Site icon ilakkiyainfo

இசையின் எட்டாவது சுவரம் ஏ.ஆர். ரஹ்மான்.. 55வது பிறந்தநாளை கொண்டாடும் இசைப்புயல்!

இசையின் எட்டாவது சுவரம் ஏ.ஆர். ரஹ்மான்.. 55வது பிறந்தநாளை கொண்டாடும் இசைப்புயல்!

சென்னை: “எட்டா ஸ்வரம் நீ தான்” என தளபதி விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்தில் இடம்பெற்ற வளையப்பட்டி தவில் பாடலில் பாடி இருப்பார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

ஏழு ஸ்வரத்தை தாண்டி எட்டாவது ஸ்வரமாகவே இசைப்புயலை உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

55வது பிறந்தநாள் விழாவை கொண்டாடி வரும் ஏ.ஆர். ரஹ்மானை எட்டாவது அதிசயம் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

திலீப் குமாராக 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தவர் சினிமாவில் ஏ.ஆர். ரஹ்மானாக உலக ரசிகர்களும் போற்றிப் பாடும் ஆஸ்கர் நாயகனாக ரசிகர்களின் இதயங்களில் இசை சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் 55வது பிறந்தநாளை ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனையவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

அப்பாவும் இசையமைப்பாளர்

இசை ரஹ்மானின் ரத்தத்தில் இருந்தே பிறந்தது என்று சொல்லலாம். ஏ.ஆர். ரஹ்மானின் அப்பா ஆர்.கே. சேகர் எனும் ராஜகோபால குலசேகரனும் இசையமைப்பாளர் தான்.

தமிழ் மற்றும் மலையாளம் என மொத்தம் 50 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பல படங்களுக்கு இசையமைப்பதில் உதவி செய்துள்ளார்.

அப்பா ஆறடி பாஞ்சா புள்ள பதினாறு அடி பாயும் என்பார்கள் ஏ.ஆர். ரஹ்மான் பல நூறு அடிகள் இசை துறையில் பாய்ந்து விட்டார் என்றே தான் சொல்ல வேண்டும்

இளையராஜா குழுவில்

4 வயதிலேயே இசையை கற்றுக் கொள்ள ஆரம்பித்த ஏ.ஆர். ரஹ்மான் மாஸ்டர் தன்ராஜ் என்பவரிடம் இசையை பயின்றார்.

பின்னர் 11 வயதிலேயே ஆர்கெஸ்ட்ராவில் இசையமைக்கத் தொடங்கி விட்டார். எம்.எஸ். விஸ்வநாதன், விஜய பாஸ்கர், இளையராஜா உள்ளிட்ட இசை ஜாம்பவான்களிடம் உதவியாளராக பணியாற்றி வந்த ரஹ்மான் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.

தொட்டதெல்லாம் ஹிட்

கவிதையில் புரட்சி செய்த பாரதியாரை போல இசையில் புதிய புரட்சியை நடத்தினார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். காதல் பாடல்கள் என்றாலும், கானா பாடல்கள் என்றாலும், ஏ.ஆர். ரஹ்மான் கிளாஸ் மற்றும் மாஸ் கலந்து இசையமைத்து வேற லெவல் ஹிட் ஆல்பங்களை போட்டுக் குவிக்க தமிழ் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின.

ஆஸ்கர் நாயகன்

ஒரு ஆஸ்கரையாவது இந்தியர்கள் பெற்று விட மாட்டார்களா? இந்திய படம் ஆஸ்கர் போட்டியில் இறுதி சுற்றுக்காவது சென்று விடாதா? என ஒவ்வொரு ஆண்டும் கனவு கண்டு கொண்டிருக்கும் நிலையில், 2008ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் எனும் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவின் ஆஸ்கர் நாயகனாக மாறினார் ஏ.ஆர். ரஹ்மான்.

பொன்னியின் செல்வன் இசைக்கு வெயிட்டிங்

சியான் விக்ரமின் கோப்ரா, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் சிம்புவின் வெந்து தணிந்தது காடு, ஷங்கரின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் என இப்போதும் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் படு பிசியாக பணியாற்றி வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான். சமீபத்தில் வெளியான கீர்த்தி சனோனின் மிமி படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த அத்தனை பாடல்களும் வேற லெவல் ஹிட் அடித்தன.

தனுஷின் இந்தி படமான அட்ரங்கி ரேவின் இறுதியில் எ ஃபிலிம் பை ஏ.ஆர். ரஹ்மான் வருவதை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மிதந்தனர்.

இசையை தாண்டி இயக்கம், தயாரிப்பு உள்ளிட்ட பணிகளிலும் கவனம் செலுத்தி வரும் ஏ.ஆர். ரஹ்மான் இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு ரசிகர்களின் பேராசை! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏ.ஆர். ரஹ்மான் சார்!

 

Exit mobile version