Site icon ilakkiyainfo

இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ”மாவீரர் தினம்” அனுசரிப்பு

இலங்கையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில், தமிழர் பிரதேசங்களில் இன்று (27) ”மாவீரர் தினம்” அனுசரிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட ஈழப் போராட்டத்தில், முதலாவதாக உயிர்நீத்த போராளி என கூறப்படும் லெப்டினன்ட் சங்கர் (சத்தியநாதன்), 1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி உயிரிழந்தார்.

அவர் உயிர்நீத்த தினம், மாவீரர் தினமாக வருடா வருடம் நவம்பர் மாதம் 27ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஈழப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகள் அனைவரையும், நவம்பர் மாதம் 27ம் தேதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இலங்கை தமிழர்கள் நினைவுகூர்கின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் ராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவு தூபிகள் மற்றும் நினைவிடங்களில் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், முக்கிய சந்திகள் மற்றும் பிரதேச நுழைவாயில்களிலும் இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை காண முடிகின்றது.

மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு முன்னதாக நீதிமன்றங்கள் தடை விதித்திருந்த போதிலும், தமிழர் தரப்பு நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூற அனுமதி கோரியிருந்தனர்.

இந்த நிலையில், சில நீதிமன்றங்கள் தடை விதித்த போதிலும், மேலும் சில நீதிமன்றங்கள் யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூற அனுமதி வழங்கியிருந்தன.

இந்த நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தமிழர் தரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் என்று அழைக்கப்படும் லெப்டினன்ட் சங்கரின் வீட்டில் இன்று முற்பகல் ஈகை சுடரேற்றி நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் கேப்டன் பண்டிதரின் தாயாரும் கலந்துகொண்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு ஈகை சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி, அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அத்துடன், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதி யுத்தம் இடம்பெற்ற நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதேபோன்று, உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலும் வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

நந்திக்கடல் பகுதியில் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, துரைராசா ரவிகரன், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு வருகைத்தந்த வழிபாடுகளை நடத்தியுள்ளார்.

இதேவேளை, உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார்.

நீதிமன்றத்தின் முடிவு என்பது, அஞ்சலி செலுத்துவதற்கான தீர்ப்புதான் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் எஸ்.சிறிதரனும், இன்றைய தினம் ”மாவீரர்கள்” என்று விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் போற்றப்படும் முன்னாள் போராளிகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

மேலும், வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்திருந்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், மாணவர்களினால் மாவீரர்களுக்கு ஈகை சுடரேற்றி, முழந்தாளிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு – கடற்படை பகுதியில் பெருந்திரளாக ஒன்று கூடிய மக்கள், யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கடுமையான பாதுகாப்புக்கு மத்தியிலும், மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள், யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து இன்று மாலை கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

”மாவீரர்கள்” என்று அழைக்கப்படுபவர்கள் நினைவு இல்லங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் அண்மையில் துப்புரவு செய்திருந்தன.

இதன்போது ராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்திய போதும், தாம் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டதாக தமிழர் தரப்பு கூறியிருந்தது.

மாவீரர் தினத்திற்கு நீதிமன்றங்கள் தடை விதிக்குமானால், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, வீடுகளில் மாத்திரம் நினைவேந்தல்கள் நடத்தப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்தது.

எனினும், பாதுகாப்பு தரப்பு இதற்கு தடை விதிக்குமானால், அந்த தடைகளையும் மீறி, மாவீரர் தினத்தை தாம் அனுஷ்டிப்பதாக செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருந்தனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது..

முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை காணொளிப் பதிவு செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளருக்கு உடம்பின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

எனினும், ராணுவ வீதி தடையைக் காணொளியாகப் பதிவு செய்துகொண்டிருந்த நபரை விசாரணை செய்ய முயற்சித்த போது, அவர் ராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த வேளையிலேயே தடுமாறி வீழ்ந்ததாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

ராணுவத்தினர், ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவத்தை அடுத்து, ஊடகவியலாளரை போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாகவும், போலீஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version