ilakkiyainfo

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, முதல் முறையாக ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் அவரது தோழி வி.கே. சசிகலா.

அங்கு நிலவிய காட்சிகள் அ.தி.மு.கவைக் கைப்பற்ற நினைக்கும் அவரது முயற்சி வெற்றிபெறுமா என்ற பழைய கேள்விக்கு புதிய பொருத்தப்பாட்டை தந்துள்ளன.

அ.தி.மு.க. துவங்கப்பட்ட 50வது ஆண்டு நாளை துவங்கவிருக்கும் நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவிடங்களில் இன்று அஞ்சலி செலுத்தினார்.

காலை 10.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், சற்று தாமதமாகப் புறப்பட்டு சுமார் 11.45 மணியளவில் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நினைவிடங்களுக்கு வந்தார் வி.கே. சசிகலா.

அவரது வருகையை ஒட்டி பெரும் எண்ணிக்கையில் தொண்டர்கள் அந்த நினைவிடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

முதலில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்த சசிகலா, அங்கே கண்ணீர் மல்க நீண்ட நேரம் நின்றார்.

பிறகு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர், பிறகு எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதற்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் நினைவிடத்திலும் சசிகலா அஞ்சலி செலுத்தினார்.

இதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “நான் இங்கே வருவதில் ஏன் தாமதம் ஏற்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.

அம்மாவுடன் நான் இருந்த காலம் என் வாழ்வில் முக்கால் பகுதி. இந்த ஐந்தாண்டு கால இடைவெளியில் என் மனதில் தேக்கிவைத்திருந்த பாரத்தை அம்மா முன் இறக்கிவைத்துவிட்டேன்.

அம்மாவிடம் நடந்ததைச் சொல்லி, ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறதென்பதை சொல்லிவிட்டு வந்தேன்” என்று தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் வருகை எதிர்பார்த்ததைப் போலவே அ.தி.மு.க. முகாமில் சலசலப்புகளை ஏற்படுத்தியது.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், “ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானவர்கள் ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார்கள்.

அதில் இவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம். அதிமுகவில் அவருக்கு இடம் கிடையாது. அ.தி.மு.கவைக் கைப்பற்ற நினைக்கும் அவரது கனவு பலிக்காது” என்று தெரிவித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவுடன் இணைந்து வழக்கைச் சந்தித்த வி.கே. சசிகலாவுக்கு 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு, அம்மாதம் 15ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹாரச் சிறையில் அடைக்கப்பட்டார். நான்காண்டு தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அ.தி.மு.கவைக் கைப்பற்ற விரும்புகிறாரா சசிகலா?

அ.தி.மு.கவை சசிகலா கைப்பற்ற விரும்புகிறாரா என்பது குறித்து அவர் தெளிவாக ஏதும் அறிவிக்கவில்லை.

அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது, பெங்களூரில் இருந்து சென்னை வரை அவருக்கு விரிவான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாலை நெடுக தொண்டர்கள் அவரை வழிமறித்து, காரின் மீது பூக்களைத் தூவி வரவேற்றனர்.

சென்னைக்கு வந்தவுடன் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டிற்குச் சென்று அவரது உறவினர்களைச் சந்தித்தார்.

அந்தத் தருணத்திலேயே அவர் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்துவார் எனக் கூறப்பட்டாலும், புதுபிக்கும் பணிகள் நடக்கின்றன என்ற பெயரில் ஜெயலலிதாவின் சமாதி மூடப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வி தொடர்ந்து விவாதிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 3ஆம் தேதியன்று திடீரென ஒரு அறிவிப்பை சசிகலா வெளியிட்டார்.

தான் பதவிக்காகவோ அதிகாரத்திற்காகவோ எப்போதும் ஆசைப்பட்டதில்லை என்றும் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து அ.தி.மு.கவின் வெற்றிக்காக ஜெயலலிதாவிடமும் இறைவனிடமும் பிரார்த்தனை செய்யப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதற்குப் பிறகு சசிகலா, தனது அரசியல் அபிலாஷைகளை விட்டுவிட்டார் என அனைவரும் கருதிய நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததது.

இந்தத் தோல்விக்குப் பிறகு, ஜூன், ஜூலை மாதங்களில் அவ்வப்போது சசிகலா தொண்டர்களிடம் பேசும் ஆடியோக்கள் தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.

அவரோடு பேசுபவர்கள் அனைவரும் சசிகலாவை அரசியலுக்கு வரவேண்டுமெனவும் அ.தி.மு.கவை மீட்க வேண்டுமெனவும் அழைப்பதுபோல அந்த ஆடியோக்களில் குரல்கள் இடம்பெற்றிருந்தன.

அ.தி.மு.கவில் மீண்டும் இணைந்து, கட்சியை சசிகலா கைப்பற்ற விரும்புகிறார் என்பது இதற்குப் பிறகு தெளிவானது. இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் சசிகலா.

அவர் அஞ்சலி செலுத்தவரும் நிகழ்வுக்கு பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன்படியே எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நினைவிடம் முழுக்க அவரது ஆதரவாளர்கள் நிரம்பியிருப்பதுபோல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வாலாஜா சாலை முழுக்க அவரை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நாளை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்தில் அ.தி.மு.கவின் கொடியை ஏற்றவிருப்பதாகவும் ராமாவரத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் உணவருந்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, அ.தி.மு.க. தொண்டர்களை தன் பக்கம் திருப்பும் பணிகளை சசிகலா ஆரம்பித்துவிட்டதாகவே தெரிகிறது.

