ilakkiyainfo

4 வாகனங்களை மோதித் தள்ளிய 16 வயது சிறுவன் செலுத்திய சொகுசு ஜீப் – ஒருவர் பலி, நால்வர் படுகாயம்

மஹபாகே பொலிஸ் பிரிவில் வெலிசறை பகுதியில் இன்று (04.11.2021) இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்து  கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

16 வயதான சிறுவன் செலுத்திய ஜீப் வண்டி, கட்டுப்பாட்டை இழந்து பாதையின்  எதிர்த்திசையில் பயணித்த நான்கு வாகனங்களை மோதித் தள்ளியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய தனது 16 வயது மகனுக்கு வாகனம் செலுத்த சந்தர்ப்பம் அளித்தமைக்காக அவரது தந்தையையும், வாகன விபத்து தொடர்பில் 16 வயது மகனையும் கைது செய்ததாக அவர் மேலும் கூறினார்.

இன்று முற்பகல் வேளையில்,  கொழும்பிலிருந்து நீர் கொழும்பு நோக்கி சொகுசு ஜீப் வண்டி பயணித்துள்ளது. இந்த ஜீப் வண்டியானது மஹபாகே பொலிஸ் பிரிவில் வெலிசறை பகுதியில் வைத்து,  நீர் கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு கார், ஒரு முச்சக்கர வண்டி மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களை மோதியுள்ளது.

சாரதியால் ஜீப் வண்டியை கட்டுப்படுத்த முடியாமல், அது பாதையை விட்டு விலகி எதிர்த்திசையில் வந்த வாகனங்களை இவ்வாறு மோதியுள்ளது.’ என விபத்து தொடர்பில் கேசரிக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து, உடனடியாக கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை என அறியப்படும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 51 வயதான மஹபாகே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் மிக கவலைக் கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். ஏனைய மூவரும் சாதாரண சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மஹபாகே பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் ஜீப் வண்டியை செலுத்தியவர் 16 வயதான ஒருவர் என தெரியவந்துள்ளது. அதன்படி அவரை கைது செய்த பொலிஸார், அவருக்கு ஜீப் வண்டியை செலுத்த சந்தர்ப்பமளித்த அவரின் தந்தையையும் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மஹபாகே பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version