நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய ஜீவா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு வலையில் கத்தாழை மீன் ஒன்று சிக்கியது.
இது மருத்துவ குணம் வாய்ந்தது; விலை மதிப்பு மிக்கது. கூறல் மீன் எனப்படும் கத்தாழை மீன் குறித்த தகவல் அறிந்த வியாபாரிகள் காலையில் இருந்து கத்தாழை மீனை வாங்க நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர். 25 கிலோ எடை கொண்ட அந்த கத்தாழை மீன் ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்த வகையான கற்றாழை மீன்கள் கிடைக்கும். மீனவர்கள் வலையில் மிகவும் அரிதாக கிடைக்கக்கூடியதும், விலைமதிக்க கூடியதுமான இந்தவகை மீன்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
இந்த வகை கத்தாழை மீன்களுக்கு செவில் சுவாசத்தோடு, மீன்களின் அடி வயிற்றில் நெட்டி என்ற காற்றுப்பை இருக்கும். ஒரு மீனில் 50 கிராம் முதல் 100 கிராம் வரை இந்த நெட்டி இருக்கும்.
இந்த நெட்டி மூலம் மீன்கள் ஆபத்து காலத்தில் ஒரு வகை ஒலி எழுப்பும் தன்மை கொண்டதாகும்.
மீன் இறைச்சி கிலோ ரூ. 500-க்கு விற்றாலும், அதில் இருக்கும் நெட்டிக்குதான் விலை அதிகம்.
எனவே இந்த வகையான மீன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவை வலையில் சிக்குவது, பேரதிஷ்டம் என தெரிவிக்கின்றனர்.