் அறிக்கை வெளியிடப்பட்டு, ஆறாண்டுகளாகிவிட்டது.

போரில் ஈடுபட்ட இரு சாராரும் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என அந்த அறிக்கை கூறியது.

போர் முடிவடைந்து 12 ஆண்டுகளும் மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டு ஆறாண்டுகளும் சென்றடைந்துள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் தான், மனித உரிமைகள் பேரவை, குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக தகவல்களையும் சாட்சியங்களையும் திரட்டுவதாக முடிவு செய்தது.

அத்தோடு, “அவ்வாறு மனித உரிமைகளை மீறியதாக நம்பகமான முறையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, பயணத்தடை, பொருளாதாரத் தடை ஆகியவற்றை விதிக்க வேண்டும்.

அவர்களுக்கு எதிராக, தத்தமது நாடுகளிலேயே வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்” என்று மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகர் மிச்சல் பச்சலே, 2021 மார்ச் மாதம் உறுப்பு நாடுகளிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர், செப்டெம்பர் 12 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த 13 ஆம் திகதி, தமது வாய்மூல அறிக்கையை, பேரவை முன் சமர்ப்பித்த போதும், “மேற்கண்டவாறு இலங்கையில் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக, சாட்சியங்களைத் திரட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்று பச்சலே தெரிவித்தார்.

தமது அலுவலகம், அப்பணிக்காக தகவல் மற்றும் சாட்சியக் காப்பகமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அது ஐ.நாவிடமிருந்து பெற்ற 120,000 ஆதார ஆவணங்களையும் பொருட்களையும் கொண்டுள்ளதாகவும் இந்த வருடம் அதில் முடிந்தளவு தகவல்களை திரட்டுவதாகவும் அவர் தமது உரையில் தெரிவித்தார்.

இப்பணியை பூரணமாக நிறைவேற்ற, உரிய செலவுத் தொகையை வழங்குவதை உறுதி செய்யுமாறும் இலங்கையில் இடம்பெறுபவற்றை மிக கவனமாகக் கவனித்து வருமாறும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை ஆகியவற்றை முன்னெடுத்துச் செய்வதற்கான நம்பகமான செயன்முறையொன்றைப் பற்றி ஆராயுமாறும் அவர் உறுப்பு நாடுகளிடம் கேட்டுக்கொண்டார்.

எனவே இலங்கையில் மனித உரிமை விடயத்தில், மனித உரிமைகள் பேரவையின் பயணம், தமிழ்த் தலைவர்கள் எதிர்பார்ப்பதைப் பார்க்கிலும் மிக நீண்டது என்றே தெரிகிறது.

இலங்கை அரச தலைவர்களும், வருடம் தோறும் ஏதாவது ஒன்றைச் செய்து, தாம் கடந்த கால மனித உரிமை மீறல்களைப் பற்றி, நடவடிக்கை எடுத்து வருவதைப் போல் பாசாங்கு செய்து, காலத்தைக் கடத்தி வருகின்றனர்.

எனினும், மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் பிரேரணைகள், மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகர் வெளியிடும் அறிக்கைகள், இலங்கை தலைவர்களைச் சற்று குழப்பமடையச் செய்யாமலும் இல்லை.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்துள்ளது.

மனித உரிமைகள் பேரவையைப் போலன்றி, ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூடிய அமைப்பாகத் தெரிகிறது.

மனித உரிமைகள் விடயத்தில், இதற்கு முன்னரும் அவ்வொன்றியம், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தது.

2010ஆம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியம், மனித உரிமைகளை இலங்கை மதிப்பதில்லை என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைகளை இடை நிறுத்தியது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில், 2017ஆம் ஆண்டிலேயே அந்தச் சலுகைகள் மீண்டும் இலங்கைக்கு வழங்கப்பட்டன.

2021 ஜூன் மாதம் 10 ஆம் திகதியும் ஐரோப்பிய நாடாளுமன்றம், இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் வகையிலான ஒரு பிரேரணையை நிறைவேற்றியது. குறிப்பாக, இலங்கை அரசாங்கம் பயங்கரவாத் தடைச்சட்டத்தை, தமிழ், முஸ்லிம் போன்ற சிறுபான்மையினருக்கு எதிராகப் பாவிப்பதை எதிர்த்தே, அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அந்தப் பிரேரணை, மார்ச் மாதம் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அடிப்படையாகக் கொண்டே முன்வைக்கப்பட்டதாக, அந்தப் பிரேரணையின் சில வாசகங்கள் மூலம் தெரிகிறது.

