Site icon ilakkiyainfo

கொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா?

தென்னாபிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ‘B.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பிறழ்விற்கு ‘ஒமிக்ரோன்’ என கடந்த நவம்பர் 26 ஆம் திகதி உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது.

ஒமிக்ரோன் (Omicron) தற்போது 17 நாடுகளுக்கு பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

1. தென்னாபிரிக்கா 2. ஹாங்காங் 3. போட்ஸ்வானா 4. அவுஸ்திரேலியா 5. இத்தாலி 6. ஜெர்மனி 7. நெதர்லாந்து 8. இங்கிலாந்து 9. இஸ்ரேல் 10. பெல்ஜியம் 11. சுவிட்சர்லாந்து 12. கனடா                    13. பிரான்ஸ் 14. ஸ்பெயின் 15. போர்ச்சுக்கல் 16. டென்மார்க் 17. செக் குடியரசு ஆகிய நாடுகளில் ஒமிக்ரோன் பிறழ்வு இனங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பானிலும் தொற்றுடன் ஒருவர் இனங்காணப்பட்டிருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.

இதனிடையே, ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்கள் இந்த புதிய பிறழ்வில் இருந்து தப்பிக்க முடியுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

எனினும், ஏற்கனவே போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துமா என்பதை கண்டறிய பல வாரங்கள் தேவைப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் வைரஸ் நோய் எதிர்ப்பு திறனில் இருந்து தப்பிக்கும் தன்மை கொண்டதாக இருக்கலாம். மேலும் இதன் பரவுதல் வேகமும் அதிகரிக்கும். எனவே இது அதிகமாக பரவ வாய்ப்புள்ளது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

அது எங்கு அதிகமாக பரவுகிறது என்பதன் அடிப்படையில், அதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் ஒமிக்ரோனால் உலக அளவில் அதிக ஆபத்து ஏற்பட்டிருப்பது ஆரம்ப கட்ட ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி போட்டவர்களை விட தடுப்பூசி போடாதவர்களுக்கே ஒமிக்ரோன் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் லேசான அறிகுறிகளையே வெளிப்படுத்துகின்றன.

இதன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்த்தல், உடல் வலி போன்ற சாதாரண அறிகுறிகளே இருக்கின்றன.

எனினும், இதுவரை கண்டறியப்பட்டவற்றை விட இது மிக அதிக உருமாற்றங்களைக் கொண்டிருப்பதால், இதன் தீவிரத்தன்மை அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்ரேலில் Booster தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது மிக அவதானத்தை ஈர்த்துள்ளது.

இதனிடையே, Sputnik V மற்றும் Sputnik Light ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் ஒமிக்ரோன் வகை கொரோனா வைரஸை எதிர்க்கும் திறன் கொண்டிருக்கும் என ரஷ்ய சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், ஒமிக்ரான் வகை கொரோனா பிறழ்விற்கு எதிரான புதிய தடுப்பூசி தயாரிக்கும் ஆய்வுப் பணியிலும் ரஷ்யா இறங்கியுள்ளது.

Exit mobile version