Site icon ilakkiyainfo

மேதகு மோடிக்கு கீழ்தகு தமிழ் அரசியல்வாதிகளின் கடிதம்

ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து இந்திய தலைமை அமைச்சர் திரு மோடி அவர்களுக்கு 2022-01-11-ம் திகதி அனுப்பிய கடிதத்தினை கொழும்பில் இருந்து வெளிவரும் Daily Mirror நாளிதழ் அனுப்ப முதலே அம்பலப் படுத்தியுள்ளது.

அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திரு சம்பந்தர், தமிழரசுக் கட்சியின் சார்பில் திரு மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலைக் கழகம் சார்பில் திரு செல்வம் அடைக்கலநாதன், மக்களாட்சி மக்கள் விடுதலை முன்னணி சார்பில் திரு த சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் சார்பில் சிறிகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

கடிதம் பகிரங்கப்படுத்தப் பட்டமை தமிழ் அரசியல்வாதிகளிடையே காட்டிக் கொடுப்போர் உள்ளனர் என்பதையும் அவர்களது கீழான நிலையையும் அம்பலப்படுத்துகின்றது.

இந்திய உத்தரவின் படி இந்தியாவிடம் கோரிக்கை

1987-ம் ஆண்டு செய்யப்பட்ட இலங்கை இந்திய அமைதி உடன்பாட்டின் படி இலங்கை அரசியலமைப்பு யாப்பிற்கான 13வது திருத்தத்தையும் மாகாணசபைச் சட்டத்தையும் அப்போது எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் போராளி அமைப்புக்களும் அவை தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வு அல்ல என நிராகரித்திருந்தன.

அதை ஓரளவிற்காகவது நடைமுறைப்படுத்த 26 ஆண்டுகள் எடுத்தன. வடக்கிலும் கிழக்கிலும் மாகாண சபை முதல்வராக இருந்தவர்கள் அதனால் தமிழர்களுக்கு பயனில்லை எனக் கூறியிருந்தனர்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பு யாப்பின் கீழ் 13ஐ முழுமையாக நிறைவேற்றும் சாத்தியம் இல்லை என்பதை இரண்டு தடவைகள் இலங்கை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

இந்தச் சூழலில் 13ஐ முழுமையாக நிறைவேற்றும் படி இந்தியா விடுத்த உத்தரவின் படி இந்தியாவுடம் கோரிக்கை வைப்பது எழு தமிழ் கட்சிகளின் கீழான நிலையை எடுத்தியம்புகின்றது.

தும்புக்கட்டால் தொடமாட்டேன் என்றவருக்கு Suitcase?

தமிழ் கட்சிகளை கடந்த இரு ஆண்டுகளாக சந்தித்த இந்திய அரசுறவியலாளர்களும் (Diplomats) இந்திய அரசியல்வாதிகளும் எல்லா ஈழத் தமிழ்கட்சிகளும் ஒன்று பட்டு 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இந்தியா ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியாவிடம் முன் வைக்க வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் உத்தரவிட்டிருந்தனர்.

நேற்று வரை தமிழ்த்தேசியக் கூட்டமைபின் தலைவர் திரு சம்பந்தன் 13வது திருத்தத்தை தும்புக்கட்டால் (துடைப்பக்கட்டை) கூட தொட மாட்டென் எனச் சொல்லிக் கொண்டிருந்தார்.

2021 டிசம்பரில் இருந்து ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் இந்தியாவிற்கு எல்லாக் கட்சிகளும் இணைந்து ஒரு கடிதம் அனுப்ப வேண்டும் என்ற முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டது. அவர்களுடன் இணைய தமிழரசுக் கட்சி மறுத்து வந்தது.

ரெலோ முன்னடுப்பதால் அதன் தலைமையில் செயற்பட தமிழரசுக் கட்சி செயற்பட மறுப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன.

திரு சுமந்திரன் அமெரிக்கா சென்று உரையாடல் நடத்தியமைக்கு போட்டியாக ரெலோ அமைப்பினர் ஒரு நாடகம் அரங்கேற்றி தங்களை மக்களிடையே பிரபலப்படுத்த முயற்ச்சிக்கின்றார்கள் எனவும் சிலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.

