Site icon ilakkiyainfo

ஒரு இனத்தை இலக்கு வைத்து தாக்கவும் சித்திரவதை செய்யவுமா ? “ஒரே நாடு ஒரே சட்டம்” அநுரவின் கேள்வியில் தடுமாறிய பிரதமர் மஹிந்த

நாட்டின் ஏனைய சமூகத்தின் உரிமைகளை பறிக்க வேண்டும் என குரல் எழுப்பிய குழுவொன்றை “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியில் இணைத்துக்கொண்டுள்ளதன் மூலமாக, ஒரு சமூகத்தை இலக்குவைத்து தாக்குதல் நடத்தவா அல்லது ஒரு இனத்தை சித்திரவதைக்கு உற்படுத்தும் நோக்கத்திலா இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் தலைவருக்கு இருக்கும் தகுதி என்ன என்பது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக பிரதமரிடத்தில் சபையில் கேள்விகளை தொடுத்தார்.

அனுரகுமாரவின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது பிரதமரும், சபை முதல்வரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் தடுமாரியதுடன் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்காது நழுவிச்சென்றனர்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10 ) பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தின் போது கேள்வி எழுப்பிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக, “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் நியமனம் குறித்து சபையில் கேள்வி எழுப்பினார்.

” ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் ஆட்சியை அமைக்கும் வேளையில் அவர்கள் முன்வைத்த பிரதான தொனிப்பொருளாக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோசத்தை முன்வைத்தனர்.

தேர்தல் மேடைகளில் அடிக்கடி இதனை கூறினர். இதனால் நாட்டில் சகலருக்கும் ஒரே விதமான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டது.

அதேபோல் 20 ஆம் திருத்த சட்டத்தை நிறைவேற்றும் வேளையில் அடுத்த ஒரு வருடத்திற்குள் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதாக வாக்குறுதியும் வழங்கினீர்கள்.

ஜனாதிபதியின் இரண்டாம் ஆண்டு ஆட்சிக்காலத்திற்குள் புதிய அரசியல் அமைப்பிற்கான வரைபை சபைப்படுத்துவதாக கூறினீர்கள்.

எனினும் ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் இரண்டு ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையிலும் அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் ஒரு ஆண்டுகாலத்தையும் தாண்டியுள்ள நிலையில் புதிய அரசியல் அமைப்பிற்கான முயற்சிகள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நியமனங்கள் மக்கள் மத்தியில் பாரிய கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூகத்தில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய அரசியல் அமைப்பிற்கான வரைபை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதியும், அரசாங்கமும் அரசியல் அமைப்பு வரைபுக் குழுவொன்றை உருவாக்கியுள்ளதா? அவ்வாறு நியமிக்கப்பட்டிருந்தால் அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யார் ? அவர்களினால் அரசியல் அமைப்புக்கான வரைபு உருவாக்கப்பட்டுள்ளதா? இல்லையென்றால் எப்போது இறுதிப்படுத்தப்படும்? இல்லையேல் இப்போது அது குறித்து எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.

நீதி அமைச்சினால் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஏதேனும் சட்ட வரைபுகள் வரையப்பட்டுள்ளதா? அந்த முயற்சிகள் எந்த கட்டத்தில் உள்ளது? ஏனென்றால் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையின் கீழ் புதிய சட்ட வரைபுகளை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி அமைச்சர் அவ்வப்போது தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்ல புதிய அரசியல் அமைப்பிற்கான வரைபுகள் உருவாக்கப்பட்டுக்கொண்டோ அல்லது அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்கு அமைய சட்ட வரைபொன்று உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை உருவாக்க காரணம் என்ன? ஒருபுறம் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையில் அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில், நீதி அமைச்சரினால் சட்டமொன்று உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் வேறொரு ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட காரணம் என்ன? அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் வேளையில் கருத்தில் கொண்ட  அளவுகோல் என்ன? ஏனெனில் இந்த நியமனங்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆகவே இவ்வாறான ஆணைக்குழுவை நியமிக்கும் வேளையில் சகல தரப்பினரதும் நம்பிக்கையை பெற்றுக்கொண்ட குழுவை நியமித்திருக்க வேண்டும்.

ஆனால் இவர்களை நியமிக்க காரணம் என்ன? ஒரு சமூகத்தை இலக்குவைத்து தாக்குதல் நடத்தவா அல்லது ஒரு இனத்தை சித்திரவதைக்கு உற்படுத்தும் நோக்கத்திலா இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்.