சசிகலாவின் முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா?

அ.தி.மு.கவை மீட்க நினைக்கும் சசிகலாவின் முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா என்பதை அ.தி.மு.க. தொண்டர்களின் பார்வையிலிருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

“சட்டமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. கடுமையாகத் தோல்வியடைந்திருக்கிறது.

இரட்டைத் தலைமையின் காரணமாகத்தான் இந்தத் தோல்வி ஏற்பட்டிருப்பதாக தொண்டர்கள் கருதுகிறார்கள். ஆகவே கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்தத் தலைமை உறுதியாக இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள்.

எடப்பாடி கே. பழனிச்சாமி, எஸ்.பி. வேலுமணி போன்றவர்கள் சசிகலாவின் குடும்பம் உள்ளே வந்தால், நாம் அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆகவே அவர்கள் கட்சிக்குள் வரக்கூடாது என கருதுகிறார்கள்.

ஆனால், சாதாரணத் தொண்டனைப் பொறுத்தவரை அந்தப் பிரச்னை இல்லை. சசிகலா உள்ளே வருவதன் மூலம் ஒரு உறுதியான தலைமை ஏற்பட்டால் அது நல்லதுதானே எனக் கருதுவார்கள் தொண்டர்கள்” என்கிறார் பிரியன்.

தொண்டர்களின் விருப்பப்படி சசிகலா கட்சிக்கு வந்தால் அக்கட்சி மிக வலுவானதாகி விடுமா என்ற கேள்வியும் இருக்கிறது.

“அவர் வந்தால் பலமாகிவிடுமா என கேட்டால், அதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாது. மாறாக, அ.தி.மு.க. பலவீனமாக இருக்கிறது என்ற பார்வை மாறிவிடும்.

ஆனால் சசிகலா அ.தி.மு.கவுக்குள் எப்படி நுழைய முடியும் என்ற கேள்வி இருக்கிறது. எடப்பாடி கே. பழனிச்சாமி ஒப்புக்கொள்ளாவிட்டால், இப்போதைய சூழலில் சாத்தியமில்லை. எடப்பாடியையும் எதிர்த்து அவர் கட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்றால், தேர்தலைச் சந்தித்து தானே ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என நிரூபிக்க வேண்டும்.

குறைந்தது, அ.தி.மு.கவின் வாய்ப்புகளைக் குறைக்கவாவது செய்யவேண்டும். இப்போதைய சூழலில் அது சாத்தியமில்லை. ஆகவே, எடப்பாடி என்ன செய்கிறார் எனப் பார்க்க வேண்டும்” என்கிறார் ப்ரியன்.

 

தற்போது அ.தி.மு.கவில் எடப்பாடி கே. பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் ஜெயலலிதாவின் வருகையைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள் சசிகலாவின் இது போன்ற நடவடிக்கைகளை ஒவ்வொரு தருணத்திலும் விமர்சனம் செய்கிறார்கள்.

2012ல் தனது சபாநாயகர் பதவி பறிபோகக் காரணமே சசிகலா எனக் கருதுகிறார் ஜெயக்குமார். ஆகவே அவர் கடுமையாக எதிர்க்கிறார்.

ஆனால், சசிகலாவின் வருகை குறித்து முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்ன என்பதுதான் பலருக்கும் கேள்வியாக இருக்கிறது.

ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி மறைந்தபோது, நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார் சசிகலா. அவரது இந்தச் செயல் பல யூகங்களுக்கு வழிவகுத்தது.

ஆனால், இப்போதுவரை சசிகலாவின் வருகை குறித்து ஓ. பன்னீர்செல்வம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. தற்போதைய அ.தி.மு.கவில் தனக்குப் போதுமான இடம் இல்லையெனக் கருதுவதால், அதைவிட கூடுதல் இடம் கிடைக்கக்கூடிய எந்த வாய்ப்பையும் அவர் பரிசீலிக்கவேசெய்வார்.

அப்படியானால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனியாகக் கட்சி நடத்திவரும் டிடிவி தினகரனின் நிலை என்னவாகும்? “டிடிவி கொஞ்ச காலம் அமைதியாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் அது சசிகலாவுக்கு பிரச்சனையாகிவிடும்.

அதைப் புரிந்துகொண்டுதான் அவர் அமைதியாக இருக்கிறார். தான் கட்சிக்குள் வந்தால், தனது குடும்பத்தினரும் உள்ளே நுழைந்துவிடுவார்கள் என்ற அச்சம் ஏற்படுவதை சசிகலா விரும்பவில்லை” என்கிறார் பிரியன்.

விரைவில் சசிகலா ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப் பயணம் செய்து, கொடியேற்றும் நிகழ்வுகளில் பங்கேற்கக்கூடுமென பேச்சுகள் அடிபடுகின்றன.

அவர் அப்படிச் செய்து, அது அ.தி.மு.கவின் அடிமட்ட கட்டமைப்பில் சலசலப்பு ஏற்பட்டால், எடப்பாடி கே. பழனிச்சாமி நிச்சயம் ஒரு முடிவெடுக்க வேண்டியிருக்கும்.

Exit mobile version