சட்ட அறிவும் பட்டறிவும் உள்ள விக்கி ஐயா

மாகாண சபையின் அதிகாரங்களைப் பற்றி புரிந்து கொள்ளக் கூடிய சட்ட அறிவும் அதில் முதலமைச்சராக இருந்த படியால்  நடைமுறையில் அதற்கு இருக்கும் சிக்கல்கள் பற்றியும் பட்டறிவும் உள்ளவர் விக்கினேஸ்வரன் ஐயா.

அவர் மேதகு மோடியைச் சந்தித்த போது பதின்மூன்றாக திருத்தம் தீர்வாகாது என எடுத்து உரைத்தவர் அவர்.

அவரும் அத்திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றும் படி கோருக் கடிதத்தில் கையொப்பமிட்டமை ஆச்சரியம்ம் அளிக்கின்றது.

2007-2009இல் இனக்கொலை நடந்த போது உறக்க நிலையில் இருந்த விக்கி ஐயா அரசியலுக்கு வந்தவுடன் அவர் குங்குமப் பொட்டு இட்டிருப்பதாலும் சித்தார் வாசிக்கக்கூடியவராக இருப்பதாலும் அவர் நம்மவர் என ஒரு வட இந்திய ஊடகம் எழுதி இருந்தது. அதன் தாற்பரியம் இப்போது புரிகின்றது. சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தீர் ஐயா!

கடிதத்தில் உள்ளவற்றில் கவனிக்கப்பட வேண்டியவை:

  1. இந்தியா 40 ஆண்டுகளாக தமிழர்களின் பிரச்சனைக்கு நீதியானதும் நிரந்தரமானதுமான தீர்வுகாண சுறுறுப்பாக செயற்பட்டு வருகின்றது. – பந்தி-2
  2. 13வது திருத்தம் ஒற்றையாட்சியின் கீழ் அறிமுகப்படுத்தப் பட்டமையினால் அதிகாரப்பரவலாக்கம் செய்யப்படவில்லை. மாறாக பணிப்பரவலாக்கம்தான் செய்யப்பட்டது. – பந்தி-3
  3. இணைப்பாட்சி கட்டமைப்பை நோக்கி நகரும் முயற்ச்சிகள் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டன – பந்தி 4

இவற்றைத் தொடர்ந்து 13இலும் அதிக அதிகாரம் கொண்ட தீர்வுக்கு எடுத்த முயற்ச்சிகள் கடிதத்தில் அடுக்கிச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியா அவ்வப்போது வெளிவிட்ட கருத்துக்களும் அடங்கியுள்ளன.

கடிதத்தில் 13-03-2015இல் இலங்கை நாடாளுமன்றத்தில் திரு மோடி உரையாற்றும் போது சொன்ன பச்சைப் பொய்யும் உள்ளது:

திரு மோடி தொடர்ச்சியாக மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறித்துக் கொண்டிருக்கின்றார். முக்கியமாக இந்தியக் குடியரசின் அரசியலமைப்பு யாப்பின் 370து பிரிவினை அவரது அரசி நீக்கி கஷ்மீர் மக்கள் 70 ஆண்டுகளாக வைத்திருந்த அதிகாரத்தைப் பறித்துள்ளார். அவர் மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் முடிவுகளை எடுப்பவர்.

பல வரலாற்று நிகழ்வுகளை அடுக்கிச் சொல்லுதல் தமிழ் அரசியல்வாதிகள் வழமையாக வைக்கும் ஒப்பாரியாகும். அந்த ஒப்பாரியை திரு மோடிக்கு எழுதிய கடிதத்திலும் உள்ளடக்கியுள்ளனர். அவர்கள் மோடியிடம் வைக்கும் ஒட்டு மொத்தக் கோரிக்கையும் ஒரு பந்தியில் அடங்கியுள்ளது:

 

 

இத்தகைய சூழலில் இலங்கை அரசிடம் அதன் வாக்குறுதிகளை காப்பாற்றும் படி வலியுறுத்துமாறு மேதகு தங்களைக் கோருகின்றோம்:

தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்ட பிரிக்கப்பட முடியாத நாட்டில் தன்மானத்துடனும், தன்-மரியாதையுடனும், அமைதியாகவும் பதுகாப்பாகவும் தங்கள் வரலாற்று அடிப்படையிலான வாழ்விடத்தில் வாழ்வதற்கும் தங்கள் உரிமைகளையும் தன்-முடிபுகளையும் (சுயநிர்ணய உரிமை) செயற்படுத்துவதற்கு 1987இல் இருந்து எல்லா அரசின் பிரிவினரும் செய்த வாக்குறுதிகளின்படி 13-ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தவும்.

