Site icon ilakkiyainfo

புலம் பெயர் தமிழர்களுக்கு ஓர் எச்சரிக்கை!! : உண்டியலில் பணம் வந்தால் கிடைக்காதாம்

வெளிநாடுகளிலிருந்து உண்டியல் போன்ற சட்ட விரோதமான முறைகளில் நாட்டுக்கு பணத்தை அனுப்புதல் மற்றும் விநியோகித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்தப் பணத்தை அரசாங்கம் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் பணிபுரிவோர் மற்றும் வசிக்கும் இலங்கையர்கள், இலங்கைக்கு பணத்தை அனுப்பும் போது, சட்ட ரீதியாக காணப்படும் முறைகளை மாத்திரம் பயன்படுத்தி பணத்தை அனுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

உத்தியோகப்பற்றற்ற முறையில் நாட்டினுள் வரும் வெளிநாட்டு பண அனுப்புகைகள் தொடர்பான தகவல்களை திரட்டும் பணிகளை அதிகாரத் தரப்பினர் முன்னெடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

அதனூடாக இவ்வாறான நடவடிக்கைகளை இடைநிறுத்தும் வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு பண அனுப்புகைகளை மேற்கொள்வதற்கு பல சட்டபூர்வமான வழிமுறைகள் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படும் முறைகளை மாத்திரம் பயன்படுத்துமாறு ஆளுநர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இம் மாதம் வெளிநாடுகளிலிருந்து வங்கிக் கட்டமைப்புகள் மற்றும் இதர சட்ட ரீதியான வழிமுறைகளினூடாக இலங்கைக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் மேலதிகமாக 10 ரூபாயை கொடுப்பனவாக வழங்க இலங்கை மத்திய வங்கி முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

Exit mobile version