Site icon ilakkiyainfo

பாலியல் துன்புறுத்தல்: தோழியை துன்புறுத்திய தந்தையை கொலை செய்த இளம் ஆண் தோழர்கள்

பெங்களூரில் தன் மகளையும், மகளின் வகுப்புத் தோழியையும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்த 46 வயதுடைய ஒருவரை, நான்கு இளம் மாணவர்கள் சேர்ந்து கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

17 வயதுடைய சிறுமி ஒருவர், அவரது தந்தை அவரை பாலியல் ரீதியில் துன்புறுத்துவதாக தன் வகுப்பு ஆண் தோழர்களிடம் புகார் கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட அந்த நபர் ஓர் உள்ளூர் நிறுவனத்தின் பாதுகாப்பு மேலாளராக வேலை செய்து வந்தார்.

அவரின் மனைவி (சிறுமியின் தாய்) கடந்த வாரக் கடைசியில் அவரது சொந்த ஊரான கல்புராகிக்கு சென்றிருந்த போது, அந்த ஆண் மீண்டும் தனது மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்த முயன்றார்.

பாலியல் ரீதியிலான பிரச்னையை எதிர்கொண்ட சிறுமியின் வகுப்புத் தோழன், தன் வயது ஒத்த மூன்று பதின்பருவ சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு, இந்த நால்வரும் அச்சிறுமி வசித்து வந்த வீட்டின் கதவை தட்டினர். அப்பெண் கதவைத் திறந்து நால்வரையும் வீட்டுக்குள் அனுமதித்துள்ளார்.

வீட்டுக்குள் புகுந்த அச்சிறுமியின் நண்பர்கள் அனைவரும் கத்தி உட்பட பல்வேறு ஆயுதங்களால் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறப்பட்ட அவரது தந்தையைத் தாக்கினர்.

யெலஹன்கா காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த போது, தாக்கப்பட்ட நபர் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார்.

“இது ஒரு சிக்கலான வழக்கு. தன் மகளை கணவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதை அறிந்திருந்தார். முதல் முறையாக அவரது மகள் கணவனால் துன்புறுத்தப்படும்போதே அவர் அதை அறிந்திருந்தார்” என பெங்களூரு வட கிழக்கு துணை ஆணையர் சி கே பாபா பிபிசி இந்தியிடம் கூறினார்.

“இந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, அப்பெண்ணின் தாய், தன் கணவரிடம் பேசிப் பார்த்தது பயனற்றுப் போனது. ஒருகட்டத்தில் இந்த பிரச்னையால் அவருக்கும், அவர் கணவருக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்துவிட்டது” என்றும் அவ்வதிகாரி கூறினார்.

ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் அப்பெண்ணின் தாய் கல்புராகி பகுதியைச் சேர்ந்தவர். தந்தை பீகாரைச் சேர்ந்தவர்.

அவரது மகள் அருகிலுள்ள கல்லூரி ஒன்றில் பி.யூ.சி படித்து வருகிறார். 11 வயதான அவர்களது இரண்டாவது மகள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்.

கொலை நடந்த பிறகு சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, சிறுமியை (பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுபவர்) விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். அது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன் பிறகு தன் நண்பர்கள் தான் அவரை கொன்றதாக அந்தச் சிறுமியே ஒப்புக் கொண்டார். தந்தையை கடுமையாக தாக்கிய பிறகு, அவரது நண்பர்கள் அவ்வீட்டை விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

தந்தை தாக்கப்பட்ட பிறகு, தனது இளைய சகோதரியை எழுப்பி உதவி கேட்டு அலறியதாக கூறப்படுகிறது.

யாரோ சிலர் தன் தந்தையை தாக்கிவிட்டதாக அக்கம்பக்கத்தில் உள்ளோரிடம் அந்தச் சிறுமி கூறியதாவும் சொல்லப்படுகிறது.

“சம்பவம் நடந்து அடுத்த 10 மணி நேரத்துக்குள் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் பிடித்துவிட்டோம்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், அந்தச் சிறுமி வாழ்ந்து வரும் வாடகை வீட்டுக்குள் நுழைந்தது மற்றும் தப்பியோடியது அனைத்தும் சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது” என காவல்துறை அதிகாரி கூறினார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சிறார் நீதி வாரியம் முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறார் காவல் மையத்துக்குஅனுப்பப்பட்டனர்.

Exit mobile version