ilakkiyainfo

பல்துருவ ஆதிக்கமும் தமிழர்களும்

உலகத்தில் செல்வாக்கும் ஆதிக்கமும் செலுத்துவதற்கு பல நாடுகள் போட்டி போடுதல் பல்துருவ ஆதிக்கம் எனப்படும்.

இரண்டு நாடுகள் அதில் ஈடுபட்டால் அது இருதுருவ ஆதிக்கம் என்றும் ஒரு நாடுமட்டும் அதில் சிறந்து விளங்கினால் அது ஒரு துருவ ஆதிக்கம் எனவும் அழைக்கப்படுகின்றது. பனிப்போரின் பின்னர் சோவியம் ஒன்றியம் வீழ்ச்சியடைந்துடன் அமெரிக்கா ஒரு துருவ ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது என வாதிடுவோர் உண்டு.

அணுக்குண்டு வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் பல்துருவ ஆதிக்கம் செலுத்துகின்றன என்போரும் உண்டு.

அணுக்குண்டு வைத்திருந்தால் மட்டும் போதாது அதனால் மற்ற வல்லரசு நாட்டில் கணிசமான அழிவை ஏற்படுத்தக் கூடிய வகையில் அவற்றை எடுத்துச் சென்று வீசக் கூடிய வலிமையும் இருக்க வேண்டும் எனவும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

பொருளாதாரமும் துருவ ஆதிக்கமும்

உலகெங்கும் இருந்து மலிவு விலையில் மூலப் பொருள்களைப் பெற்று அதிலிருந்து குறைந்த செலவில் உற்ப்பத்தி செய்யும் பொருள்களை அதிக விலைக்கு உலகெங்கும் விற்பனை செய்வதே உலக ஆதிக்கத்தின் முதன்மை நோக்கம்.

முதலில் பிரித்தானியா தனது கைத்தொழில் புரட்சி மூலம் இதைச் செய்து உலக ஆதிக்கத்தைச் செய்தது.

அதன் கடற்படை வலிமை அதற்கு உறுதுணையாக அமைந்தது. அதேவழியை அமெரிக்கா பின்பற்றி வெற்றிகண்டது.

பிரித்தானியாவில் இருந்த கனிம வழங்களிலும் பார்க்க அதிக அளவு கனிம வளம் அமெரிக்காவில் இருக்கின்றது.

அதனால் உலகில் பிரித்தானியா செய்த ஆதிக்கத்திலும் பார்க்க அதிக ஆதிக்கத்தை அமெரிக்காவால் செய்யக் கூடியதாக இருக்கின்றது.

பிரித்தானியாவின் குடியேற்ற ஆட்சிக் கொள்கை முறியடிக்கப்பட்டதை தனக்கு ஒரு பாடமாக எடுத்த அமெரிக்கா புதிய குடியேற்றவாதம் எனப்படும் தனக்கு உகந்த ஆட்சியாளர்களை கேந்திர முக்கியத்துவம் வாய்த பிரதேசங்களில் ஆட்சியைல் அமர்த்தும் உபாயத்தை நிறைவேற்றியது.

பின்னர் அது சவாலை எதிர்கொள்ளும் போது புதிய தாராண்மைவாதம், உலகமயமாதல் என தனது உபாயங்களை மாற்றிக் கொண்டுள்ளது.

சோவியத்தின் வீழ்ச்சிக்கு முன்னர்

ஒரு துருவ ஆதிக்கம் ஒரு போதும் இருந்ததில்லை

உலக வரலாற்றில் ஒரு துருவ ஆதிக்கம் ஒரு போதும் இருந்ததில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

சூரியன் மறையாத வல்லரசு எனச் சொல்லுமளவிற்கு கனடா முதல் நியூசீலாந்து வரை உலகின் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருந்த பிரித்தானியாவால் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி, இரசியா, சீனா ஜப்பான், சீனா போன்ற நாடுகளைக் கைப்பற்ற முடியவில்லை. சோவியத் ஒன்றியத்தின் பின்னர் பல நாடுகளில் தனது மறைமுக ஆதிக்கத்தை செய்த அமெரிக்காவால் நடுவண் ஆசிய நாடுகள், இரசியா, கியூபா, சீனா ஆகிய நாடுகளில் ஆதிக்கம் செய்ய முடியவில்லை.

