ilakkiyainfo

ஒமிக்ரான் கொரோனா திரிபு முதல் முறையாக இந்தியாவில் கண்டுபிடிப்பு: கர்நாடகத்தில் இருவருக்கு உறுதி

இந்தியாவில் முதல் முறையாக இரண்டு நோயாளிகளிடம் ஒமிக்ரான் கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு இருப்பது ஒமிக்ரான் திரிபு என்பது ஜெனோம் சீக்வன்சீங் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது.

கொரோனா வைரசில் ஏற்படும் மரபணுத் திரிபுகளை ஆராய்வதற்காக இந்திய அரசு கடந்த ஆண்டு ஏற்படுத்திய இன்சாகாக் கன்சார்ட்டியம் (INSACOG consortium) மூலம் செயல்படுத்தப்படும் ஆய்வகம் இந்த ஜெனோம் சீக்வன்சீங் பணியை மேற்கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜெனோம் சீக்வன்சிங் என்பது ஓர் உயிரியின் மரபணுக் குறிப்புகள் முழுவதையும் வரிசைப் படுத்தும் ஒரு பணியாகும். இன்சாகாக் கன்சார்ட்டியம் 37 ஆய்வகங்களை நடத்தி வருகிறது.

கர்நாடகத்தில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் திரிபு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் நாம் பீதியடையத் தேவையில்லை. ஆனால், எச்சரிக்கையாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். கோவிட் தொற்றுக்காலத்துக்கு ஏற்ற பழக்கவழக்கங்கள் தேவை என்று தெரிவித்துள்ளார் பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஒமிக்ரான் திரிபு உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருந்தொற்றில் இருந்து மீள்வதில் இது ஒரு பின்னடைவு என்று உலக சுகாதார நிறுவனம் முதலில் கூறியிருந்தது.

உலக சுகாதார நிறுவனம் கூறியது என்ன?

கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபினால் உலக அளவில் ஏற்பட சாத்தியமுள்ள இடர்ப்பாடு ‘மிக அதிகம்’ என்றும், இதனால், சில பகுதிகளில் தீவிர விளைவுகள் ஏற்படலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.

 

உயர் இடர்பாடு மிகுந்த மக்கள் பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தவேண்டும்; அதிக எண்ணிக்கையில் தொற்று ஏற்படும் என்பதை எதிர்பார்த்து, அத்தியாவசிய சுகாதார சேவைகளை பேணுவதற்கான, இடர் நீக்கும் திட்டங்களை தயார் செய்யவேண்டும் என்று தங்கள் 194 உறுப்பு நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

“முன்னர் வேறு திரிபுகள் எதிலும் இல்லாத அளவில் ஒமிக்ரான் திரிபில் முள்முடி பிறழ்வுகள் அதிகம் உள்ளன. இவற்றில் சில பிறழ்வுகள் பெருந்தொற்று உலக அளவில் எப்படிச் செல்லும் என்ற பாதையை பாதிக்கும் வகையில் உள்ளன.

இந்த திரிபின் ஒட்டுமொத்த உலக அளவிலான இடர்ப்பாடு அதிகமாக உள்ளது,” என்று உலக சுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்தது.

“நோயின் தீவிரத் தன்மை எப்படி இருந்தாலும், தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பது சுகாதார அமைப்புகளுக்கான தேவையை அதிகரிக்கும். இதனால், மரணங்களும் அதிகரிக்கலாம்.

பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதான இதன் தாக்கம் அபரிமிதமாக இருக்கும். குறிப்பாக, தடுப்பூசி குறைவாகப் போட்டுள்ள நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்” என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான்

இந்த திரிபு குறித்து முதல் முதலாக தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக சுகாதார நிறுவனத்துக்கு நவம்பர் 24ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு இந்த திரிபு உலகம் முழுவதும் பரவி வருகிறது. நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பல நாடுகள் பயணத் தடைகளை விதித்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள முயல்கின்றன.

தங்கள் எல்லைகளை வெளிநாட்டினர் நுழைய முடியாதபடி மூடுவதாக ஜப்பான் திங்கள் கிழமை அறிவித்துள்ளது. முன்னதாக இஸ்ரேல் இது போன்ற கடும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

“தற்போது பெரும்பாலான இந்தியர்களின் உடலில் டெல்டா திரிபுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுவே இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதற்கான காரணமாக இருக்கலாம். மேலும் நாட்டிலுள்ள பெரியவர்களில் ஐந்தில் நான்கு பகுதியினருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஆனால் இதை மட்டுமே வைத்து மகிழ்ச்சியடைந்து விடமுடியாது,” என்று தொற்றுநோயியல் நிபுணர் சந்திரகாந்த் லகாரியா பிபிசி-க்கு எழுதிய ஒரு கட்டுரையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version