விபத்துக்கான காரணம் குறித்து காங்கயம் டி.எஸ்.பி., குமரேசன், சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கயம்:
சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர்கள் பிரபு (வயது 23), செந்தில் (24), அறிவழகன் (25). பழனி கோவிலுக்கு மாலை அணிந்திருந்த இவர்கள் 3 பேரும் அவர்களது நண்பர்களான கந்தசாமி, சபரிராஜா, ஜெகன், கோகுலகிருஷ்ணன் வடிவேல் ஆகியோருடன் பழனிக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றிரவு காரில் சேலத்திற்கு புறப்பட்டனர். காரை அறிவழகன் ஓட்டினார்.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது அந்த வழியாக ஈரோட்டில் இருந்து காங்கயம் வழியாக பழனிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், காரும் நேருக்குநேர் மோதின. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் 7 பேரும் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினர்.
விபத்துக்குள்ளான கார்-அரசு பஸ்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு காங்கேயம் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் அனைவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது பிரபு, செந்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. இதையடுத்து மற்ற 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அறிவழகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
வடிவேல் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவருக்கு கால் முறிந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து காங்கயம் டி.எஸ்.பி., குமரேசன், சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நிகழ்ந்ததும் பஸ் டிரைவர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான பிரபு சேலம் அரசு கல்லூரியில் எம்.ஏ., 2-ம் ஆண்டும், செந்தில் என்ஜினீயரிங் கல்லூரியிலும் படித்து வந்தனர்.
மேலும் செந்திலுக்கு திருமணமாகி மோனிஷா என்ற மனைவியும், 6 மாத கைக்குழந்தையும் உள்ளது. அறிவழகன் கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். பழனி கோவிலுக்கு சென்று விட்டு வந்த போது 3 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.