கடிதத்தின் பின்னிணைப்பாக அவசரமாக கருத்தில் கொள்ள வேண்டிய ஏழு அம்சக் கோரிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளன:

1 13திருத்தமும் மாகாண சபையும்

  1. மொழி உரிமையும் 16-ம் திருத்தமும்
  2. குடிப்பரம்பல், காணி அபகரிப்பு, எல்லை மாற்றம்
  3. குடியுரிமையும் சமத்துவமும்
  4. பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைதியாகவுள்ளோர்
  5. தேர்தல் சீர் திருத்தம்
  6. ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் எண்ணக்கரு

உண்மையில் பார்க்கப் போனால் கடிதத்தில் உள்ளவற்றிலும் பார்க்க பின்னிணைப்பில் உள்ளவைதான் தமிழ் மக்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றது.

ஒற்றையாட்சிக்குள் இவை எதுவும் நிறைவேற்றப் பட முடியாது. இலங்கை அரசியலமைப்பு யாப்பின் 20-திருத்தம் 13வது திருத்தத்தையும் மாகாணசபைச் சட்டத்தையும் வழுவிழக்கச் செய்து விட்டது.

2003-ம் ஆண்டு மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை எனவும் 2006-ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்தவை செல்லுபடியற்றது என்றும் இலங்கை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 13-ம் திருத்தத்தை செல்லாக் காசாக்கிவிட்டது.

கடிதத்தில் விடுபட்டவை.

  1. 2009-ம் ஆண்டு முடிவடைந்த இனவழிப்பு போரிற்கு சிங்களத்திற்கு சார்பான இந்தியாவின் பங்களிப்பு தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது.
  2. 2009-ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கழகத்தில் ஐரோப்பிய ஒன்றியம் போரின் போது இலங்கைப் படையினர் மனித உரிமைகள் மீறியமையைக் கண்டிக்க கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கையை பாராட்டும் தீர்மானமாக இந்தியா மாற்றியமை தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது.
  3. இலங்கை அரசு தமிழர்கள் தொடர்பாக இந்தியாவிடம் கொடுத்த வாக்குறுதிகளை தொடர்ச்சியாக மீறுகின்ற போதிலும் இலங்கையுடன் இந்தியா நல்ல உறவை வளர்ப்பதாக இந்தியா சொல்லிக் கொண்டிருப்பது தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது.
  4. இலங்கைப் போர்க்குற்றவாளிகளை/இனக்கொலையாளிகளை பன்னாட்டு சட்டங்கள் முன்னிறுத்தி தண்டிப்பதற்கு இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு தடையாக இருப்பது தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது

தமிழர்களிடையே உள்ள இந்த விரக்திகளை சீனர்கள் தமக்கு சாதகமாக்கி தமிழர்களை இந்தியாவிற்கு எதிராகத் திருப்பி தமிழர் நிலங்களில் சீனாவின் கேந்திரோபாய நிலைகளை அமைக்கும் அபாயம் உள்ளது.

இவற்றை மேற்கூறிய ஏழு கட்சியினரும் தமது கடிதத்தில் உள்ளடக்கத் தவறியமை அவர்களது அரசுறவியில் அறிவின்மையைச் சுட்டிக் காட்டுகின்றது. அவர்கள் இந்தியாவிடம் ஒரு மண்டியிடுகின்ற நிலையிலேயே தம் கடிதத்தை வரைந்துள்ளனர்.

கடிதத்தில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஒரே ஒரு வழி நாட்டைப் பிரிப்பதுதான்.

கடிதத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்:

 https://www.dailymirror.lk/recomended-news/Seven-Tamil-Parties-Seek-Modis-Help-for-Implementing-13-A-in-Full/277-228622

 

 

Exit mobile version