Site icon ilakkiyainfo

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் : தடை செய்யுமாறு 60 இற்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் 12 நீதிமன்றங்களினால் நிராகரிப்பு

அரசாங்கத்திற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி  இன்று 16 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள  ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்க நேற்று 12 நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்து,  தடை விதிக்க வேண்டும் எனும் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்துள்ளன.

எனினும் 25 பொலிஸ் நிலையங்கள் ஊடாக முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள ஹோமாகமை, கடுவலை, வத்தளை, மஹர மற்றும் ஹொரனை ஆகிய ஐந்து நீதிவான் நீதிமன்றங்கள்  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளன.

அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராகவும் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (செவ்வாய்கிழமை) பி.ப. 2.00 மணியளவில் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் விவசாயம், கல்வித்துறை உள்ளடங்கலாக நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் முழுமையாகச் சீர்குலைந்திருப்பதாகவும் அதனால் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டி, அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராக இன்றையதினம் நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் மக்கள் திரண்டுவந்து கொழும்பில் ஒன்றுகூடி போராட்டத்தை நடத்தும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே,  கடந்த 9 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட சுற்று நிருபத்தை மையப்படுத்தி, கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக காட்டி பொலிஸார்,  இந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்க நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெற நேற்றைய நாள் முழுவதும் முழு மூச்சுடன் செயற்பட்டனர்.

அதன்படி சுமார் 90 பொலிஸ் நிலையங்கள், பல்வேறு நீதிமன்றங்களில், இந்த ஆர்ப்பாட்டத்தை தடைச் செய்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு  கோரியுள்ளனர்.

அதில் 60 இற்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்கள் முன் வைத்த கோரிக்கையை 12 நீதிமன்றங்கள் நிராகரித்தன.

நிரகரித்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம்:

கொழும்பு நீதிவான் நீதின்றத்தில் 20 பொலிஸ் நிலையங்கள்  இந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு கோரிக்கை முன் வைத்தன.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தின் கீழ் வரும் 7 நீதிமன்ற அறைகளில் இந்த கோரிக்கைகள்  முன் வைக்கப்பட்டன.

20 பொலிஸ் பிரிவுகள் ஊடாக முன் வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகளில், பேலியகொடை மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையங்கள் சார்பான கோரிக்கைகள் தொடர்பில் இன்று ( 16) தீர்மானத்தை  அறிவிப்பதாக கொழும்பு  பிரதான நீதிவான் நீதிமன்றின் 5 ஆம் இலக்க விசாரணை அறையின்  மேலதிக நீதிவான் அறிவித்தார்.

எனினும் புளூமென்டல், கிருளப்பனை, நாரஹேன்பிட்டி, பம்பலபிட்டி, டாம் வீதி, வெலிக்கடை, கொத்தட்டுவை, முல்லேரியா, மாளிகாவத்தை,வெல்லம்பிட்டிய, பொரலை, முகத்துவாரம், கறுவாத்தோட்டம், தெமட்டகொடை, கிராண்பாஸ், கரையோரம் பொலிஸ், மட்டக்குளி, வாழைத்தோட்டம் ஆகிய பொலிஸ் நிலையங்கள் முன் வைத்த கோரிக்கையை கொழும்பு  பிரதான நீதிவான் நீதிமன்றின் கீழ்  செயற்படும் நீதிவான்கள் நிராகரித்துள்ளனர்.

ஏனைய நீதிமன்றங்கள் :

இதனைவிட கோட்டை நீதிவான் நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களும்,  மாளிகாகந்தை நீதிமன்றில் மருதானை பொலிசாரும், கல்கிசை நீதிமன்றில் 4 பொலிஸ் நிலையங்களும், கம்பஹா நீதிமன்றில் 7 பொலிஸ் நிலையங்களும், பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் 7 பொலிஸ்  நிலையங்களும், மொரட்டுவை  நீதிமன்றில் 4 பொலிஸ் நிலையங்களும், மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றில் இரு பொலிஸ் நிலையங்களும், அத்தனகல்ல  நீதிமன்றில் 6 பொலிஸ் நிலையங்களும், கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் 4 பொலிஸ் நிலையங்களும், களுத்துறை மற்றும் மத்துகம ஆகிய நீதிமன்றங்களிலும் முன் வைக்கப்பட்ட, ஆர்ப்பாட்டத்தை தடை செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகள், அவ்வந்த நீதிமன்றின் நீதிவான்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தடை விதித்த நீதிமன்றங்கள் :

எவ்வாறாயினும் இந்த ஆர்ப்பாட்டத்தை தடை செய்யுமாறு ஹோமாகம, கடுவலை, ஹொரனை ஆகிய   நீதிமன்றங்களில் தலா 5 பொலிஸ் நிலையங்கள் ஊடகவும், மரஹர நீதிவான் நீதிமன்றில் 6 பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும், வத்தளை நீதிவான் நீதிமன்றில் 4 பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும்  கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றைன் அந்த 5 நீதிமன்றங்களினதும் நீதிவான்கள் ஏற்றுக்கொண்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கொழும்பு நீதிமன்றில் வாதிட்ட சட்ட மா அதிபரின் பிரதி நிதி :

நேற்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றங்களில் முன் வைக்கப்பட்ட  வதங்களில், கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி ராகல முன்னிலையில் வைக்கப்பட்ட வாதங்கள் பலரின் அவதானத்தை ஈர்த்திருந்தது.

கொழும்பு மத்திய வலயத்துக்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்கள் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் மன்றில் வாதங்களை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் முன் வைத்திருந்தமையே அதற்கான காரணமாகும்.

சாதரணமாக ஆர்ப்பாட்டத்தை தடை செய்யக் கோரும் சந்தர்ப்பங்களில் இதற்கு முன்னர் பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரிகளே மன்றில் விடயங்களை சம்ர்ப்பித்து வந்த நிலையில், நேற்று ஒரு படி மேல் சென்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஒருவர் ஆர்ப்பாட்டத்தை  தடை செய்யக் கோரி வாதங்களை  முன் வைத்தமை விஷேட அம்சமாகும்.

எனினும் அவரது கோரிக்கையை கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி ராகல நிராகரித்தார்.

மிளாய்வு மனு தக்கல் செய்ய திட்டம் :

எவ்வாறாயினும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதிவான்  நிராகரித்த நிலையில், அந்த உத்தரவை திருத்தக் கோரி மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நேற்றைய தினமே மன்றில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version