ilakkiyainfo

சுவாதியை கொன்றது கூலிப்படையா? ராம்குமார் மரணத்தில் விலகாத மர்மங்கள்

புழல் சிறையில் இறந்துபோன ராம்குமார் வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பவை ஆக உள்ளன. ` மென்பொருள் பொறியாளர் சுவாதியை கொல்வதற்காக வந்த கொலைகாரர்களில் ஒரு பிரிவினர், ராம்குமாரின் அறையில் தங்கியுள்ளனர். இது ராம்குமார் என்னிடம் தெரிவித்த தகவல்’ என்கிறார் வழக்கறிஞர் ராமராஜ். என்ன நடந்தது?

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி மென்பொறியாளர் சுவாதி என்பவர் கொல்லப்பட்டார். காலை நேரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் விசாரணையில் இறங்கிய போலீஸார், நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற 22 வயது இளைஞரை கைது செய்தனர். மீனாட்சிபுரத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ராம்குமார் கைது செய்யப்பட்டு, சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு, பரனூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்கு புறநகர் ரயிலில் சுவாதி செல்லும்போதெல்லாம், ராம்குமார் பின்தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்ததாகவும் அதன் தொடர்ச்சியாகவே கொலை நடந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர், அடுத்து வந்த சில வாரங்களில் சிறையில் மின்சார வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். `இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதால் நீதி விசாரணை வேண்டும்’ என்ற கோரிக்கையும் அப்போது எதிர்கட்சிகள் முன்வைத்தன.

மருத்துவரின் அதிர்ச்சி சான்று

இந்நிலையில், ராம்குமார் மரணத்தை தாமாகவே முன்வந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து வருகிறது. இதில், `ராம்குமார் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்ததற்கான ஆதாரங்கள் இல்லை’ என மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக பேசியுள்ள உடற்கூராய்வு மருத்துவர் ஒருவர், ` ராம்குமாரின் மூளை திசு, இதய திசுக்கள் நல்ல நிலையில் இருந்தன. நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், மேல் உதடு, கீழ் உதடு, சிறுநீரகம் போன்றவையும் நல்ல நிலையில் இருந்ததாக சான்று கொடுத்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார். எனவே, `மின்சாரம் தாக்கி ராம்குமார் இறக்கவில்லை’ என்பது தெரியவந்ததால், சிறையில் ராம்குமார் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் பேசி வருகின்றனர்.

தற்போது, `இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கையோடு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் களமிறங்கியுள்ளனர். இதுதொடர்பாக, 19 ஆம் தேதியன்று ராம்குமாரின் பெற்றோர், உறவினர்களை சந்தித்து விரிவாக விவாதித்துள்ளனர்.

`ராம்குமார் மரணத்தைவிடவும் சுவாதியைக் கொன்றவர்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும்?’ என அவர்கள் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜிடம் பேசினோம். “ புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறையிலேயே மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

ஆனால் உண்மைகளை மூடிமறைக்கவே அவர் கொலை செய்யப்பட்டதாக அப்போதே பலமான சந்தேகங்கள் எழுந்தன. இப்போது ராம்குமார் வழக்கில் மருத்துவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தின் மூலம் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது” என்கிறார்.

சாத்தியமில்லாத மரணமா?

தொடர்ந்து பேசியவர், “ராம்குமார் கைதான அன்று தனது வீட்டின் பின்பக்கத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் படுத்திருந்தார். அப்போது உள்ளே வந்த நான்கைந்து போலீஸார், `முத்துக்குமார் எங்கே?’ எனக் கேட்டு பின்பக்கம் சென்றுள்ளனர். சில நிமிடங்களில் ராம்குமாரின் கழுத்து அறுக்கப்பட்டு முட்டி போட்ட நிலையில் உட்கார்ந்திருந்துள்ளதை அவரது பெற்றோர் பார்த்துள்ளனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமாரிடம் அவரது குடும்பத்தினர் பேசுவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஒரு வழக்கில் 90 நாள்களில் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் பிணையில் எடுத்துவிடலாம்.