1815இல் இருந்து 1945-ம் ஆண்டு வரை உலகம் பல்துருவ ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் இருந்த வல்லரசு நாடுகளிடையேயான நட்புறவையும் பகைமையையும் பொறுத்து ஆதிக்கச் சமநிலையும் மாறிக் கொண்டே இருந்தது.

நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியா, இரசியா, பிரசியா, பிரான்ஸ், டென்மார்க்-ஹங்கேரி ஆகியவை உலக வல்லரசுகளாக இருந்தன.

கிறிமியாவை துருக்கியிடமிருந்து மீளப் பெற எடுத்த முயற்ச்சி அப்போது இருந்த பல் துருவ உலகச் சமநிலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பின்னர் ஹிட்லர் தலைமையில் ஜேர்மனி மற்ற வல்லரசு நாடுகளை ஆக்கிரமிக்க எடுத்த முயற்ச்சியால் உருவான இரண்டாம் உலகப் போர் பல் துருவ உலக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பின்னர் சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் உலக ஆதிக்கத்திற்கு போட்டி போட்டன.

முத்துருவ ஆதிக்கம் நிச்சயமாக உருவாகிவிட்டது

மேற்கு ஐரோப்பிய நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சனைகளையும் தேசியவாதப் பிரச்சனைகளையும் சமாளித்து எழுச்சியுறும் போது அவை அமெரிக்கா தலைமையில் ஒரு குழுவாக உலக அரங்கில் செயற்படும் போது அவற்றுக்கு சவால் விடக் கூடிய வகையில் இரசியாவோ அல்லது சீனாவோ உருவாகுவதற்கு இரண்டு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டியுள்ளது.

ஆனால் இரசியாவும் சீனாவும் அமெரிக்காவை தமது அணுக்குண்டுகள் தாங்கிச் செல்லும் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளால் தாக்கக் கூடிய வலிமையை பெற்றுவிட்டனவோ அப்போது முத்துருவ ஆதிக்கம் தோன்றிவிட்டது.

சிரியாவில் பஷார் அசாத் வேதியியல் குண்டுகளைத் தாக்கினால் அது செங்கோட்டைத் தாண்டுவது போலாகும்; அதைத் தண்டிக்கும் முகமாக சிரியாமீது தாக்குதல் செய்யப்படும் என அமெரிக்க அதிபர் சூளுரைத்திருந்தார்.

ஆனால் அதையும் மீறி சிரியாவில் வேதியியல் குண்டு வீச்சு செய்யப்பட்ட போது அசத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தடுத்துவிட்டார்.

சீனா தென் சீனக் கடலில் செயற்கை தீவை அமைப்பதை தடுப்போம் என அமெரிக்கா செய்த சூளுரையையும் மீறி சீனா தீவுகளை அமைத்ததுடன் அவற்றைப் படைத்தளங்களாகவும் மாற்றிவிட்டது.

அமெரிக்கா, இரசியா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் தற்போது உலக ஆதிக்கத்தில் போட்டி போடுகின்றன.

சோவியத் ஒன்றியத்தால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட சவாலிலும் பார்க்க மோசமான சவால் சீனாவால் 2020களில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.

சோவியத் ஒன்றியத்திலும் பார்க்க வலுவான பொருளாதாரத்தை சீனா கொண்டுள்ளது. சோவியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடந்த வர்த்தகத்திலும் பார்க்க பல மடங்கு வர்த்தகம் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடக்கின்றது.

 

 

2030இல் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் வட அமெரிக்க நாடுகளான ஐக்கிய அமெரிக்காவும் கனடாவும் படைத்துறை ரீதியிலும் பொருளாதார ரிதியிலும் தமக்கு இடையிலேயான ஒத்துழைப்பை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தந்தத்தை இரசியாவினதும் சீனாவினதும் படைத்துறை வளர்ச்சி ஏற்ப்படுத்தியுள்ளது..

