Site icon ilakkiyainfo

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி

தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதை அடுத்து விமான நிலையங்களில் கண்காணிப்பும், பரிசோதனையும் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:

உலகில் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் முதன் முதலில் கடந்த 2-ந்தேதி பெங்களூரில் தடம் பதித்தது.

இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கேரளா உள்பட பல மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவியது. இதுவரை இந்தியாவில் 236 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஒரே ஒருவருக்கு மட்டும் இருந்தது. இந்தநிலையில் தற்போது ஒமைக்ரான் பாதிப்பு மேலும் 33 பேருக்கு பரவி உள்ளதால் தொற்று எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

இதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதுபற்றி அவர் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகளவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் இருந்தும், பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு 1 லட்சத்து 9 ஆயிரத்து 50 பேர் வந்துள்ளனர்.

அவர்களில் 17 ஆயிரத்து 957 பேருக்கு தொற்று பரிசோதிக்கப்பட்டது. அதில் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் உடனடியாக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் 57 பேர், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர், பெருந்துறை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், கன்னியாகுமரி அரசு மருத்துவமனைகளில் தலா 2 பேர், நெல்லை, குரோம்பேட்டை, சென்னை ஐ.ஓ.சி., திருவாரூர், கோவை, நாகப்பட்டினம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் தலா ஒருவரும், தனியார் மருத்துவமனைகளில் 11 பேரும் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இவர்களது மாதிரிகள் மரபியல் மாற்ற ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது ஒமைக்ரானுக்கு முந்தைய மரபியல் மாற்றம் இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர்களது மாதிரிகள் பெங்களூர் மற்றும் புனேயில் உள்ள மத்திய அரசின் ஆய்வகங்களுக்கு ஒமைக்ரான் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு இருந்தது.

 

நேற்று 60 பேரின் பரிசோதனை முடிவுகள் மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளன. இதில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 34 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவார்கள்.

முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டவர் பூரணமாக குணமடைந்துவிட்டார். தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 33 பேரில் சென்னையில் 26 பேரும், மதுரையில் 4 பேரும், திருவண்ணாமலையில் 2 பேரும், சேலத்தில் ஒருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சையில் இருப்பவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். லேசான தலை சுற்றல், தொண்டை கரகரப்பு மட்டுமே இருந்தது. விரைவில் அவர்களும் குணமடைந்து வீடு திரும்புவார்கள்.

ஒமைக்ரான் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதை அடுத்து விமான நிலையங்களில் கண்காணிப்பும், பரிசோதனையும் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அரசு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

 

Exit mobile version