சுவாதி கொலை வழக்கில் 80 நாள்கள் கடந்த பின்னரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் பிணையில் ராம்குமார் வெளியில் போய்விடுவார் என்பதால் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் சிறையில் கொலைதான் செய்யப்பட்டார் என அவரது குடும்பத்தினர் உறுதியாக சொல்கின்றனர். அவரது உடலை முதலில் பெற்ற மருத்துவரின் வாக்குமூலத்தில், ராம்குமார் உடலில் மின்சாரம் தாக்கியதற்கான அறிகுறிகள் இல்லை எனத் தெரிவித்திருந்தார். பிணையில் வந்த பிறகு அனைத்து உண்மைகளையும் தெரிவிக்கிறேன் என தனது வழக்கறிஞரிடம் ராம்குமார் கூறியிருந்தார்” என்கிறார்.

“ராம்குமாரின் சடலத்தை உடல் கூராய்வு செய்த மருத்துவர், 12 இடங்களில் மின்சாரத்தை வைத்து வைத்து எடுத்ததாகச் சொல்கிறார். மின்சாரம் செல்லும் வயரை பல்லில் கடித்து இறப்பு நடந்ததாக உலகில் இதுவரையில் ஒரு நிகழ்வு கூட ஏற்படவில்லை. பல்லில் வைத்துக் கடித்தாலே மின்சாரம் தூக்கி வீசிவிடும். அது சாத்தியமில்லாத மரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சுவாதி வழக்கில் ராம்குமாருக்குத் தொடர்புள்ளதா என்பது மர்மமானது. ஆனால், உண்மையான குற்றவாளிகளோடு அவருக்குத் தொடர்பு இருந்திருக்கலாம். அதற்குள் நாங்கள் செல்லவில்லை. அவர் சிறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் போலீஸார் சொல்வது பொய்யாக உள்ளது. எனவே, மறு விசாரணை செய்ய வேண்டும்” என்கிறார் சாமுவேல் ராஜ்.

பின்னணியில் யார்?

மேலும், “தொடக்கத்தில் இந்த வழக்கை விசாரித்த ரயில்வே போலீஸ் அதிகாரி மாற்றப்பட்டதாகவும் புழல் சிறையில் ராம்குமாருடன் நெருக்கமாக இருந்த குற்றவாளிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அந்த கைதிகள் இந்து முன்னணி பிரமுகர் வழக்கில் தொடர்புடைய இஸ்லாமிய கைதிகள் என ராம்குமார் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சிறை ஜெயிலர் ஒருவரும் மாற்றப்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர். அவர் மரணமடைந்த பிறகு உடலில் விறைப்புத்தன்மை ஏற்பட்ட பிறகுதான் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். `எங்கள் மகன் மிகவும் அப்பாவி, யாரிடம் பேச மாட்டான்’ என அவரது தந்தை கூறுகிறார். எப்படியிருந்தாலும், இந்த வழக்கை நான்கு மாதங்களில் முடிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது எங்களின் கேள்வி. அன்றைக்கு இருந்த அரசாங்கத்தில் அதிக செல்வாக்கு பெற்ற நபர்கள் யாராவது இதன் பின்னணியில் இருக்கலாம் என்பதுதான் எங்களின் சந்தேகம். அந்த நபரின் பெயர் வெளியில் வந்துவிட கூடாது என்பதற்காகவே ராம்குமார் கொல்லப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்” என்கிறார்.

