Site icon ilakkiyainfo

14 நாட்களில் 7,000 பேர் இலங்கைக்கு வருகை

ஒக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சரிந்த சுற்றுலாத் துறை இப்போது படிப்படியாக மீண்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 45,413 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்பதுன், அவர்களில் 7,096 பேர் ஒக்டோபர் 1 முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வருகைதந்துள்ளனர் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா, கசகஸ்தான், ஜேர்மனி, உக்ரைன், அமெரிக்கா, சீனா, கனடா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த பயணிகளே வருகைதந்துள்ளனர் என்றும் பெரும்பாலான வருகைகள் ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரை இடம்பெற்றுள்ளன.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கான போக்கு அதிகரித்து வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நாட்டுக்கு அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்க தேவையான விளம்பர திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் இதுவரை பதிவு செய்யாத ஹோட்டல், தங்குமிடம் மற்றும் சுற்றுலா சேவை வழங்குநர்கள் இப்போது அதிகாரசபையில் பதிவு செய்யவற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும் அறியமுடிகிறது.

தற்போது 5,786 சுற்றுலா விடுதிகள், அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.


Exit mobile version