இரசியாவினது படைத்துறை வளர்ச்சியும் சீனாவினுடைய பொருளாதார வளர்ச்சியும் இரண்டு நாடுகளது தொழில்நுட்ப ஒத்துழைப்பும் ஒரு குறித்த அளவிற்கு மேல் போக முடியாது. இரசியாவும் சீனாவும் ஒன்ற்றின் வளர்ச்சியை மற்றது ஐயத்துடன் பார்க்க வேண்டிய நிலை உருவாகும்.

இருதுருவ ஆதிக்கமும் தமிழர்களும்

1980களில் அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த இருதுருவ ஆதிக்கப் போட்டி தீவிரமடைந்தது.

அப்போது சீனா அமெரிக்காவுடன் இணைந்து “அமைதியான எழுச்சி” என்னுக் கொள்கையுடன் செயற்பட்டது.

பங்களாதேசம் பிரிக்கப் பட்ட பின்னர் இரசியாவுடன் ஒத்துழைக்கும் இந்தியாவை அடக்குவதற்கு இலங்கையில் தனக்கு என சில படைத்துறை வசதிகளை ஏற்படுத்த அமெரிக்கா முயன்றது.

அதைத் தடுக்க இந்தியா தமிழர்களைத் தனது துருப்புச் சீடாக பயன்படுத்தியது. தமிழர்கள் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு மிக அச்சுறுத்தலாக உருவாகினர்.

1991இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னரும் அமெரிக்க இந்திய முறுகல் இலஙகையில் தொடர்ந்தது.

அமெரிக்க ஆதிக்கம் உலகில் அதிகரித்தும் இரசியா ஆதிக்கம் சரிந்தும் சீன ஆதிக்கம் அதிகரிக்கும் நிலை 1999-ம் ஆண்டு உருவானது.

அப்போது அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவிற்கு எதிராக ஒன்றுபட வேண்டிய நிலை உருவானது.

2000-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க வெளியுறவுச் செயலராக இருந்த ஹிலரி கிளிண்டன் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் புவிசார் உறவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

பின்னர் இந்தியாமீதான பொருளாதாரத் தடை அமெரிக்காவால் நீக்கப்பட்டது. இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு ஈழத் தமிழர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி 2009இல் பேரழிவில் முடிந்தது.

வரவிருக்கும் பல்துருவ ஆதிக்கம்

இந்தியாவின் பொருளாதார மற்றும் படைத்துறை வளர்ச்சி ஒரு சிறந்த தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

இது தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவும் உலகில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு நாடாக மாறும்.

உலகெங்கும் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் உலக ஆதிக்கத்தில் பெரும் பங்காற்றுவார்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் தனது பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியிருக்கும் கொள்கையை மாற்றி தனக்கு என ஒரு படையை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையை வலுவடையும் போது. அது ஒரு உலகப் பெருவல்லரசாக உருவாகும். ஏற்கனவே பிரான்ஸ் என்ற வல்லரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், 2030அளவில் அமெரிக்கா, இரசியா, சீனா, இந்தியா என்ற ஐந்து துருவங்கள் உலகில் உருவாகும் போது தமிழர்கள் தமக்கு என ஒரு நட்பு நாட்டை பெற்றுக் கொள்வது இலகுவாக்கப்படும்.

தற்போது பல நாடுகளில் இளையோராக இருக்கும் தமிழர்கள் அப்போது சிறப்பாக செயற்பட்டால் ஈழவிடுதலை சாத்தியமாகும்.

இதனால் தான் 2008 மாவிரர் நாள் உரையில் இனி எமது விடுதலைப் போராட்டத்தை புலம் பெயர் இளையோர் முன்னெடுப்பார்கள் என எதிர்வு கூறப்பட்டது.

-வேல்தர்மா-

Exit mobile version