“சுவாதி கொலைக்குப் பிறகு சென்னையில் இருந்து ராம்குமார் வந்த நாளில் இருந்தே ஆடு மேய்த்துக் கொண்டு இயல்பாகத்தான் இருந்தான். எந்தப் பயமும் அவனிடம் இல்லை. மெக்கானிக்கல் படிப்பில் நான்கு அரியர்கள் இருந்ததால் அதனை கிளியர் செய்வதற்காக சென்னைக்கு சென்று படித்தான். எங்கள் வீட்டில் இருந்தபடி படிப்பதில் சிரமம் இருந்ததால்தான் சென்னைக்குச் சென்றான். அவனை கைது செய்து சிறைக்குக் கூட்டிப் போன பிறகு, எங்களைப் பார்க்கவே விடவில்லை. வக்கீல் சென்றாலும் சுற்றிலும் சிறை போலீஸார் நின்று கொண்டு கவனித்துள்ளனர்.

இதன் பின்னணியில் செல்வாக்கு படைத்த புள்ளிகள் உள்ளனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை. நுங்கம்பாக்கத்தில் அப்படியொரு கொலையை தனியாக ராம்குமாரால் செய்ய முடியுமா என யாரும் ஆராயவில்லை. எதற்காக சுவாதி கொல்லப்பட்டார்? யாரை காப்பாற்றுவதற்காக ராம்குமாரை கொன்றார்கள் என்ற விவரம் எங்களுக்குத் தெரிந்தால் போதும்” என பிபிசி தமிழிடம் விவரித்தார், ராம்குமாரின் சகோதரி மதுபாலா.

7 வெட்டுகள்.. 7 பேர்

ராம்குமார் வழக்கில் தொடக்கம் முதலே கையாண்டு வரும் வழக்கறிஞர் ராமராஜிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ ராம்குமார் வழக்கைப் போலவே எனக்கு சுவாதி வழக்கும் முக்கியமானது. சுவாதி கொலையில் சில உண்மைகளைக் கண்டுபிடித்தேன். அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையை 20 மருத்துவர்களிடம் காட்டிவிட்டேன். சுவாதியின் உடலில் 7 வெட்டுகள் விழுந்துள்ளன. ஒரே நபர் இத்தனை வெட்டுகளையும் ஒரே நேரத்தில் செய்திருக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியானால், இந்தச் சம்பவத்தில் ஏழு பேருக்கு தொடர்பிருக்கலாம் என அறிவியல்பூர்வமாக என்னால் நிரூபிக்க முடியும்” என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், “ நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை சுற்றி கூட்டமாக நின்று வெட்டியுள்ளனர். யாருக்கு நேரக் கூடாத மரணம் ஏற்பட்டுள்ளது. அது வலியில்லாத மரணமாகவும் இருந்துள்ளது. அதாவது, வெட்டப்பட்ட மறு நிமிடமே சுவாதி இறந்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்கின்றனர். தொடர்ந்து ஒரேநேரத்தில் ஏழு வெட்டு விழுந்துள்ளது. அவர் சத்தம் எழுப்பியிருக்கவும் வாய்ப்பில்லை. அவர் கீழே விழுந்தவுடன்தான் பொதுமக்கள் பார்த்துள்ளனர். ஒரு பெண்ணுக்கு இப்படியொரு மரணத்தைக் கொடுத்தவர்களை அவ்வளவு எளிதில் விட்டுவிடக் கூடாது என்பதால்தான் பேசுகிறேன்” என்கிறார்.

“ சுவாதியின் பெற்றோரும் இந்த வழக்கில் ஆர்வம் காட்டவில்லை. நியாயம் கேட்டுச் செல்ல வேண்டிய அவர்களும் மௌனமாக இருந்துவிட்டனர். இந்தக் கொலையை ராம்குமார் மீது போட்டுவிட்டு முக்கிய நபர்கள் தப்பித்துள்ளனர். இதற்கு பின்னால் உள்ள அந்த மிகப் பெரிய சக்தி எது என்று தெரியவில்லை. தனி நபரால் இதனைச் செய்திருக்க முடியாது என போலீஸாருக்கே தெரியும். கூலிப்படையை சேர்ந்த ஏழு பேரில் ராம்குமாரும் ஒருவராக இருந்தால், மற்ற 6 பேர் யார் என்பதுதான் என்னுடைய கேள்வி.

