ilakkiyainfo

தமிழக மழை வெள்ளம்: இதுவரை ஐவர் பலி – என்ன நடந்தது இன்று?

தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை முதல் தீவிரம் அடைந்துள்ள கன மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் பல மாவட்டங்களில் மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீர்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் தொடர்ச்சியாக இன்று மாநிலத்தில் பதிவான முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே வழங்குகிறோம்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கிறது.

இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 11ஆம் தேதி காலை தமிழக கரையை நெருங்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இலங்கையில் மழையால் மண் சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் பலி
தமிழக மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை: இந்த வண்ணங்கள் எப்படி வேலை செய்யும்?

மேலும் இரண்டு தினங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

 

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கன மழை மழையும் சில இடங்களில் அதிகன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பெய்த மழைக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். 538 குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. இந்த சேதத்தின் அளவு மேலும் அதிகமாகலாம் என்று மாநில பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சராசரியாக 16.84 மி.மீ அளவுக்கு மழை பொழிவு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது. கடலோர பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக மாநில காவல்துறை, பேரிடர் மீட்புப்படையினருடன் சேர்ந்து ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் நேரில் ஆய்வு

சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மூன்றாவது நாளாக முதல்வர் மு.க. ஸ்டாலினும் மற்ற மாவட்டங்களில் துறை அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க அவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

சென்னையில் வேளச்சேரி, மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், புளியந்தோப்பு, ராயபுரம், வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வசிப்பிடங்களுக்குள் புகுந்துள்ளது.

வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் இருப்பவர்கள், அரசு தற்காலிகமாக அமைத்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ளவர்களுக்கு அரசு ஏற்பாடு செய்த உணவு வழங்கப்படுகிறது.

மழை, வெள்ள பாதிப்பு காரணமாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கையால் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற இடங்களில் மின்சார விபத்து நடக்கவில்லை என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை பெரியார் நகரில் வெள்ளம் சூழ்ந்த துணை மின் நிலையத்தை பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, சென்னையில் உள்ள 223 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நடந்து வருகிறது என்று கூறினார்.

இழப்பீடு எப்போது அறிவிப்பு?

மழை பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள், வீடுகளை இழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் உள்ளிட்டோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண நிதி வழங்குவது தொடர்பான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மழை வெள்ளம் தேங்கியிருக்கும் நிலைக்கு அரசின் அலட்சியமே காரணம் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.

வட சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அவர், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழக மழை வெள்ளம்

,

வட சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

“மழை நீர் புகுந்துள்ள இடங்களில் மூன்று நாட்களுக்குப் பிறகும் நீர் வடியவில்லை என்பதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர் என்று பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை நகரின் மேயர் ஆக ஸ்டாலின் இருந்தபோது வடிகால் வசதி போதுமான வகையில் செய்யவில்லை என்றும் அதைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தது,” என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கன மழைக்குப் பிந்தைய மீட்புப் பணியை அரசு துரிதமாக செய்து முடிக்க ஏதுவாக நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இதற்கிடையே, மாநிலத்தில் நீடித்து வரும் மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு முன்பு ஆட்சியில் இருந்த அதிமுகவே காரணம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

“முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என தெரியவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து பெற்ற நிதியை அவர்கள் எப்படி பயன்படுத்தினார்கள் எனத் தெரியவில்லை.

வேலை செய்யாமல் கமிஷன் வாங்குவதிலேயே அவர்கள் அக்கறை காட்டியுள்ளனர். இது தொடர்பாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

மாநகராட்சிக்கு நீதிபதிகள் கேள்வி

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.

2015இல் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்துக்குப் பிறகு இப்போதும் அதே நிலை தொடருகிறது. அப்போதே போதுமான சீரமைப்புகளை மேற்கொண்டிருந்தால் மக்கள் இப்போது பாதிக்கப்பட்டிருப்பார்களா என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

சென்னையில் சாலைகளை அகலப்படுத்துவது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரின் கோரிக்கை ஏற்க நீதிபதிகள் மறுத்தபோதும், அரசுக்கு சில கேள்விகளை எழுப்பினர். 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தீட்டப்பட்டன.

ஆனாலும், தற்போது சென்னை மழை நீரில் தத்தளிக்கிறது? இங்கு மாநகராட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது? வருடத்தில் பாதி மாதங்கள், மக்கள் நீருக்காகவும் பிறகு மீதி மாதங்கள் மக்கள் நீரிலும் அவதிப்படுகின்றனர் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் நிலைமையை சீர்படுத்த வேண்டும். இல்லையென்றால் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை நீதிமன்ற அவமதிப்பாக கருதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து தற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் பணிகளை மேற்பார்வையிட சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

 

Exit mobile version