கடந்த காலத்தில் இனவாதம் மற்றும் ஏனைய இனங்கள் குறித்த  சந்தேகத்தை வளர்த்த நபரை இவ்வாறான குழுவிற்கு நியமிப்பதன் மூலமாக எதிர்பார்க்கும் நோக்கம் என்ன?” என்ற கேள்விகளை அநுரகுமார எம்.பி பிரதமரிடத்தில் முன்வைத்தார்.

எனினும் இந்த கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க தயங்கிய பிரதமரும், சபை முதல்வரும் சமாளிப்பு பதிகளை முன்வைக்க முயற்சித்தனர்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சபை முதல்வர் தினேஷ் குணவர்தன :- ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தில் அவர் ஜனாதிபதி செயலணியை உருவாக்க முடியும். அந்த அதிகாரத்தில் தான் தற்போதும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலணியின் மூலமாக எதேனும் ஆலோசனைகள், பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டால் நீதி அமைச்சருடன் கலந்துரையாடி இது குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

இதன்போது மீண்டும் கருத்து தெரிவித்த அநுரகுமார திசாநாயக எம்.பி:- நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இதுவல்ல, எனினும் பிரதமரும், சபை முதல்வரும் ஒரே நேரத்தில் பதிலளிக்க இயலாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளமையை என்னால் உணர முடிகின்றது.எனினும் செயலணிகளை உருவாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது, ஆனால் அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்கும் வேளையில் சில அடிப்படை தகுதிகளையும் அளவுகோலையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். அரசியல் அமைப்பு குழுவை உதாராணமாக எடுத்துக்கொண்டால் அதில் அரசியல் அமைப்பு குறித்த சட்ட அறிவும் தெளிவும் கொண்ட நபர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த செயலணியை பொறுத்தவரை குறிப்பாக இந்த நாட்டில் வெவ்வேறு சமூகத்தை கொண்ட சட்ட பின்பற்றல்கள் உள்ளன, வெவ்வேறு இனத்திற்கான மதத்திற்காக சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இவை அனைத்தையும் பொதுவான ஒரு சட்டத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் அதற்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது. ஏனென்றால் ஏனையவரது உரிமைகளை பறிக்க வேண்டும் என குரல் எழுப்பிய குழுவொன்றை இவ்வாறான பொதுவான வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்வதன் மூலமாக நாம் உணர்வதற்கும் மேலாக வேறு எந்த தகுதியை கருத்தில் கொண்டீர்கள் என்பதே நான் எழுப்பும் கேள்வியாகும்.

இந்த செயலணியை உருவாக்குவதில் குறைந்தபட்சம் நீதி அமைச்சருக்கோ அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கோ இது குறித்த தெளிவு இல்லை என்பது தெரிகின்றது. குறைந்த பட்சம் பிரதமருக்கு இந்த தெளிவு இருக்கும் என்றாலும் பரவாயில்லை. பிரதமர் தெரிந்துகொள்ளும் வேளையில் தான் நாட்டு மக்களும் அறிந்துகொள்கின்றனர் என்றால் இந்த செயற்பாடுகளில் அர்த்தமில்லை. நாட்டில் வெவ்வேறு இனக்குழுக்கள் இந்த செயலணி குறித்த பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே பிரச்சினைகள் முரண்பாடுகள் பலமடையும் திசைக்கு நாம் ஆட்சியை கொண்டு செல்லக்கூடாது, மாறாக முரண்பாடுகளை தீர்க்கும் திசைக்கு ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும். இனக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று இணையும் திசைக்கு ஆட்சியை நடத்த வேண்டுமே தவிர ஒருவரிடம் இறுதி இன்னொருவர் விலகிச்செல்லும் திசைக்கு ஆட்சியை கொண்டுசெல்லக்கூடாது.

ஆனால் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளமையானது இன குழுக்களுக்கு இடையில் ஒற்றுமையை உருவாக்கும் திசைக்கு அப்பால் சென்று மக்கள் குழுக்களை பிரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது என்றே நாம் கருதுகின்றோம். இதனை மறுக்க முடியும் என்றால் பிரதமர் அதனை தெரிவிக்க முடியும்.

ஆனால் பிரதமர் மௌனம் காப்பார் என்றால் நாம் கூறிய அனைத்தும் உண்மை என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார் என்பதே அதன் அர்த்தமாகும் என்றார். எனினும் பிரதமர் இது குறித்த உறுதியான பதிலை கூறிக்கொள்ள முடியாது தடுமாறியதை சபையில் அவதானிக்க முடிந்தது.

Exit mobile version