Site icon ilakkiyainfo

மாவீரர் நாள் கொண்டாடியதால் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்ட நபர்

சிங்கப்பூரில் மாவீரர் நாள் கொண்டாடியதுடன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அட்டைப்படம் பொறிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை வைத்திருந்த நபர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எடையூர் சிவராமன் நகரை சேர்ந்தவர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி.

இவர் எடையூர் கடைவீதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் குமரேசன் (வயது 25). இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் இணையதளம் மூலம் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து உள்ளார்.

இந்த நிலையில் குமரேசன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் மாவீரர் நாளும் அவர் கொண்டியிருக்கின்றார்.
இக்காரணங்களுக்காக அவர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். சிங்கப்பூரில், தமிழர்கள் சிலர் மாவீரர் நாள் விழாக் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

இது தொடர்பாக சிங்கப்பூர் காவல்துறை விசாரித்து வந்தது. அப்போது, விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அட்டைப்படம் பொறிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை வைத்திருந்த, திருவாரூரைச் சேர்ந்த குமரேசனை அந்நாட்டு காவல்துறை விசாரித்துள்ளது.

விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்பதால் ஆறு நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி, அவரை சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இனி வாழ்நாள் முழுவதும் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாத வகையில், அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குமரேசன் தந்தை செல்வமணி கூறுகையில், “கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிங்கப்பூர் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வெல்டிங வேலை செய்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சியிலும் உறுப்பினராக உள்ளார். கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் பணியில் இருந்தபோது சீன நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் என் மகனுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து என் மகன் வேலை பார்த்த நிர்வாகம் அவரது வங்கி கணக்குகளையும் முடக்கி அவரை சிங்கப்பூர் நாட்டில் இருந்து வாழ்நாள் தடை விதித்து இந்தியாவிற்கு அனுப்பி உள்ளனர்.

இதனால் இங்கிருந்து பணம் அணுப்பி மகனை வரவழைத்தோம். இங்கும் அவரிடம் ஒருநாள் விசாரணை நடத்தப்பட்டது.

இச்சம்பவத்தால் என் மகனுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் கும்பகோணத்தில் உள்ள எங்களது உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட குமரேசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “நான் வைத்திருந்த செல்போனில் ஈழத் தமிழர்களின் தலைவரான பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டோவை வைத்திருந்தேன். இதைக்கண்டு ‘தடை செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவளிக்கும் அமைப்போடு தொடர்பு வைத்துள்ளீர்களா’ என்று என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களிடம், ‘நான் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்.

நான் அந்த கட்சிக்கு மாத சந்தா 500 ரூபாய் அனுப்புவேன். அது அந்த கட்சி மக்களுக்காகவும் மரம் நடுதல் போன்ற பணிகளை செய்வதற்காகவும் பயன்படுத்தப்படும்’ என்று தெரிவித்தேன்.

உடனடியாக சிங்கப்பூர் காவல்துறை என்னை விசாரணைக்கு அழைத்துச் சென்று ஆறு நாட்கள் இமிக்ரேஷன் ஆஃபிஸில் வைத்து விசாரணை நடத்தியது.

சுமார் ஆறு நாட்கள் அங்கு வைத்திருந்து, அதன் பிறகு நாடு கடத்தியது. அதன் பிறகு இந்தியா வந்தபோது இந்தியாவில் உள்ள இமிக்ரைஷன் ஆஃபிஸில், இரவு 7 மணி முதல் விடியற்காலை 3 மணி வரை தொடர்ந்து விசாரித்து வந்தது.

அப்போதும் பதிலளித்தேன். இதனை தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டை விட்டு என்னை வெளியேற்றி விட்டனர்” என தெரிவித்தார்.
puthiyathalaimurai

Exit mobile version