ராம்குமார் அறையில் தங்கிய டீம்

மேலும், கூலிப்படையாக நியமிக்கப்படுகிறவர்கள், ஒரே நேரத்தில் வேலையை முடித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அந்தக் கொலையை பார்த்த சாட்சியாக ராம்குமார் இருக்கிறார். இரண்டு டீமாக வந்த கொலைகாரர்களில் ஒரு பிரிவினர் ராம்குமாருடன் அவரது அறையில் தங்கியுள்ளனர். இது சிறையில் ராம்குமார் என்னிடம் சொன்ன தகவல். அவர்கள் கொலை செய்யத்தான் வந்தார்களா என்பது தனக்குத் தெரியாது எனவும் ராம்குமார் தெரிவித்தார். கொலையை பார்த்தவுடன் மீண்டும் அறைக்கு வந்துவிட்டு அன்றே அவர் ஊருக்குக் கிளம்பிவிட்டார்” என்கிறார் வழக்கறிஞர் ராமராஜ்.

மேலும், “ ராம்குமாரை மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு 20 மணி நேரத்துக்கு முன்பே இறந்துவிட்டார். அவரது இரைப்பை அழுகிவிட்டது. சிறுகுடல், பெருங்குடலில் காற்று அடைத்துவிட்டது. அழுகல் திரவம் 500 மில்லிலிட்டர் இருந்தாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் சிறப்பு நுண்ணரிவு பிரிவை அமைத்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும்” என்கிறார்.

அரசு வழக்கறிஞரின் பதில் என்ன?

“சிறையில் ராம்குமார் கொல்லப்பட்டிருக்கலாமா என்கிறார்களே?” என சிறைத்துறை வழக்குகளைக் கையாண்டு வரும் அரசு வழக்கறிஞர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ சிறையில் காவல் மரணங்கள் நேர்ந்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 176ன்படி குற்றவியல் நடுவர் விசாரணை செய்த பிறகு, அந்த விசாரணையின் அடிப்படையில் பிரதி விசாரணை நடக்கும். அப்போது புகைப்படங்கள், மருத்துவர்கள் கருத்து ஆகியவற்றை வாங்கிவிட்டு தேசிய மனித உரிமை ஆணையம் முடிவெடுக்கும். ராம்குமார் மரணத்தில், `இது தற்கொலைதான்’ எனக் கூறி இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்துவிட்டது” என்கிறார்.

மேலும், “ தற்போது மருத்துவரிடம் குறுக்கு விசாரணை செய்தபோது, கொலைக்கான வாய்ப்பிருக்கலாம் எனக் கூற வருகிறார்களே தவிர ஏற்கெனவே முடிந்து போன விஷயமாகத்தான் இதைப் பார்க்கிறோம். சிறைக்குள் மின்சாரம் பாய்ந்து அவர் இறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. இந்த வழக்கின் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா என்பது மறு விசாரணை நடக்கும்போது தெரிய வரும்” என்கிறார்.

“ சுவாதி கொலை வழக்கை அன்றைய அ.தி.மு.க அரசு மூடி மறைத்தது என்கிறார்களே?” என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான மகேஸ்வரியிடம் பேசினோம். “சுவாதி கொலை வழக்கில் துரிதமான நடவடிக்கைகளை எடுத்து போலீஸார் குற்றவாளியை கைது செய்தனர். அவர் தண்டனைக்குப் பயந்து தற்கொலை முடிவை நாடினார். இதில், முடிந்து போன ஒரு வழக்கில் சிலர் முன்னுரை எழுதுவதற்கு முனைகின்றனர். அரசியலுக்கு சம்பந்தமற்ற வழக்கில்கூட எங்களைத் தொடர்புபடுத்தி அ.தி.மு.கவின் செல்வாக்கை சீர்குலைக்கும் வேலையை தி.மு.க செய்வதாகவே பார்க்கிறோம்” என்கிறார்.

Exit mobile version