Site icon ilakkiyainfo

சிதம்பரத்தில் மாணவரை காலால் உதைத்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!!- (வீடியோ)

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசு பள்ளியில் வகுப்பை புறக்கணித்த மாணவரை பிரம்பால் அடித்து காலால் உதைத்து கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் என இரு தரப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் நேற்று (அக்டோபர் 14) காலை 11 மணியளவில் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த போது குமரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவர் இயற்பியல் நோட்டு எடுத்துவரவில்லை என கூறப்படுகிறது.

அதை எடுத்து வருவதாக அனுமதி பெற்று வெளியேறிய அவர் பள்ளியின் மூன்றாவது மாடியில் வகுப்பைப் புறக்கணித்திருந்த மற்ற ஏழு மாணவர்களுடன் இருந்துள்ளதாக தெரிகிறது.

அப்போது ஆய்விற்கு சென்ற சென்ற‌ தலைமை ஆசிரியர் மாடியில் குமரன் உட்பட 8 மாணவர்கள் இருப்பதைக் கண்டதும், அவர்களை அழைத்து வந்து வகுப்பில் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து வகுப்பை புறக்கணித்த குமரன் நீங்கலாக மற்ற மாணவர்களை ஆசிரியர் பிரம்பால் அடித்து வகுப்பறையில் அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து குமரனிடம் தன்னிடம் பொய் சொல்லி விட்டுச் சென்றதை ஏற்க முடியாது என்று கூறி அவரை பிரம்பால் அடித்தும் காலால் உதைத்தும் தாக்கியுள்ளதாக தெரிய வந்தது.

இது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பிடம் பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் காணொளி காட்சிகள் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

YouTube video player

Exit mobile version