மனித உரிமை விடயங்களில், தமது பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில், இலங்கை அரசாங்கத்தைத் தூண்டும் வண்ணம், குறிப்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் தரத்துக்கு மேம்படுத்துமாறு தூண்டுவதற்காக, ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை ஒரு தூண்டுகோலாகப் பாவிக்குமாறும், அவசியம் ஏற்பட்டால் அச்சலுகைகளைத் தற்காலிகமாக நிறுத்துமாறும், ஐரோப்பிய நாடாளுமன்றம் அப்பிரேரணையின் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அடுத்த திங்கட்கிழமை (செப்டெம்பர் 27), இந்த விடயங்களை இலங்கை அரசாங்கத்தின் தலைவர்களுடன் கலந்துரையாட, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கிறது.

மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர், ஒவ்வொரு வருடமும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக, அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார்.

ஒவ்வொரு வருடமும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, அந்தந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றிய புதுப் புது குற்றச்சாட்டுகள், அந்த அறிக்கைகளில் சுமத்தப்பட்டு வருகின்றன.

தீவிரவாதப் போக்குடையவர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணையின்றி மறுவாழ்வு நிலையங்களில் இரண்டு வருடம் வரை தடுத்து வைக்கக் கூடிய வகையில், கடந்த மார்ச் மாதம், அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டது.

ஒருவர் தீவிரவாதப் போக்குடையவர் என்று, பொலிஸார் எவ்வாறு முடிவு செய்ய முடியும் என்பதும் குற்றஞ்சாட்டப்பட்டவர், தமது பக்க நியாயத்தை முன்வைக்க அவகாசம் வழங்கப்படுவதில்லை என்ற காரணத்தையும் முன்வைத்து, இப்போது அந்த வர்த்தமானிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2008, 2009 ஆம் ஆண்டுகளில், 11 பேரை காணாமலாக்கிய சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் சட்ட மாஅதிபர், அந்த வழக்கைத் தொடர்வதில்லை எனக் கூறி வாபஸ் பெற்றார்.

அதனை அடுத்து, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டது. இச்சம்பவங்கள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட குற்றச்சாட்டுகளாகும்.

சீனி, அரிசி விலை ஏற்றத்தை அடுத்து, ஓகஸ்ட் 30ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார். அது, சாதாரண மக்களின் வாழ்க்கையில், இராணுவத்தின் தலையீட்டை மேலும் அதிகரிக்கும் என்றும் பச்சலே சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றை எல்லாம் குறிப்பிட்டுவிட்டுத் தான், மனித உரிமைகளை மீறியோருக்கு எதிரான சாட்சியங்களைத் திரட்டும் பணியை, தமது அலுவலகம் ஆரம்பித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சாட்சியங்களைத் திரட்டிக் கொண்டாலும் ஐ.நா சபையின் உறுப்பு நாடுகள் தான், அச்சாட்சியங்களைப் பாவித்து, மனித உரிமைகளை மீறியோருக்கு எதிராக, தத்தமது நாடுகளிலேயே வழக்கு விசாரணைகளை நடத்த வேண்டும்.

அது அந்தந்த நாடுகளில் ஆட்சியில் இருப்போரின் விருப்பத்துக்கு ஏற்பவே நடைபெறக்கூடும். கடந்த மார்ச் மாதம், சர்வதேச மன்னிப்புச் சபையும் இந்த விடயத்தை சுட்டிக் காட்டி இருந்தது.

தமிழ்த் தலைவர்கள் கூறுவதைப் போல், இலங்கையின் மனித உரிமைகள் பிரச்சினையை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்வதானால் அது, ஐ.நா பாதுகாப்புச் சபை மூலமாகவே முடியும்.

அதற்கு சீனா, ரஷ்யா இடமளிக்குமா என்பது சந்தேகமே. இந்த நிலையில், தமிழ்த் தலைவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

எம்.எஸ்.எம். ஐயூப்


Exit mobile version